7/21/2015

| |

வேட்பாளர் செல்லத்துரை அரசரெத்தினம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்

ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பிற்கு இணங்க பலர் அமைதியாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவரும் வேளையில்  நேற்றிரவு 20.07.2015 11.30 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்லத்துரை அரசரெத்தினம் (அரஸ்) என்பவரின்  வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த குண்டர்கள் வீட்டை சேதப்படுத்தியதுடன் வேட்பாளரையும் தாக்கி அவரது மனைவி, மாமி,பிள்ளைகளையும் அச்சுறுத்தி கல்லாலும், பசைவாளியாலும், தாக்கியுள்ளமையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தேர்தல் சட்ட திட்டங்களை மீறி மட்டக்களப்பு பிரதான வீதியிலும் மின் கம்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாவின் பெயரையும் அவரின் போஸ்ரர்களையும் ஒட்டி வந்தவர்களே குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் குறித்த வேட்பாளரையும் அவரது குடும்பத்தாரையும் தேர்தல் முடியும் முன்னர்  ஊரைவிட்டு வெளியேறு வேண்டும் எனவும் இல்லாது விட்டால் கொலை செய்ய போவதாகவும் அச்சுறுத்தியிருக்கின்றார்கள். கருத்தை கருத்தால் வெல்லும் காலத்தில் கருவியாலும், அடாவடித் தனங்களாலும் ஜனநாயகத்தின் குரவளைகளை நசுக்க முற்படுவது கடந்த கால யுத்த ஆதிக்கத்தை கொண்டு வரும் மிக பயங்கரமான செயற்பாடாக பார்க்கின்றோம்.

இம்முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தல், சட்டதிட்டங்களை மதித்து வன்முறையற்ற தேர்தலாக நடத்தப்பட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையாளர் மிகவும் இறுக்கமாக உள்ளார். அதற்கேற்றால் போல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்காக சேவைபுரியப் போவதாக கூறும் வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களை  மது அருந்திவிட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சத்தினை ஏற்படுத்தாதவர்களாக வழி நடத்த வேண்டியது கட்டாய கடமையாகும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .