5/02/2015

| |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான கெளரவ.சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய மே தின உரை

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான   கெளரவ.சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய மே தின உரை 


இன்று உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்னும் கோசத்துடன் உலகமெங்கிலும் இந்த மே தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்த வகையிலேயே நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.1886 ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகரில் வாழ்ந்த  தொழிலாளர்கள் ஒன்று கூடி  எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்த நாளே இந்த மே முதலாம் நாளாகும்.இதனை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

  ஆனாலும் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கூடிய தொழிலாளர் மகாநாடே   1890ல் இருந்து இந்த மே தினத்தை  சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனம் செய்தது.இந்த தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனம் செய்வதில் உலக தொழிலாளர்களின் உன்னதமான தலைவர்களான கால்மாக்ஸ்,ஏங்கல்ஸ் போன்றோரே  முன்னின்று உழைத்தனர் என்பதை நாம் மறந்துவிடலாகாது. 
   

இலங்கையிலும் இந்தியாவிலும்  சுமார் நூறு  வருடங்களாக  இந்த மே தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் முதன்முதலாக இந்த மே தினமானது சிங்காரவேலர் என்னும் சமதர்ம தலைவர் முயற்சியினால் தமிழ் நாட்டில்தான் சென்னையில் 1923ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.  தமிழர்களாகிய நாம் இதனைஎண்ணி  பெருமைகொள்ள முடியும். அதேபோன்று எமது மட்டக்களப்பு மண்ணிலும் சுமார் ஐம்பது வருடங்களாக இந்த மே தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.கிருஷ்ணக்குட்டி போன்ற கம்யூனிச போராளிகள் எமது சொல்லின் செல்வர் இராஜதுரை போன்றவர்களெல்லாம் இந்த மே தின நிகழ்வுகளை இந்த மண்ணிலே நடத்தி வந்திருக்கின்றார்கள் என்பதனை  எமது இளம் சந்ததியினருக்கு  இன்றைய தினத்தில் நினைவூட்டுவது எனது கடமையென்று எண்ணுகின்றேன்.. 

கடந்த முப்பது வருடத்துக்கும் மேலான யுத்த சூழல் இடைக்காலத்தில் நம்மையெல்லாம் இந்த சர்வதேச நிகழ்வுகளில் இருந்து அப்புறப்படுத்தி இருந்தது.எடுத்ததற்கெல்லாம் தமிழன் -சிங்களவன் அல்லது தமிழன் -முஸ்லிம் என்றும் நாம் இனவாத அரசியல் வாதிகளால் பிரிக்கப்பட்டு கிடக்கின்றோம்.ஆனால் அதற்கு மாறாக உலகத்தொழிலாளர்கள் எல்லாம் ஒரே இனம் என்பதே இந்த தொழிலாளர் தினம் நமக்கு கற்றுத்தரும்  பாடமாகும்.


எனவே இனிமேலாவது இந்த இனவாத அணிதிரட்டலில் நாம் ஏமாறாமல் எமது உழைக்கும் மக்களின் தேவைகளை நோக்கி,உரிமை கோரிக்கைகளை நோக்கி,குரல் எழுப்ப தொடங்க வேண்டும்.இங்கே கூடியிருக்கும் கூலி தொழிலாளர்கள்,ஏழை விவசாயிகள்,மீனவர்கள்,ஆட்டோஓட்டுனர்கள், அரச ஊழியர்கள் போன்ற பலதரப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எத்தனையோ உண்டு. அவர்களின் வாழ்வியல் போராட்டம் பற்றி  பேசவும், எழுதவும்,உரத்து குரல் கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.அவற்றைப்பற்றி எழுதினால் பத்திரிகைகள் விறுவிறுப்பாக விற்பனையாகாது.அவைபற்றி பேசினால் மக்களின் உணர்வுகளை கிளறிவிட்டு அரசியல் செய்ய முடியாது. எனவேதான்.எமது தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகள் கவனிக்கப்படுவதில்லை.வாக்குகளை சுருட்டிக்கொள்ள இலேசான அரசியல் இனவாத அரசியல்தான் என்பதை நமது தேசிய அரசியல் வாதிகள் நன்கே அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

