12/09/2014

| |

முஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிகளின் முடிவு சரியானதா

Nawas Sawfi
நவாஸ் சௌபி

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவினை எடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் ஒரு முடிவில்லாமல் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. இருந்தும் இதுவரை ஓரிரு பேச்சுவார்த்தைகள் மஹிந்த தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்டாலும் அது எவையும் இன்னும் ஒரு முடிவினை எட்டும்படியாக இல்லாமல் முஸ்லிம் காங்கிரஸை இன்னும் நிதானிக்கவே செய்திருக்கிறது.

முஸ்லிம் மக்களின் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களும் கொந்தளிப்பான மனநிலைகளும் மஹிந்தவுக்கு எதிராக இருந்தும் அந்த கொந்தளிப்பை சாதகமாக்கி தங்கள் முடிவினை மைத்திரியை ஆதரிப்பதாக எடுக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் நிதானிப்பதிலுள்ள நியாயங்கள் என்ன என்பதில் கட்சி முன்வைக்கும் கோரிக்கைகளும் உடன்படிக்கைகளும் எவை? அவற்றை அடைந்துகொள்ள இந்த சந்தர்ப்பம் எந்தளவு சாத்தியமானது? என்ற அபிப்பிராயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

இதில் பொதுவேட்பாளரான மைத்திரியை ஆதரிப்பதில் அவருடன் பேரம் பேசி தேர்தலுக்கு முன்பாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக எதுவுமில்லை எதுவானாலும் உடன்படிக்கை மூலமே அவருடன் இணைய முடியும். ஆனால் மஹிந்தவைப் பொறுத்தவரை தேர்தலுக்கிடையில் பெற்றுக்கொள்ள வாய்ப்பான விடயங்கள் அதிகம் இருப்பதனால் அவருடன் பேரம் பேசி அவரது முடிவினை தெரிந்த பின் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற எதிர்பார்ப்பில் முஸ்லிம் காங்கிரஸ் அரச தரப்பான மஹிந்தவை தங்கள் கோரிக்கைகளை ஏற்ககூடிய ஒரு இணக்கத்திற்கு கொண்டுவர முடியுமா? என அவசரப்படாமல் அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி கொண்டிருப்பதும் புரிகிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை மஹிந்தவிடம் முடிந்தவரை பெற்றுக்கொள்ள எத்தனிக்கிறது என்பதுதான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுப்பதில் கொண்டுள்ள தாமதம் என்று இதனை நாம் அவசியமான ஒரு சந்தர்ப்பமாகக் கருதி நியாயம் காணலாம்.

இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கின்ற மிக முக்கியமான ஒரு கோரிக்கையாக கரையோர மாவட்டக் கோரிக்கை இருக்கிறது. கரையோர மாவட்டத்தை முடிந்தவரை மஹிந்தவிடம் பேரம் பேசி இச்சந்தர்ப்பத்தில் அதனை பேச்சளவிலும் எழுத்தளவிலும் இல்லாமல் உடனடியாக அமுல்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுவிடாப்பிடியாக முஸ்லிம் காங்கிரஸ் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்து அதற்காக மஹிந்தவின் தலை எவ்வாறு அசைகிறது எனக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் கரையோர மாவட்டத்தை தரமுடியும் அல்லது முடியாது என்று ஏதாவது ஒரு முடிவை மஹிந்த தன் வாயினால் நேரடியாகவும் பகிரங்கமாகவும் சொல்ல வேண்டும் என்பது முஸ்லிம் காங்கிரஸின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனை அவர் உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் பட்டசத்தில் அரசிலிருந்து வெளி ஏறுவதற்கு தகுந்த ஆதராம் அதுவாகிப் போகும் என்ற மன ஆறுதல் முஸ்லிம் காங்கிரஸ{க்கும் அதன் தலைமைக்கும் கிடைத்துவிடும். மாததிரமல்லாமல் கரையோர மாவட்டம் என்ற கோரிக்கைக்கு மஹிந்தவின் பதில் என்ன என்று அறியாமலே அரசிலிருந்து வெளியேறினால் அதனை ஒரு காரணமாக வைத்து பின்னர் மஹிந்த “நாங்கள் கரையோர மவாட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் கேட்டபடி கொடுப்பதாகவே இருந்தோம் ஆனால் அவர்கள்தான் அதன் முடிவைக் கேட்காமலே எதிர் தரப்பிற்கு சென்றுவிட்டார்கள்” என்று முஸ்லிம் காங்கிரஸ் மீது பழி போடக்கூடும். அந்தப் பழியிலிந்து தப்பித்துக் கொள்வதற்கும் மஹிந்த கரையோர மாவட்டம் தொடர்பாக தனது இறுதி முடிவை அறிவிக்கும்வரை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முடிவுக்கும் வராது அரசை விட்டும் விலகாது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவளிப்பதற்கு கரையோர மாவட்டத்தை வைத்து முடிவெடுப்பதில் எந்தளவு சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு எண்ணி இருக்கிறது என்பதுதான் இங்கு தெளிவு காணவேண்டிய விடயமாகும்.

