2/17/2015

| |

நல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்கைகள் ஆரம்பம்!

2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவாகி, அவர் அவசர அவசரமாக ஐக்கிய தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக பிரதமராக நியமித்து, ரணில் தனக்கென ஒரு மந்திரிசபையையும் நியமித்து, ஒரு அரசாங்கத்தையும் அமைத்த பின்னர், நாடு ஜனநாயக விரோத – அழிவுப் பாதையில் வேகமாகச் செல்வதைக் காண முடிகிறது.
புதிய ஜனாதிபதியின் முதலாவது ஜனநாயக விரோதச் செயல்பாடு, ஏற்கெனவே பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்க, அந்த அரசாங்கத்தைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதுவும் புதிய ஜனாதிபதியின் சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இருக்கத்தக்கதாக, பாராளுமன்றத்தில் மிகச் சிறுபான்மையாக இருந்த ஐ.தே.கவின் ஆட்சியை அமைக்க ஏற்பாடு செய்தது, மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயக மரபை மீறியது மட்டுமின்றி, தனது சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைத்ததும் ஆகும்.
மறுபக்கத்தில் ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசிக்கொண்டு, உலக ஜனநாயக கட்சிகளின் அமைப்பிலும் அங்கம் வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க, பதவிக்கு ஆசைப்பட்டு அல்லது சர்வதேச எஜமானர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக அல்லது இரண்டுக்குமாக பிரதம மந்திரிப் பதவியை ஏற்றதின் மூலம் ஜனநாயகத்தை பெரும் கேலிக்கூத்தாகியுள்ளார்.
இந்த இருவரும்தான், அதாவது புதிய ஜனாதிபதியும் பிரதமரும் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தாம் தேர்தலில் வென்றால் 100 நாட்களுக்குள் சர்வாதிகாரத்தனமான நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக மக்கள் முன் சென்று பிரச்சாரம் செய்தவர்கள். ஆனால் அவர்களே தேர்தல் நடந்து 48 மணித்தியாலங்களுக்குள் அதே நிறைவேற்று அதிகார முறையை ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டுவதற்காகப் பிரயோகித்துள்ளனர்.
அதுமாத்திரமல்ல, முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை முன்னைய அரசு நீக்கியதில் பலருக்குக் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், அவர் மீது சட்டவழியில் பாராளுமன்றத்தில் தகுதியீனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டே பதவி இழந்தார். ஆனால் நாட்டின் அதியுயர் இறைமையுள்ள நிறுவனமான பாராளுமன்றத்தைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் அதே நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அவர் மீண்டும் பிரதம நீதியரசர் ஆக்கப்பட்டார். இதேபோலத்தான் புதிய பிரதம நீதியரசராக சிறீபவனை நியமிப்பதற்கு முன்னர், பதவியில் இருந்த நீதியரசர் மொகான் பீரிஸ் அவர்களை சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றாது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தனமாகப் பதவி நீக்கம் செய்ததின் மூலம் புதிய அரசு நீதித்துறையை கேலிக்கூத்தாக்கி உள்ளது.
அதேபோல முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவின் பதவிகள், பதக்கங்கள் பறிக்கப்பட்ட விடயத்திலும் பலருக்கு கருத்து வித்தியாசம் இருந்தபோதிலும், இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைப்படியே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவர் விடயத்திலும் சட்டபூர்வமான வழிமுறைகளை நாடாது நிறைவேற்று அதிகாரத்தின் மூலமே இழப்பீடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இவற்றைப் பார்க்கும்போது புதிய ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்த “நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம்” என்ற வாக்குறுதி வெறும் ஏமாற்றுப் பேச்சா? என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்படுவது இயல்பானது.
இது ஒருபுறமிருக்க, இது ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதை, 225 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் உள்நாட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க மீது எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 114 பேர் கையெழுத்து இட்டதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அத்துடன் பாராளுமன்றம் எந்த நேரமும் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் ஒன்று நடாத்தப்படலாம் என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுவதால், இந்த அரசாங்கம் ஒரு தற்காலிக காபந்து அரசாங்கம் என்பதும் உறுதிப்பட்டுள்ளது.
