2/14/2015

| |

சந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தியைக் கண்டது – உதுமாலெப்பை

 கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தயவுடனே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய
காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண,
வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தகர்களுடனான விசேட கலந்துரையாடல் அட்டாளைச்சேனையில் நேற்று நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹாபீஸ் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 37 உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கிழக்கு மாகாண அபிவிருத்தி, இன ஒற்றுமைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி மூவின மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 மாகாண சபை உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 06 உறுப்பினர்களும் இணைந்து சத்தியக் கடதாசி ஊடாக வழங்கிய ஆதரவு காரணமாக கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.
சிறந்த அனுபவங்களைக் கொண்ட புதிய முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தை சிறந்த முறையில் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் எல்லா இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா அன்று தனது உயிரையும் துச்சமென நினைத்து குரல் கொடுத்தார். முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் மக்களால் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் அன்றைய சூழ்நிலையில் கிழக்கில் அறுந்து போயிருந்த இன உறவுகளையும், சமாதானத்தையும் உடனடியாக உருவாக்கும் தூர சிந்தனையில் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவும் தேசிய காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் 04 பேரும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கினோம். அவருடைய 04 வருட காலத்தில் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி, இன ஒற்றுமை ஆகியவற்றில் பாரிய வளர்ச்சியைக் கண்டது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடு தழுவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிபெற்று பிரதமர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் என்றுமில்லாத புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
100 நாட்கள் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதனால்தான் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு, அரசியல் அமைப்புக்களில் மாற்றங்கள் ஆகியவற்றை செயற்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்ற பலம் என்பவைகளை உருவாக்கி 06 ஆண்டுகளுக்கான நிலையான ஆட்சியினை நடத்தக் கூடிய பலம் எமக்குக் கிடைக்கும். எனவே, நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.