ஏனெனில் தேர்தல் காலத்தில் ஏற்படுத்தப்படுகின்ற உடன்படிக்கைகள் வாக்குறுதிகள் எந்தளவு நிறைவேற்றப்படும் என்பதற்கு கடந்தகால அனுபவங்கள் பல இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கரையோர மாவட்டம் தொடர்பாக கடந்த 2002 ரணில் ஊடாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அதைபோன்று 2010 இல் கிழக்கு மாகாணசபை அமைப்பதில் மஹிந்தவுடன் ஏற்படுத்திய உடன்படிக்கை எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் அடுத்த ஒரு சந்தர்ப்பமாக நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு கரையோர மாவட்டக் கோரிக்கையை உடன்படிக்கையாக எழுதிக் கொள்வதில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பது அரசியலிலுள்ள சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

எனவே முஸ்லிம் காங்கிரஸ{ம் உடன்படிக்கையாக இல்லாமல் உடனடியாக இதை நிறைவேற்றி கையில் எடுக்கவே முயற்சிக்கிறது என்று அதன் நிதானத்தில் தெரிகிறது. ஆனாலும் இதனை மஹிந்தவினால் எப்படி உடனடியாக நிறைவேற்ற முடியும். இன்று பொதுவேட்பாளராக தனது ஆட்சியிலும் தனது கட்சியிலும் செயற்பட்ட மைத்திரி 34 கட்சிகளின் உடன்பாட்டுடன் மஹிந்தவுக்கு ஆதரவான வாக்குகளையும் சேர்த்து தன் பக்கம் ஈர்த்துள்ள நிலையில் கரையோர மாவட்டத்தை எப்படி முஸ்லிம் வாக்குகளுக்காக மஹிந்த உடனடியாக நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியும்.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் உடனடியாக நிறைவேற்றும்படி விடுக்கும் கரையோர மாவட்டக் கோரிக்கையை  எப்படியும் மஹிந்தவினால் நிறைவேற்ற முடியாமலே போகும். காரணம் இதனால் சிங்கள வாக்குகளை அவர் மேலும் பெரிதளவாக இழக்கும் நிலை ஏற்படும். அதற்கான பிரச்சாரங்களை எதிர்தரப்பினர் தேர்தல் இலாபம் கருதி செய்யக் கூடும். எனவே இந்த ஆபத்தை உணரும் மஹிந்த கரையோர மாரட்டத்தினை உடனே நிறைவேற்றுவார் என்பது எப்படியும் சாத்தியமில்லாத ஒன்று. அத்துடன் கரையோர மாவட்டத்தை உடனடியாகக் கொடுத்தாலும் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் அதற்காக மஹிந்தவுக்கு வாக்களிப்பார்களா? என்ற சந்தேகம் இதில் இருக்கிறது. அதாவது மஹிந்த இத்தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் அவருக்கு வாக்களிக்கும் மனநிலை முஸ்லிம் மக்களிடத்தில் இருக்கிறதா? என்பதும் இன்னும் சந்தேகமானதே.

மேலும் கரையோர மாவட்டம் பெறுவது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் ஒரு தீர்வாகும் என கிழக்கிற்கு வெளியே உள்ள ஏனைய முஸ்லிம் மக்கள் கருதிக்கொண்டால் கரையோர மாட்டத்தினைப் பெறுவதனால் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அதற்காக வாக்களிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸினால் எப்படிக் கேட்டுக் கொள்ள முடியும்.