பொதுவாக காபந்து அரசாங்கங்கள் நாட்டின் பிரதான விடயங்களில் முடிவு எடுக்கும் வழமை நடைமுறையில் இல்லை. அப்படியிருக்க, பல முக்கியமான விடயங்களில் இந்த தற்காலிக சிறுபான்மை அரசாங்கம் தன்னிச்சையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பல அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிதி நிறுவனங்கள், ஊடக அமைப்புகள், பொலிஸ் மற்றும் முப்படைகள், மாகாண ஆளுநர்கள், மாகாணசபைச் செயலாளர்கள், வெளிநாட்டு இராஜதந்திரச் சேவை போன்ற பல துறைகளில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நெருக்கடியான நேரங்களில் தன்னலமற்ற உதவிகள் செய்து வந்த, உலகப் பொருளாதாரத்திலும் வலிமையிலும் மிக வேகமாக முன்னேறிச் செல்லும் சீனாவுடனான ஒப்பந்தங்களைப் பற்றி அவதூறு பரப்பி அந்த நாட்டை அவமானப்படுத்தவும், பகைக்கவும் இன்றைய ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க அரசு முயற்சிக்கிறது.
தேர்தல் நடைபெற்று முடிந்த நாளிலிருந்து முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தவர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களையும் ஐ.தே.க காடையர்கள் தாக்குவதும், அரசாங்கமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடைபெறுகின்றது. கடந்த 20 வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதவியில் இருந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்கள் எனப் பல நடந்தபோதும், தொடர்ந்து தோல்வியைத் தழுவிவந்த ஐ.தே.கவினர் மீது இவ்வாறான தாக்குதல்களையோ, பழிவாங்கல்களையோ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1977இல் அரசியல் குள்ளநரியும் சகுனியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததும் எப்படி எதிர்க்கட்சிகளை அடித்து நொருக்கி முடமாக்கினாரோ, அதே அடிச்சுவட்டையே அவரது மருமகனும், இன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் செய்ய முயற்சிக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது.
போதாதிற்கு, விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் போட்டியிடாமல் தடுப்பதற்காக, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று நள்ளிரவில் மகிந்தவும் அவரது சகாக்களும் ‘இராணுவச்சதி’ ஒன்றுக்கு முயற்சித்தார்கள் என்ற பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், அவர்கள் பலர் மீது லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் முயற்சிக்கப்படுகிறது. அத்துடன் மகிந்தவும் அவரது குடும்பமும் ஈராக்கின் சதாம் ஹ_சேன் போல, லிபியாவின் கடாபி போல, எகிப்தின் முபாரக் போல ஆட்ம்பர வாழ்வு வாழ்ந்தார்கள்.
எனவும் அவர்கள் மீது பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அவர்களை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எல்லாம் ‘நல்லாட்சி’யின் பெயரால் நடைபெறுவதுதான் மிகவும் வேதனையானதும், வேடிக்கையானதுமான விடயம். இந்த அரசாங்கம் மகிந்தவின் அரசாங்கத்தை விட நல்லதொரு ஆட்சியை வழங்கும் என எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மிகக் குறுகிய நாட்களிலேயே திகைத்துப் போகும் அளவுக்கு அரசாங்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதன் காரணமாக தேர்தல் நடந்து ஒரு மாதம் கழியுமுன்னரே “தெரியத்தனமாகத் தவறு செய்துவிட்டோம்” என்ற மக்களின் முணுமுணுப்பைக் கேட்க முடிகிறது.
எனவே மக்கள்தான் இந்த விடயத்தில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். முதலாவது ஒரு தவறை நிவர்த்தி செய்ய இன்னொரு தவறு செய்வதை நிறுத்த வேண்டும். அதற்கு முன்னர் எங்கே தவறிழைத்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்பொழுது உள்ள ஒரே வழியும், பரிகாரமும் முன்னர் இழைத்த தவறைத் திருத்துவதற்கு அடுத்த பொதுத்தேர்தலை நன்கு பயன்படுத்துவதுதான். மக்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ அல்லது அன்றாடப் பிரச்சினைகளுக்கோ எந்தவிதமான தீர்வையும் முன்வைக்காத இன்றைய ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் தானும் ஆதரித்து, தமிழ்மக்களையும் ஆதரிக்க வைத்துத் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போட்டது குறித்து புதிதாக நாம் எதையும் கூறுவதற்கில்லை. ஏனெனில் நாய் வாலை ஒருபோதும் நிமிர்த்த முடியாது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
நன்றி *வானவில்