இந்த நிலை தொடருவதன் காரணமென்ன என்பதை இற்றைக்கு 130 வருடங்களுக்கு முன்னர் நடந்த சிக்காக்கோ தொழிலாளர்களின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.பெரும்பெரும் பணக்கார முதலாளிகளிடமும் நிலச் சுவாந்தர்களிடமும் கொத்தடிமைகளாக வேலை செய்த அந்த அமெரிக்க தொழிலாளர்கள் தங்களிடையே கட்டிஎழுப்பிய ஒற்றுமையே அவர்களின் வெற்றிக்கான அத்திவாரமாயிற்று.அவர்கள் உருவாக்கிய தொழில்  சங்கங்களே தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பலத்தினை வெறும் கொத்தடிமைகளாய் இருந்த அவர்களுக்கு வழங்கியது.இதனைத்தான் எமது முன்னோர்கள் "அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு" என சொல்லி சென்றிருக்கின்றனர். உலகிலுள்ள தொழிலாளர் நல சட்டங்கள் எதுவுமே அரசுகள் இனாமாக உருவாக்கித் தந்தவையல்ல.அவை ஒவ்வொன்றின் வெற்றிக்குப்பின்னாலும்  தொழிலாளர்களின் பாரிய போராட்டங்களும் அர்ப்பணிப்புகளும் இருந்து வந்திருக்கின்றன.

 எமது சகோதரர்களான மலையக தொழிலாளர்களின்  ஒவ்வொரு சத சம்பள அதிகரிப்புக்கும் பின்னணியில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க   போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பது நாம் கடந்து வந்த பாதையாகும் . எனவேதான் பலமான தொழில் சங்கங்களை நாம் உருவாக்க வேண்டும்.மீனவர்களும், விவசாயிகளும்,கூலி தொழிலாளர்களும் கூட இந்த தொழில்  சங்கங்களை  கட்டியெழுப்ப வேண்டும். இயற்கை அள்ளித்தந்த அத்தனை வளங்களையும் கொண்ட நமது கிழக்கு மாகாணம் ஏன் இன்றுவரை ஏழ்மையில் சிக்கி கிடக்கின்றது என்று நாம் எண்ணிப்பார்க்கின்றோமா? ஏழை தொழிலாளர்களின் வாழ்வு ஏன் இன்னும் கீழ்நிலையிலேயே இருக்கின்றது என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? நமது உழைப்புக்கு உத்தரவாதம் இல்லை.காப்பீடுகள் இல்லை.இவற்றையெல்லாம் அடைந்துகொள்ள எம்முடையே பலமான தொழில் சங்க நடவடிக்கைகள் இல்லை.இவை எவை பற்றியும் எமது தலைவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் ஒருபோது கவலைப்படுவதுமில்லை.என்பதுவே அதற்கு காரணமாகும்..


குறிப்பாக மத்தியகிழக்கில் உழைப்பதற்காக சென்று அங்கே  அல்லலுறும் பணிப்பெண்களுக்காக குரல்கொடுக்க எம்மிடையே ஒரு பலமான அமைப்புக்கள் இல்லை.மத்திய கிழக்கில் வேலைசெய்யும் எமது சகோதர சகோதரிகள் எதிர்கொள்ளும் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்கொண்டு அவர்களுக்காக குரல்கொடுக்க   இலங்கையிலே நாடுதிரும்பிய முன்னாள் மத்தியகிழக்கு தொழிலாளர்கள் கூட ஒரு தொழில் சங்கத்தை இங்கு உருவாக்க முடியும்.  பாருங்கள் அண்மையில் சிகிரியா சுவர்களிலே கீறிய எமது சகோதரி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்புவதற்குகூட எம்மிடையே பலமான மாதர் சங்கங்கள் இருக்கவில்லை.எனினும் எமது தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் மகளிர் அமைப்பினரே  தம்மாலான முயற்சிகளை அந்த சகோதரியின் விடுதலைக்காக எடுத்தனர்.அதன்பலனாகவும் வேறு அமைப்புகளின் மனுக்களின் பலனாகவும் இன்று அந்த சகோதரி விடுதலையாகி  உள்ளார்.