எனவே கரையோர மாவட்டத்தை உடனடியாக வழங்குவதில் மஹிந்த வாக்கு கணக்குகளை இட்டுப் பார்த்தால் அளிக்கப்படாத முஸ்லிம் வாக்குகளை நம்பி அளிக்க இருக்கின்ற சிங்கள வாக்குகளை இழக்க முடியாது என்றுதான் ஒரு முடிவுக்கு வருவார்.

அத்துடன் இதனை கருத்தில் வைத்துக் கொண்டு கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு உடன்படிக்கை செய்வதுகூட தனக்கு ஆபத்தாகலாம் என நினைத்து உடன்படிக்கையைக் கூட செய்யாது போகலாம். அதற்கு ஆதாரமாகத்தான் தற்காலிக நிவாரணமாக அம்பாறை மாவட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் நியமனம் ஒன்று  அவசரமாக செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸ{க்கான முதலமைச்சர் பதவியையும் கிழக்கு மாகாண சபையில் உடனடியாக ஏற்;படுத்திக் கொடுக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது இவையே இப்போது மஹிந்தவிடம் உள்ள தீர்வாகக் காணலாம். இதற்கு மேலதிகமாக தேசியப் பட்டியல், பிரதி அமைச்சுக்கள் என்ற அரசியல் பதவிகளையும், தூதுவர்கள், நிறுவனத் தலைவர்கள் என்ற உயர் பதவிகளையும் பெறலாம்.

இதைவிடுத்து, மஹிந்தவினால் உடன்படிக்கை செய்யவும் உடனடியாக நிறைவேற்றவும் முடியாத கரையோர மாவட்டக் கோரிக்கையைக் கேட்டு அடம்பிடித்து அதை வைத்து தங்களது தேர்தல் முடிவினை எடுப்போம் என முஸ்லிம் காங்கிரஸ் இருப்பது எந்த வெற்றியையும் இது விடயத்தில் அளிக்காது.

இவ்வாறு எதிர்பார்த்து இறுதியில் மஹிந்த கரையோர மாவட்டத்தை உடனே நிறைவேற்ற முடியாது என அறிவித்தால் பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரிக்கும் முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்படும். அப்போது மைத்திரியிடம் இணைவதற்கு கரையோர மாவட்டக் கோரிக்கையை எவ்வாறு முன்வைப்பது. மஹிந்தவினால் தரமுடியாத கரையோர மாவட்டத்தினை மைத்திரியால் எவ்வாறு தரமுடியும். அவ்வாறு தருவதாக இருந்தாலும் மைத்திரியின் வெற்றியின் பின்புதான் அதனை உறுதிப்படுத்தலாம் அதுவரை இதனை ஒரு உடன்படிக்கையாகவே செய்ய முடியும். அப்போது ஏற்கனவே செய்த உடன்படிக்கைகள் போன்றே இதுவும் பத்துடன் பதினொன்றாக இருக்கும். ஏனெனில்  அது நிறைவேறும் என்பதில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.

மாத்திரமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்டக் கோரிக்கையை மஹிந்தவிடம் விடாப்பிடியாகக் கேட்டு அதனை வழங்க அவர் மறுத்ததன் காரணமாக இன்று மைத்திரியோடு இணைந்திருக்கிறார்கள். எனவே மைத்திரி இந்த நாட்டைத் துண்டாடி முஸ்லிம்களுக்கு தனியான அதிகார பகிர்வினை வழங்க உடன்படிக்கை செய்திருக்கிறார். எனவே சிங்கள மக்கள் மைத்திரிக்கு அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்த நாட்டைக் கூறுபோடும் சம்மதத்தை அளிக்கும் வாக்குகளாகும் என்று மஹிந்த தரப்பினர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மைத்திரிக்கு எதிராகச் செய்வார்கள்.

