4/28/2015

| |

நல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக்கர் காணியை அபகரிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்புகள் மற்றும் காடழிப்புகளை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரொபட்லி நிக்ஷன், ஒரு வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் செயலாளர் த.பிரபாகரன் உட்பட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரொபட்லி நிக்ஷன்,
வாகரைப்பகுதியில் நில அபகரிப்புகள்,காடு அழிப்புகள் திட்டமிட்டவகையில் நடைபெற்றுவருகின்றன.பாரியளவிலான காடுகள் அழிக்கப்பட்டு நிலங்கள் பங்கீடுசெய்யப்பட்டுள்ளது.

வாகரைப்பிரதேசமானது தமிழ் மக்களின் பூர்வீக பகுதியாகும்.அங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காணியை தவிரவேறு காணி கிடையாது.மக்களாக காணியைப்பெற்றுக்கொண்டாலும் அதற்கு தடை விதிக்கப்படுகின்றது.அரசாங்கத்தினால் காணிகளை பிடிக்ககூடாது,காடுகளை அழிக்ககூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளநிலையில் இவ்வாறான நில அபகரிப்புகள்,காடு அழிப்புகள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றது என்பது எங்களுக்கு விளங்காத நிலையே உள்ளது.பிரதேச மக்களின் தகவலின் அடிப்படையில் அமைச்சர் அமீரலி இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் அவரை சார்ந்தவர்கள் இங்குவந்து காடுகளை அழித்து நிலங்களை அபகரிப்பதாகவும் அறிந்திருந்தோம்.வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை கிழக்கு பகுதிக்குட்பட்ட காரைநகர் மற்றும் மாங்கேணி,கிரிமிச்சை ஆகிய பகுதிகளில் இந்த காணி அபகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வாகரை பிரதேசம் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என்பதுடன் இப்பகுதியில் உள்ள நிலங்களை எமது மூதாதையர்கள் மிகவும் பக்குவமாக பராமரித்து பாதுகாத்துவந்த பகுதியாகும்.இப்பகுதியை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் விறகுக்காக ஒரு மரத்தினை வெட்டும்போது வனபாதுகாப்பு அதிகாரிகள் எங்களை தடுத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி நீதிமன்றம் கொண்டுசெல்கின்றனர்.நாங்கள் சேனைப்பயிற்செய்கைக்காக இங்கு வந்து ஒரு ஏக்கர் காணியை துப்புரவுசெய்யும்போது அதனை அரச அதிகாரிகள் தடுக்கின்றனர்.
2500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் டோசர் கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது.அப்பகுதியில் வாழும் மக்களுக்கு சட்ட ரீதியாக காணியை வழங்குவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிக்கப்போவதில்லை.ஆனால் வேறு பகுதிகளில் இருந்துவரும் செல்வச்செழிப்பு மிக்கவர்கள் இந்த காணி அபகரிப்பினை செய்கின்றனர்.இதனை நாங்கள் அனுமதிக்கமுடியாது.

குறிப்பாக ஓட்டமாவடி,ஏறாவூர் பகுதிகளில் இருந்துவரும் உயர் வர்த்தகர்களே இந்த காணிகளில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துவருவதை காணமுடிகின்றது.
நீண்டகால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பெரும் பாதிப்புகளை கொண்ட இப்பகுதியில் பூவீகமாக தமிழர்கள் வாழும் பகுதியாகும்.இப்பகுதியில் உள்ள ஒரு குடும்பம் தனது பிள்ளைக்கு திருமணம் முடித்துச்செல்லும்போது வழங்குவதற்கு ஒரு துண்டு காணி இல்லாத நிலையே இருந்துவருகின்றது.இவ்வாறான அத்துமீறிய காணி அபகரிப்பு செயற்பாடானது எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான பிரச்சினையை தோற்றுவிக்ககூடிய நிலையேற்படும்.வாகரை பிரதேசம் அதிகளவு தமிழர்கள் வாழும் பகுதி அதிலும் இந்துக்கள் வாழும் பகுதி. அத்துமீறி குடியேறியவர்களினால் பள்ளிவாயல் அமைக்கப்பட்டுவருகின்றது.இதுமிக மோசமான செயலாகும்.

இதற்கு பின்னணியாக இருக்கும் அரசியல்வாதிகளோ,அரச அதிகாரிகளோ இதனை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.இதனை இன்று நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.இது ஒரு வாரத்திற்குள் நிறுத்தப்படாவிட்டால் வாகரை பிரதேச மக்களை ஒன்றுதிரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம்.

காடுகளில் விறகுகளை எடுத்து துவிச்சக்கர வண்டியில் கொண்டுசெல்லமுடியாத நிலைமை.அவ்வாறு கொண்டுவந்தால் உடனடியாக பொலிஸார் கைதுசெய்கின்றனர்.ஆனால் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படும்போது பொலிஸாரோ அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரிய விடயமாகும்.