12/11/2015

கடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையேயான பாகுபாடு இயற்கைப் பேரிடர் வேளையிலும் எதிரொலிக்கிறது

கடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையேயான பாகுபாடு இயற்கைப் பேரிடர் வேளையிலும் எதிரொலிக்கிறது. இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நிவாரணப் பொருட்கள் சரிவரக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து தி இந்து (ஆங்கில நாளிதழ்) செய்தியாளர் மேற்கொண்ட கள ஆய்வில் தலித் மக்கள் பலர் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை விவரித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை இடைமறிக்கும் உயர் வகுப்பினர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவிடாமல் தடுப்பதாக தலித்துகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
2012 தருமபுரி சம்பவத்துக்குப் பிறகு கடலூரின் பல பகுதிகளிலும் சாதி இடைவெளி மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த கடலூரின் உள் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் தன்னார்வலர்களும் தாங்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாகக் கூறினர்.
இக்கட்டான சூழலில் சாதி பாகுபாடு தலைவிரித்தாடுவதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது ஓனான்குப்பம் மக்களின் குமுறல்.
ஆம், குறிஞ்சிப்பாடியின் ஓனான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நிவாரணப் பொருட்களுக்காக மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. காரணம், நிவாரணப் பொருட்கள் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட பின்னரே உள் பகுதிகளுக்கு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. பல நேரங்களில் தங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு சொற்ப அளவிலான பொருட்களையே தங்கள் பகுதிக்கு உயர் சாதியினர் அனுப்பி வைப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ முகாம்களிலும் பாகுபாடு:
ராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை உயர் சாதியினர் அவர்களது பகுதியிலேயே ஒருங்கிணைத்தனர். இதனால் தலித்துகள் அப்பகுதிக்குச் சென்று மருத்துவ சேவையைப் பெறுவதில் பெருமளவில் தயக்கம் காட்டியுள்ளனர்.
உயர் சமூகத்தினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெயர் குறிப்பிட விரும்பாத தலித் பெண் ஒருவர் கூறும்போது, "ஒவ்வொரு முறை நிவாரணப் பொருட்களுடன் வாகனங்கள் வரும்போது அதை உயர் சாதியினர் வழிமறித்து அப்படியே அவர்கள் இருக்கும் பகுதிக்கு திருப்பிவிட்டு விடுகின்றனர்" என்றார்.
கடலூரில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள ஆய்வு செய்த 'தி இந்து' செய்தியாளரிடம் முன் வைக்கப்பட்ட ஒரே புகார் சாதி பாகுபாடு பற்றியதுதான்.
இருப்பினும் நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட பிறகு தங்களுக்கும் உதவிகள் வந்து சேர்வதாகக் கூறுகின்றனர் ஏழை மக்கள்.
குடிசைப் பகுதிகளுக்கே முன்னுரிமை:
கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறும்போது, "ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளிலேயே நிவாரணப் பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

0 commentaires :

Post a Comment