10/01/2015

| |

சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை

 சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான தூதுக் குழுவினர் தன்னை நேரடியாக சந்தித்து விடுத்த கோரிக்கையை ஏற்றே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளார். இச்சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இது குறித்து கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் கூறுகையில், சாய்ந்தமருது மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்ற தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எடுத்துக்கூறிய அமைச்சர் ஹக்கீம், அதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் மற்றும் கடந்த 100 நாட்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விபரித்தார். அத்துடன் கடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்காக கல்முனையில் வழங்கிய வாக்குறுதியை பற்றியும் அமைச்சர் ஹக்கீம் பிரஸ்தாபித்தார். இதையடுத்து,உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா இதன்போது இணக்கம் தெரிவித்தார்.