அப்போது சிங்கள மக்கள் இதை ஒரு பொருட்டாகக் கூறி தங்கள் வாக்குகளை நாட்டின் சுதந்திரத்தைக் காத்து சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆட்சியை செய்யும் மஹிந்தவை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க விரும்பி மஹிந்தவுக்கே அளித்தால், மஹிந்தவை தோற்கடித்து மைத்திரியின் ஆட்சியை உருவாக்க எதிர்பார்க்கும் பெரும்பான்மை முஸ்லிம்களின் புழப்பில் மண்ணைப் போட்ட கதையைத்தான் முஸ்லிம் காங்கிரஸ் கேட்க வேண்டும்.வழக்கம் போல மஹிந்தவுக்கு எதிரானவர்களின் பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் சென்று அவர்களைத் தோற்கடித்துவிடுகிறது என்ற மக்களின் சந்திக் கதைகளை மேலும் வலுப்படுத்துவதாகவே இதுவும் ஆகிவிடும்.

இதுதான் இங்குள்ள பிரச்சினை மஹிந்தவிடம் விடாப்பிடியாக கரையோர மாவட்டத்தை கேட்காமல் ஆரம்பத்தில் மைத்திரிக்கு ஆதரவளிக்கின்ற போது அது இத்தகைய விமர்சனங்களை உருவாக்காது மாறாக மஹிந்தவிடம் கரையோரத்தை கடுமையாக கேட்டு அதை அவர் மறுக்கின்ற போது அந்த ஆத்திரத்தில் எதிர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வருகின்ற போது அங்கு பிரச்சாரம் எதிராக மாறி அது மஹிந்தவுக்கான சிங்கள வாக்குகளை அதிகரிக்கச் செய்யும் ஆபத்து எதிர்விளைவாக உருவாக்கிவிடும்.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தல் சந்தர்ப்பத்தை வைத்து எப்படியாவது கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும் என முயற்சிப்பதில் உள்ள மாற்று யோசனைகள் இவைதான். இங்கு கரையோர மாவட்டக் கோரிக்கை இந்த தேர்தலுக்கு ஒரு கோரிக்கையாக முன்வைக்கப்படுவதில் முஸ்லிம் காங்கிரஸ் தன்னை ஒரு சமூகக் கட்சியாகக் காட்டிக் கொள்வதைத் தவிர வேறு பலன் எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

எனவே மக்களின் கொந்தளிப்பும் உணர்ச்சி பூர்வமான முடிவுகளும் ஒருபுறமிருக்க முஸ்லிம் காங்கிரஸ் தான் நிதானித்த இடத்;திலிருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் அந்த முடிவு தற்போது மக்களுக்குப் பிழை என்று பட்டாலும் பின்னர் உரிய நேரத்தில் அதுவே சரியான முடிவு  எனக் கூறும்படியாக ஒரு முடிவினை எடுப்பதே அவசியமானது. ஏனெனில் மக்களுக்கு இப்போது சரி என்றுபடுகின்ற ஒரு முடிவு பின்னர் பிழை என்று புரியும்படி ஆகிவிடக் கூடாது.

அதாவது முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் ஆட்சியில் வெறுப்பாக உள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவை ஆதரிக்கின்ற முடிவினை எடுத்தால் அதனை மக்கள் இப்போது பிழை என்று கருதினாலும் பின்னர் அது சரியான ஒரு முடிவுதான் என்று கூறும் சூழ்நிலை உருவாகலாம். ஆனால் மக்கள் இன்றுள்ள கொதிப்பான நிலையில் மைத்திரியை ஆதரிக்கும் முடிவினை எடுத்தால் இன்று அது மக்களுக்கு சரியான முடிவாக இருந்தாலும் அது நாளை ஒரு பிழையான முடிவாகும் சூழ்நிலையும் இருக்கிறது. இதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்தமையை உதாரணமாக வைக்கலாம்.

மேலும் அளுத்கம சம்பவத்தின் போது மக்கள் ஆகவும் ஆவேசம் கொண்டு இதைவிடவும் மேலான கொந்தளிப்புகளுடன் முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் எனக் கூறியும், அந்த கொந்தளிப்புகளை கருத்தில் எடுக்காமல் இன்றுவரை மஹிந்த அரசில் இருந்துவந்தார். இதனை எதிர் அரசிய்வாதிகள் சுட்டிக்காட்டிய போது அதற்கு பதளித்து அதிகமான இடங்களில் ஹக்கீம் பேசும் போது எங்களை ஆசுவாசப்படுத்தி அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி அரசுக்கும் எங்களுக்குமான உறவை கெடுத்து அதில் இலாபமடைய சில சாதிகாரர்கள் எத்தனிக்கிறார்கள் என்ற நியாயத்தைப் பேசி  தனது இருப்பை கலங்கமில்லாமல் காத்துவந்தார்.

