11/12/2015

கைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்

Afficher l'image d'origineஅரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு கூரையில் ஏறி உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 'ஒருவருக்கு, மருத்துவ சிகிச்சையென்பது முக்கியமானது. ஆனால், தமிழர்களின் தலைமைக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படுபவர், முக்கியமான மக்கள் பிரச்சினையொன்று இங்கு காணப்படும் வேளையில், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது அநாகரிகமானது. இப்பிரச்சினையைத் தீர்த்த பின்னர், தனது மருத்துவ சிகிச்சைக்குச் சென்றிருக்கலாம்' என்றார். 'கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக, சம்பந்தன், சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்குக் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. 61 கைதிகளுக்குப் பிணை வழங்குவதாகத் தற்போது கூறப்படுகின்றது. 

அப்படியென்றால் மிகுதிப் பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளனரா? 5, 10 மற்றும் 20 வருடங்கள் எனச் சிறையில் இருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஆயுட்காலச் சிறைத்தண்டனை என்று கூறப்படுபவர்கள் கூட, 14 வருடங்களில் வெளியில் செல்ல முடியும். ஆனால், பல வருடங்களாக சிறைகளில் உள்ளவர்களுக்கு விசாரணைகள் நடைபெறாமல் உள்ளன' என்றார். 'தற்போது மீண்டும், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முழுமையான பதில் வேண்டும் என அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். கைதிகள், உண்ணாவிரதம் இருக்கக்கூடிய உடல்நிலையில் இல்லை. அவர்கள் வாழ்வா, சாவா என்னும் நிலையில் உள்ளனர். ஆகவே, சம்பந்தன் உடனடியாக இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும்' எனக் கூறிய அவர், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய தமிழ்த் தலைமைகள் எவரும் தற்போது நாட்டில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.  

0 commentaires :

Post a Comment