2/15/2015

| |

சிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதிமுக சார்பில் கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும்

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தமிழகம் வர ரகசியமாக திட்டமிட்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசுக்கு ஆதரவாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டது. 2014 மே மாதம் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, காங்கிரஸ் கூட்டணி அரசின் அநீதியான போக்கையே பின்பற்றி ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யத் தொடங்கியுள்ளது.
இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை அறிக்கை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதைப் போல ஒரு பொய் முகத்தை வெளி உலகுக்கு காட்டிக் கொண்டே, முந்தைய அரசின் இனவெறிப் போக்கை அப்படியே பின்பற்றி வருகிறார்.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஈழத் தமிழர்களின் பூர்விகத் தாயகம் என்பதை சிறீசேனா ஏற்கவில்லை. அங்கிருந்து ராணுவத்தை அகற்றவும், ஐ.நா. விசாரணையை ஏற்கவும் மறுத்துவிட்டார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் கூட்டாட்சிக்கு இடமில்லை என அறிவித்துள்ளார். எனவே, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்று இங்குள்ள யாரும் ஏமாற்ற வேண்டாம்.புதிய அதிபரான சிறீசேனா 1968-இல் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலும், பிறகு தமிழர்களுக்கு எதிரான ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியிலும் இணைந்து செயல்பட்டவர். முள்ளிவாய்க்கால் போரின்போது ராணுவத்துக்குக் கட்டளையிடும் பாதுகாப்பு அமைச்சாரக இருந்தவர்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் நிலைமை சீராகிவிட்டது என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே சிறீசேனா இந்தியா வருகிறார்.தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அவர், தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்து கோயிலுக்கும், சங்கர மடத்துக்கும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை மத்திய அரசு மிக ரகசியமாக வைத்திருப்பதாகவும் அறிகிறேன்.  இதுபோன்ற விபரீத வேலையில் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசை எச்சரிக்கிறேன். தமிழக எல்லையில் சிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதிமுக சார்பில் கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.