உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/24/2015

| |

வரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு!

Résultat de recherche d'images pour "மோடி"சில நாள்களுக்கு முன் தில்லியில் கூடிய ‘இந்திய வரலாற்றுப் பேராயம்‘ மிகுந்த வேதனையுடன், ‘ஏற்கனவே மெய்ப்பிக்கப்பட்டுள்ள வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் நோக்கில் யாரும் பேசவோ, செயல்படவோ வேண்டாம்‘ என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா முழுவதிலுமிருந்து அங்கு வந்து கூடிய 300க்கும் மேற்பட்ட  வரலாற்றுப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் நிறைந்திருந்த ஒரு பொதுக்குழுக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களின் வேதனைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரும், முதன்மையானவரும், நம் இந்தியப் பிரதமர் மோடி என்பதே மேலும் கவலைக்குரியதாய் உள்ளது. 25.10.2014 அன்று மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அறிவியலுக்கு முரணான, நகைப்புக்குரிய சில செய்திகளைப் பேசியுள்ளார்.
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் பாத்திரம், அன்றே ஜெனடிக் அறிவியல் வளர்ந்துள்ளது என்பதற்கான சாட்சி என்றும்.
இந்துக்கள் வணங்கும் விநாயகர் உருவம், அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் உரையாற்றி உள்ளார். யாரோ ஒரு மருத்துவர் யானையின் தலையையும், மனித உடலையும் ஒன்று சேர்த்து விநாயகர் உருவத்தை ஒட்டு அறுவை சிகிச்சை முறையில் உருவாக்கி உள்ளார் என்னும்  ‘தன் அரிய கண்டுபிடிப்பினை’ அவர் அங்கு வெளியிட்டுள்ளார்.
எதிரில் அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த திறன் வாய்ந்த மருத்துவர்கள் எவரும் இன்றுவரை வாயைத் திறக்கவே இல்லை. அதிகாரத்திற்கு முன் அறிவு எவ்வளவு பணிந்து செல்கிறது என்பதற்கு இதனைத் தாண்டிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் தேவை இல்லை.
மோடியின் கூற்று, அறிவியலை மட்டும் இழிவு படுத்தவில்லை. அவர் நம்புகிற இந்து மதத்தையும் சேர்த்தே இழிவு படுத்தியுள்ளது. எது எதற்கோ ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தும், சங் பரிவாரங்கள் இதற்குத்தான் முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க  வேண்டும். விநாயகர்தான்(கடவுள்) உலகைப்  படைத்தார் என்று நம்பும் இந்துக்களின் நம்பிக்கையை எல்லாம் தகர்த்துத் தவிடு பொடியாக்கி, விநாயகரையே ஒரு மருத்துவர்தான் படைத்தார் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் வேண்டும்!  விநாயகரின் உருவத்தை, ஒரு கடவுள் மறுப்பாளர் கூட இப்படிக் கேலி செய்ததில்லை.  
மோடியின் உரையை 01.11.2014 ஆம் நாள் தி இந்து ஆங்கில நாளேட்டில் கரன் தாப்பர் கண்டித்து எழுதியிருந்தார். மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை (சயிண்டிபிக் டெம்பர்) வளர்க்க வேண்டும் என்று கூறும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிக்கே பிரதமர் எதிராக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாற்றியிருந்தார்.
பிரதமர் மோடி அது குறித்தெல்லாம் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பல வரலாற்றுப் பிழையான செய்திகளை பல மேடைகளில் அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு, 2013 நவம்பரில் பாட்னாவில் பேசும்போது, அலெக்சாண்டர் பீகாரில், கங்கைக் கரையோரத்தில்தான் இறுதியாக மாண்டு போனார் என்று ஒரு செய்தியைக் கூறினார்.
மாசிடோனியாவின் மாமன்னன் அலெக்சாண்டர்   கி.மு.323இல், பாபிலோனில் இறந்தார் என்றுதான் உலகம் இதுவரையில் படித்திருக்கிறது. புதிய சரித்திரத்தை மோடி இப்போது எழுதுகின்றார். ஒரு வேளை ,அவர் அன்று  கேரளாவில் பேசியிருந்தால், அலெக்சாண்டர் ஆலப்புழையில் செத்துப் போயிருப்பார்.
நேருவை எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கும் அவர், பட்டேலின் இறுதி ஊர்வலத்தில் கூட நேரு கலந்து கொள்ளவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறினார். அது உண்மைக்கு மாறானது என்பதை எடுத்துக் காட்டிய பிறகு, தன் பிழையை ஏற்றுக் கொண்டார். அண்மையில்,  தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர் வ.உ.சி. என்று கூறித் தமிழக மக்களையே வியப்பில் ஆழ்த்தினார்.