இவ்வாறு அளுத்கம சம்பவத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கொந்தளிப்புக்கே அஞ்சாமல் அரசுடன் இதுவரை இருந்துவந்த ஹக்கீம் கரையோர மாவட்டம் இல்லை என்று மஹிந்த சொல்வதற்காக அதை ஒரு கொந்தளிப்பாக்கி அரசுக்கு எதிராக வருவது எந்தவகையில் நியாயமாகும்.

இத்தேர்தலில் நடுநிலை வகிப்பதற்கு முடியாமல் ஏதோ ஒரு பக்கம் சார்ந்துதான் போக வேண்டும் என்ற கட்டாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டுமானால் இதனை இன்னமும் வைத்து பிசைந்து கொண்டிருக்காமல் சரியோ பிழையோ இதுவரைகாலமும் மஹிந்தவின் ஆட்சியில்  இணைந்திருந்தது போல் இந்த தேர்தலையும் அவருடன் இருந்து முடித்துக் கொண்டு அதன் பலாபலன்களை தேர்தலுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம் என்ற ஒரு முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை.
முழுதாக நணைந்த பின் முக்காடு எதற்கு என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் மஹிந்தவை ஆதரிப்பதற்கு முடிவெடுத்து மஹிந்த தோற்றால், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் வேட்பாளர் தோற்றுப் போவது வழக்கம் என்ற ஐதீகப்படி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய நன்மை முஸ்லிம் காங்கிரஸ{க்கு கிடைத்துவிடும். மாறாக மஹிந்த வென்றால் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றிய நன்மை கிட்டிவிடும்.

இதில் இன்னுமொரு பாரிய நன்மை இருக்கிறது மஹிந்தவுக்கு ஆதரவளித்து மைத்திரி வென்றாலும் அதில் பெரிய ஆபத்து எதுவும் இருக்காது எதிர்காலத்தில் அந்த ஆட்சியில் எதையும் செய்து கொள்ள முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. மாறாக மைத்திரிக்கு ஆதரவளித்து மஹிந்த வெற்றி பெற்றால் அது தவிர்க்க முடியாத ஆபத்தாகவே ஆகிவிடும் மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்ய முடியாது போகலாம். இதில் உள்ள நிர்ப்பந்தம் என்னவென்றால் மஹிந்த தோற்றுப்பானாலும் அவருக்கு ஆதரவளித்து நிற்பது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ{க்கும் மறைமுகமான ஒரு வெற்றியாகவே இருக்கும்.

ஏனென்றால் மைத்திரியின் வெற்றிக்கு பெரும்பான்மையான முஸ்லிம்களின் வாக்குகளும் அவருடன் ஏனைய முஸ்லிம் தரப்புகளும் இருப்பதனால் மைத்திரியின் வெற்றியில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை என்றாலும் அதன் விளைவு பெரிதாக இருக்காது. மாறாக முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமாக மஹிந்தவுக்கு அளிக்கப்படாத நிலையில் அவரது வெற்றியோடு முஸ்லிம் காங்கிரஸ{ம் துணை நிட்காதுபோனால் அதன் ஆபத்தும் விளைவும் கடுமையாகவே இருக்கும் இதற்கு காலமே பதில் சொல்லும்.

எனவே கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டாலும் முஸ்லிம் மக்களை கரை சேர்ப்பதற்காகவேனும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவை ஆதரிப்பது மக்களின் விருப்பத்துக்கு அப்பாலேனும் எடுக்க வேண்டிய ஒரு முடிவாக அமையும். அதிலும் இத்தேர்தலில் மஹிந்த தோற்றுப் போவாரா? என்கிற அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது மஹிந்தவின் தோல்வி மிக இலகுவானது அல்ல என்பதையும்  மஹிந்தவுக்கு எதிரான முஸ்லிம் மக்களின் அபிப்பிராயங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டும்.
நன்றி *ஜப்னா முஸ்லிம் இணையம்