5/09/2015

| |

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

ஜெயலலிதா | கோப்புப் படம்தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 (திங்கள்கிழமை) வெளியாகிறது.
கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பெங்களூர் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை:
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ல் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, பெங்களூருவில் ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. அதுபோல் இம்முறை எந்தச் சம்பவமும் நடைபெறாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவது என பெங்களூர் காவல்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, பெங்களூர் கமிஷனர் அலுலகத்தில், மாநகர ஆணையர் எம்.என்.ரெட்டி, இணை ஆணையர் ஹரிசேகரன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் அலோகுமார் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பெங்களூரைச் சுற்றி உரிய பாதுகாப்பு போடுவது உள்ளிட்ட சிறப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர்.
நிரம்பும் ஹோட்டல் அறைகள்...
இதனிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, தீர்ப்பு தேதி உறுதி செய்யப்பட்டதால், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களின் அறைகள் மிகத் தீவிரமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வழக்கின் பின்னணியும் நிறைவடைந்த தீர்ப்பு எழுதும் பணிகளும்
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12-ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், “பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்” என அதிரடி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமார சாமி ஏப்ரல் 29-ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம் பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.
சொத்து விவரங்களை கணக்கிட‌ ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர் கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார்.
தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய்வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டார். தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங்களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கிருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது.
மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவு:
முன்னதாக, நீதிபதிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, "கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கினாலும் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை எழுத வேண்டி இருப்பதால் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. அதேபோல் நீதிமன்ற ஊழியர்களும் அவருடன் காலநேரம் பார்க்காமல் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளித்தனர். இதனால் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தது" என்றனர்.