எனவேதான் இந்த கிழக்கு மண்ணிலே எதிர்காலத்தில் பலமான தொழிலாளர் அமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.இனமத பேதமற்ற தொழிலாளர்களின் ஒற்றுமையே எம்மை வாழவைக்கும்.தமிழன்- சிங்களவன் என்கின்ற குரோதங்களை வளர்த்துக்கொண்டு பெரும்பான்மைகட்சிகள் எப்படி தமது அரசியலை ஓட்டுகின்றனரோ அதேபோன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தமிழ் என்று எமது மக்களின் இன உணர்வுகளை விலைபேசி தமது காலத்தை ஓட்டுகின்றனர்.அதனால்தான் நல்லாட்சி பற்றி கனவுகளை மக்களிடம்  விதைத்தவர்கள்,அந்த ஆட்சியிலே எமதுமக்களுக்கு எதையுமே பெற்றுத்தர முடியாமல் மீண்டும் பழைய பல்லவிகளை பாட தொடங்கியுள்ளனர்.அதற்கு நல்ல உதாரணமாக  கடந்த ஒருசில நாட்களாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை கொள்ளலாம்.புதிய ஆட்சி உருவாகிய இந்த நூறு நாட்களிலும் மட்டும் 17 மட்டக்களப்பு இளைஞர்கள் மத்திய கிழக்கிலிருந்து திரும்புகையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.திரும்பத்திரும்ப இந்த எம்பிக்கள் இந்த கைதுபற்றியே பேசிவருகின்றனர்.இதனை பேசுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனரா?.


அது போதுமா?  இந்த ஆட்சி மாற்றத்துக்கு  நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் இந்த கைதுகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும்.இந்த இளைஞர்களின் விடுதலைக்காக  இவர்கள் என்ன நடவடிக்கைகளை இதுவரை எடுத்துள்ளனர்?.இந்த கைதான இளைஞர்களின் உறவினர்களை அழைத்துக்கொண்டு ஏன் இதுவரை ஜனாதிபதியை அணுகவில்லை?  வெறும் வார்த்தை ஞாலங்களால் ஏதும் நடந்துவிடப்போவதில்லையே? மந்திரத்தாலே எங்கும் மாங்காய் வீழ்வதுண்டோ  என்று இந்த தமிழ் தேசிய அறிக்கை வீரர்களை பார்த்து கேட்கின்றேன்? இவர்களுக்கு பலகாரங்கள் அவசியமில்லை சிலுசிலுப்பொடு காலத்தை ஒட்டி பழகிவிட்டனர்.மெய்யாகவே மெய்யாகவே எமது இளைஞர்களின் விடுதலைமீது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு  எவ்வித சிரத்தையும் கிடையாது என்பதுகுறித்து எமதுமக்கள் தெளிவடைய வேண்டும்.


எனவேதான்  எனது அன்பார்ந்த தொழிலாளர் வர்க்கமே உங்கள் காதுகளை கூர்தீட்டி கொண்டு இதனை கேளுங்கள் !


* இலங்கையிலே ஆட்சிமாற்றத்துக்கு உறுதுணை வழங்கியவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரே,


 *தேசிய நிறைவேற்று சபையில்  பங்கெடுத்திருப்பவர்கள்   இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரே,


*வடமாகாண சபையை ஆட்சி செய்பவர்களும்    இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரே,


*கிழக்கு மாகாண  சபையில் அமைச்சர்களாக இருப்பவர்களும் கூட   இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரே,

*ஆனால் எமது மக்களின் வாழ்வின் முன்னேற்றத்தில்  இவர்களால் இதுவரை ஒரு துரும்பையேனும் நகர்த்த முடிந்ததா? என்று கேள்வியெழுப்ப விளைகின்றேன்?


முப்பது வருட யுத்தத்தில் அங்குமிங்குமாய் வீசப்பட்டுகிடந்த எமது மக்களுக்கு அமைதியை தந்தவர்கள் நாங்களே. நாங்கள்  இந்த கிழக்கு மாகாண சபையை உருவாக்கியபோது தட்டந்தனியே நின்றோம்.வசைவுகளையும் வக்கணங்களையும் தவிர எமக்கு வாழ்த்துக்கள் ஒருபோதும் கிடைக்கவில்லைஎன்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.சாபங்களையும் சவால்களையும் மட்டுமே  நாம் தாண்டிவர நிர்ப்பந்திக்கப்பட்டோம்.


தனித்து நின்று யுத்த களமாடிய வரலாறு கொண்டவர்கள் நாங்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பினரை போல் அட்டைக்கத்தி வீரர்களல்ல.அதனால்தால்  அரசியல் களத்திலும் சாதித்து காட்டினோம்.மாகாணசபை முறைமையில் மக்களை நம்பிக்கை கொள்ள செய்வதில் வெற்றிகண்டோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பினரின்  அறுபதுவருட வரலாற்றை புரட்டிப்போட்டு அவர்களின் எதிர்ப்பு அரசியலை கைவிட செய்தோம்.அதனால்தான் இன்று அவர்கள் இணக்க அரசியல் பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்கள் என்று நான் ஆணித்தரமாக சொல்வேன்.


