11/12/2015

பிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். -

பொதுமன்னிப்பைக் கோரி சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று (10.11.2015) சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து கொழும்பு மகசின் சிறைச் சாலைக்கு நேற்று காலை சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள சிறைக்கூடங்களை பார்வையிடவும், அங்கு இருப்பவர்களை அவர்கள் இருக்கும் அறைகளிலேயே சந்திக்கவும் சிறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட போது, சிறை அதிகாரிகள்  சிறைக் கூடத்துக்குள்ளே போவதைவிடவும், கைதிகள் சார்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை அழைத்து தமது அலுவலகத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததோடு, சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
ஏற்கெனவே 1998ஆம் ஆண்டு களுத்துறையில் உண்ணாவிரதமிருந்த தமிழ்க் கைதிகளை பார்வையிடச் சென்றபோது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது அங்கிருந்த புலிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதையும், அதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான செயலாளர் நாயகம், அதிஷ்ட்டவசமாக உயிர்தப்பி மறுபிறவி எத்திருந்ததையும் ஞாபகப்படுத்திய சிறை அதிகாரிகள் பாதுகாப்புக் காரணத்துக்காகவே சிறைக் கூடங்களுக்கு உள்ளே செல்ல மறுப்புத் தெரிவித்ததாக தெரிவித்தனர்.
தம்மைப் பார்வையிட எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் இதுவரை பார்வையிட வராத நிலையில், இன்றைய தினம் செயலாளர் நாயகத்தின் பிறந்த நாள் என்றபோதும், கோயிலுக்கோ, விருந்துகளுக்கோ போகாமல் சிறைக்கு வந்து பார்வையிட்டதற்காக கைதிகள் நன்றியையும், வாழ்த்துக்களையும் செயலாளர் நாயகத்திற்கு தெரிவித்தனர்.
செயலாளர் நாயகத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் பதினைந்துக்கும் மேலதிகமான பிரதிநிதிகளும், செயலாளர் நாயகமும் நீண்ட நேரமாக கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில், தமக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்ய வேண்டும் அப்படிச் செய்வதில் ஏதேனும் தடை இருந்தால் தமக்கு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதாக இருந்தால் அதற்கு இணங்குவதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் மத்தியில் உரையாடிய செயலாளர் நாயகம் அவர்கள், ஆயுத வன்முறையை ஆதரித்தவர்களும், தூண்டிவிட்டவர்களும், பங்கெடுத்து நடத்தியவர்களும் வெளியில் இருக்கையில் உங்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதில் தார்மீக நியாயம் ஏதுமில்லை. உங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள் என்று நம்பியே தமிழ் மக்கள் கூட்டமைப்பினருக்கு வாக்களித்தார்கள். ஆனால்  கூட்டமைப்பினர் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஏமாற்றிவிட்டார்கள் என்றும் தெரிவித்ததோடு, தாம் மத்திய அரசாங்கத்தில் பங்கெடுத்திருந்தால் இந்த விடயத்தை நியாயமான தீர்வைப் பெற்றுத்தர பாடுபட்டிருப்பேன், உங்கள் விடுதலையை அரசியல் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தின்போதே உங்கள் விடுதலையை சாதித்திருக்க வேண்டும். மாறாக கூட்டமைப்பினரோ, தமது சுய இலாப அரசியலுக்காக உங்களை பயன்படுத்துகின்றார்கள் என்றும் செயலாளர் நாயகம் மேலும் கூறினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகின்றேன். 1971 ஆண்டு கிளர்ச்சி செய்த ஜே.வி.பியினருக்கும் 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழ் போராளிகளுக்கும், அவர்களோடு தொடர்புபட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கும், மீண்டும் 1989ஆண்டு ஜே.வி.பியினர் நடத்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜே.வி.பியினருக்கும் பொது மன்னிப்பு வழங்கியதைப்போலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டம் என்பதே எனது நிலைப்பாடாகும். ஆகவே உங்களின் விடுதலை தொடர்பாகவும், புனர்வாழ்வளிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியுடன், பிரதமருடனும் பேச்சுக்களை நடத்துவேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சிறைகளில் உண்ணாவிரதமிருக்கும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் பார்வையிடுமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட கைதிகள் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறை உள்ளே சென்று உண்ணாவிரதமிருப்பவர்களையும் செயலாளர் நாயகம் பார்வையிட்டார்..
சிறைகளில்  இருப்போரில் ஒருபகுதியினர்  நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக  தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்போர்,  இன்னொரு பகுதியினர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டிருப்பவர்கள். மீதமிருப்போர் இதுவரை நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இருப்போர் என மூன்றுவிதமான தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். இவர்களில் ஏற்கெனவே ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் தண்டனை அனுபவித்தவர்களை தொடர்ந்தும் தண்டிப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஊடகப் பிரிவு
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
- See more at: http://epdpnews.com/?act=news&id=20599#sthash.2UQgrhV7.dpuf

0 commentaires :

Post a Comment