5/18/2015

| |

மோர்ஸிக்கு மரணதண்டனை: 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்ஸிக்கும் அவரது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் கெய்ரோ நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை(16) மரண தண்டனை விதித்ததையடுத்து, நீதிபதிகள் பயணம் செய்த பஸ்ஸின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நீதிபதிகள்  உயிரிழந்ததுடன் மேலும் 3 நீதிபதிகள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்ஸின் ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் சிறையை உடைத்து வெளியேறிய வழக்கிலேயே இந்த மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பால் எகிப்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், மோர்ஸியின் 'முஸ்லிம் சகோதரர்கள்' கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மோர்ஸிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் சினாய் பகுதியில் அல் ஆரிஷ் நகரில் நீதிபதிகள் சென்ற பஸ்ஸை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர். இதில், பஸ்ஸில் இருந்த 3 நீதிபதிகள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 3 நீதிபதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மோர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து இத்தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், தாக்குதல் நடந்த பகுதி 'அன்சார் பெய்ட் எல் மக்தஸ்' என்ற தீவிரவாத குழுவின் ஆதிக்கம் மிக்க பகுதியாகும். இந்த அமைப்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவானது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் முஸ்லிம் சகோதரர்கள் கட்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தற்போதைய எகிப்து அதிபர் அல் சிசி பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/146291#sthash.ZRtRBaqR.dpuf