ஆனாலும் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொள்வதுபோல இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாணசபைகளை குட்டிசுவராக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள்.ஒருபோது இல்லாத புதுமையாக கிழக்கு மாகாண சபையின் சுற்றுநிருபங்கள் இப்போது சிங்களத்தில் அனுப்படுகின்றன.....எமது வாகரை பிரதேச அரச காணிகள் எல்லாம் சட்டதிட்டங்களுக்கு மாறாக யார் யாருக்கெல்லாமோ பெரும்முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.....எங்களது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆட்சியில் இது நடந்ததா? யார் யாரெல்லாம் அன்று எம்மை துரோகி என்றனரோ அவர்களே இன்று துரோகிகளாய் அம்மணமாய் நிற்கின்றார்கள்.எனது ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகளால் உருவான கட்டிடங்களை எல்லாம் தேடித்தேடி திரிந்து திறந்து வைப்பதில் அற்ப சந்தோசமடைகின்றார்கள் இன்றைய கிழக்கு மாகாண அமைச்சர்கள்.


முதலிலே ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்பதுபோல ஆளுனார்கள் சரியில்லை.என்றார்கள்.அதையும் புதிய ஜனாதிபதி மாற்றிக்கொடுத்தார்..எதற்காக? வடக்கிலும் கிழக்கிலும் புதிய ஆளுநர்களை கொண்டு இதுவரை கூட்டமைப்பு சாதித்து என்னவென்று உரையுங்கள் போலிதமிழ் தேசியவாதிகளே!  எத்தனை நியதி சட்டங்களை புதிய ஆளுனர்களைகொண்டு நிறைவேற்றினீர்கள்? புதிய ஜனாதிபதியை கொண்டு எத்தனை இளைஞர்களை விடுதலை செய்தீர்கள்? வடக்கு கிழக்கில் மட்டும் (3000) மூவாயிரம் மாற்று திறனாளிகளை இந்த யுத்தம் தந்துவிட்டு சென்றிருக்கிறது. இவர்களுக்காக  ஒருநாளேனும் தேசிய நிறைவேற்று சபையின் கவனத்தை  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோரினரா?என்று அறிய விரும்புகின்றேன். ஆட்சிமாற்றம்வந்தால் பாலும் தேனும் பாய்ந்தோடுமென்று  கானம் பாடி திரிந்தவர்களே உங்களிடம் கேட்கின்றேன்.இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் வகிபாகம் என்ன? இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து தேசிய பேரவை ஆராயுமென்று காத்திருந்தோமே அதற்கு பதிலென்ன? என்ன நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டீர்களா? இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதுபோல "இனப்பிரச்சனை தீர்வுக்கு சர்வதேச தலையீடு வேண்டும்" என்று வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே?   எதற்காக? அப்போது கடந்த கிழக்கு மாகாண சபைதேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வெள்ளை வேட்டி கள்ளர்களெல்லாம்   "கிழக்கு தமிழர்களே சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழ் மக்களின் பலத்தை காட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்" என்று கூப்பாடு போட்டனரே? எமது மக்களை ஏமாற்றி பெற்ற 11 ஆசனங்களுக்கும் சர்வதேசம் என்னய்யா சொன்னது? தேர்தலின் போது  பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசம் தேர்தல் முடிந்த பின்னர் சடுதியாக தூங்கி விட்டதா? இப்போது வடமாகாணசபை மீண்டும் சர்வதேசத்தை எழுப்புவதன் காரணம் என்னவோ? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காகவா? எனவேதான் எனதருமை தொழிலாளர்களே! பொய்யுரைக்கும் இந்த போலி தமிழ் தேசிய  வாதிகளிடமிருந்து முதலில்  விடுதலையாகுங்கள்.தமிழ்  இன உணர்வுகளை விலைபேசி விற்கும் கொள்ளையர் கூட்டத்திடமிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்.இன-மத-மொழி  பேதங்களை கடந்து தொழிலாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.அதுவொன்றே எம்மை வாழவைக்கும்,அதுவே சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வழிசமைக்கும்  என உறுதிகொள்வோம்.உலக தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்.

நன்றி 
01/05/2015 
வெளியீடு -பிரச்சார பிரிவு-தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்