‘தவறுதலாகச் சொல்லிவிட்டார். ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா?’ என்று அவர் கட்சியினர் கேட்டனர். ஆனைக்கு அடி சறுக்கலாம்தான்,. ஆனாலும் அடிக்கடி சறுக்கக் கூடாது. அப்படிச் சறுக்கினால் அது ஆனையாக இருக்க முடியாது!
மோடி என்பவர் ஒரு குறியீடுதான்.  அந்தக் கட்சியில் உள்ள பலரும் பலவாராகப் பேசுகின்றனர். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்கிறது. ஆனால், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாக்ஷி மகராஜ், ஒவ்வொரு இந்துப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். முதலில் சாமியாராக இருக்கும் அவர், முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அந்த முயற்சியில் ஏன் ஈடுபடக்கூடாது?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி ஆட்டுவிக்கிறதோ அப்படி ஆடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதே உண்மை. இப்போதும் ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களில் ஒருவரான தீன நாத் பத்ராவின் குரலைத்தான் மோடி எதிரொலிக்கிறார் என்பது உலகறிந்த செய்தி.
vinayagar 350தீன நாத் பத்ரா, சர்வ சிக்ஷ பச்சோவா அந்தோலன் சமிதி என்னும் அமைப்பின் நிறுவனர். இந்துத்துவா சார்பில் அடிக்கடி நீதிமன்றம் சென்று கருத்துரிமைக்கு எதிராக வாதிடுபவர். வைணவ ஆய்வாளர் ஏ .கே. ராமானுஜம் எழுதிய ‘பல ராமாயணங்கள்’ என்னும் ஆய்வு நூலைத் தில்லிப் பலகலைக் கழகத்தில்  பாடமாக வைக்கக் கூடாது என்று கூறித் தடுத்தவர்.
பென்குவின்  நிறுவனம் வெளியிட்ட, அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகர்  எழுதிய,’இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு” என்னும் நூலைத் தடை செய்யக் கோரியவர். எல்லாவற்றையும் தாண்டி, குஜராத் பள்ளிகளில் பாட நூல்களில், விநாயகரின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றி எழுதியுள்ளவரும் இவரே. 
அந்த நூலுக்கு, அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி ஒரு சிறிய அணிந்துரையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே, உள்ளே இருப்பவர் தீன நாத் பத்ரா. வெளியில் தெரிபவர் மோடி. இதுவும் ஒருவிதமான பிளாஸ்டிக் சர்ஜரிதானோ என்னவோ!
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும்  இந்த முயற்சிகளை இந்துத்துவ பாசிச சக்தியினர் மேற்கொண்டனர். ரிக் வேதத்தின் காலம் கி.மு.1500 என்னும் உண்மையை மாற்றி, கி.மு.5000 என்று எழுத முயன்றனர்.
புகழ் பெற்ற ஹரப்பா நகரத்தின் பெயரை சரஸ்வதி சிந்து என மாற்ற முயன்றனர். சிந்துவெளி நாகரிகத்தையே மறைத்து, சரஸ்வதி நாகரிகம் என்று இல்லாத ஒன்றைக் கொண்டுவர முயன்றனர். ஆரியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்று புதிய பொய்யைப் பாட நூல்களில் சேர்க்க விரும்பினர்.
இந்திய விடுதலைப் போரில், சாவர்க்கரைத் தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளவில்லை என்பதே வரலாறு. ஆனால் விடுதலை இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்.சும்  ஒன்று என்பது போன்ற ஒரு படிமத்தை ஏற்படுத்த எண்ணினர்.
1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான சுவதேஷ் ஏட்டில் முக்கியப் பங்காற்றிய, பா.ஜ.க.வின் சார்பில் மாநிலங்களவை உறுபினராக 1999 இல் நியமிக்கப்பட்ட நானாஜி தேஷ்முக்கே இதனை மறுக்கின்றார். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனாலும் வரலாற்றுத் திரிபுகளை அவர்கள் கை விடுவதாக இல்லை.
காந்தியாரைப் போலக் கோட்சேயும் தேசபக்தர் என்று கூறத் தொடங்கியிருக்கும் இந்துத்துவாவினர், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட அதே ஜனவரி 30அன்று, நாடெங்கும் கோட்சேக்குச் சிலைகளை  வைக்கும் முயற்சியில் இறங்கி  உள்ளனர்.
அந்தச் சிலைகளைத்  திறந்துவைக்க, சென்ற  தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்த, காந்திய மக்கள் இயக்கத் தலைவர்  தமிழருவி மனியனைக் கூட அவர்கள் அழைக்க வாய்ப்புண்டு!
அடடே...பாருக்குள்ளே நல்ல நாடு நம்  பாரத நாடு!   
நன்றி கீற்று