9/28/2015

| |

ஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.

.
இன்று ஓவியர் மாற்குவின் நினைவு தினம். 27 September 2000.
எம்மை விட்டுப் பிரிந்த நாள். 15 வருடங்கள் கடந்துபோயின.
இவர் வாழ்ந்த காலங்களில் எம்மவர்களில் பலர் இவரைக் கண்டுகொள்ளவில்லையே என்பது வேதனை தரும் விஷயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளாத உன்னதமானதொரு கலைஞர். மேற்கத்தைய ஓவியர் வான்கோ போல், இவரும் தனது காதைத் தானே அறுத்தெறிந்திருந்தால், அக்காலத்திலேயே இவரும் பிரபல்யம் அடைந்திருப்பாரோ என்னவோ!
இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தின் பிதாமகன் என்று இவரைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.
இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரைக் கெளரவிக்கும் நோக்குடன் நண்பர்கள் அ.யேசுராசா, Dr. க. சுகுமார், பத்மநாப ஐயர் ஆகியோரின் பெருமுயற்சியால் `தேடலும் படைப்புலகமும்` என்னும் ஓர் அரிய ஆவணநூலை வெளிக்கொனர்ந்தார்கள். இவருடனான நேர்காணல், சில ஓவியங்கள், இவரது காலத்தில் வாழ்ந்த சில ஓவியர்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. ஓவியர் மாற்கு பற்றிய ஓரளவு தகவல்களையாவது நாம் அறிந்து கொள்வதற்கும் இனி வரும் சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் இந்த நூல் ஒன்றுதான் தற்போது கைவசம் உள்ளது. இந்த நூலை noolaham.org இல் யாவரும் படிக்கலாம்.
``என் மாணவர்களாலேயே நான் அறியப் படுவேன்`` என்று ஒரு நேர்காணலில் இவர் கூறியதுபோலவே, உலகெங்கிலும் பரந்து வாழும் இவருடைய மாணவர்களில் முதன்மையானவர்களாக அருந்ததி, வாசுகி,கருணா, சுகுணா, ஜெயந்தன் ஆகியோரை நான் அறிவேன். இவர் பற்றிய ஆவணப்படமொன்றை சுவிட்சர்லாந்தில் வாழும் ஜெயந்தன் தயாரித்துவருவது மகிழ்வூட்டும் செய்தியே.