1/31/2016

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நாளை வெளியீடு (முதலமைச்சர் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், 
பெருந் தொகையான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலேயே இந்நிகழ்வு இடம்பெறும் என பேரவையின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளதுடன்,

தமிழ் இனத்துக்கான அரசியல் தீர்வு குறித்த முன்வரைபு வெளியிடப்படும் இந் நிகழ்வில் பொதுமக்கள், ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது. 
»»  (மேலும்)

1/28/2016

பிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா? அரசியல் பேதங்களால் அபிவிருத்தி தடுக்கப்படக்கூடாது: கே.யோகவேள் -

அரசியல் பேதங்களைச் சொல்லியோ, தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் அடையாளங்கள் நிலைபெறக்கூடாது என்பதற்காகவோ, மட்டக்களப்பு மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திப் பணிகளை தடுக்க எவரும் முனையக்கூடாது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே.யோகவேள் தெரிவித்துள்ளார்.
Yogavel

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்களின் நலன்சார்ந்த சேவைகள் புரிவதற்காகவே அரசியல் தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். மாறாக அரசியல் தலைமைகளுக்காக மக்கள் அல்ல என்பதனை எந்தக்கட்சி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும். தமது சுயநலன் சார்ந்த சிந்தனை இருக்குமாக இருந்தால், அவர்கள் அரசியல் பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதுவே நாகரிகம். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனோ அல்லது அக்கட்சியின் ஏனைய அங்கத்தவர்களோ அரசியல் பேதம் பார்த்து ஒருபோதும் அபிவிருத்திப் பணிகளை செயற்படுத்தவில்லை. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்றும் வேற்றுமை பார்த்திருக்கவில்லை. தேவையுள்ள மக்களுக்காகவே நாம் எப்பொழுதும் சேவை செய்து வருகிறோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த தனிநபர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு துணைபுரிந்ததுடன் வீதிகள், மைதானங்கள், நூலகங்கள், மண்டபங்கள், பொதுக்கட்டிடங்கள் என பல பொதுத்தேவைகளையும் செய்து கொடுத்தோம்.

அதேபோன்று இலங்கையிலேயே மிகப்பிரமாண்டமான அனைத்து வசதிகளும் கொண்ட 210 மில்லியன் ரூபாய் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்ட பொது நூலகத்தை மட்டக்களப்பில் அமைப்பதற்கு 2012ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தோம். முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் 2013, 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார அமைச்சின் ஊடாக 40 மில்லியனுக்கும் மேல் நிதி பெற்று மேலதிக வேலைதிட்டங்கள் நடைபெற்றன. மேலும் இந்த நூலகத்தை பூரணத்துவப்படுத்த இன்னும் சுமார் 120 மில்லியன் தேவைப்பாடாக உள்ளது. மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பிரமாண்டமான இந்த நூலகத்தினைப் பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு விடுவதற்கு அரசியல் தலைமைகள் முன்வராது அரசியல் பேதங்களின் வெளிப்பாடாக பிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா? என்ற நிலையில் காணப்படுவதுதான் கவலையளிப்பதாக உள்ளது. இவ்வாறான போக்குகளை மாற்ற வேண்டும். எம் மண்ணின் மாணவர்கள், புத்திஜீவிகளின் நலன்கருதி குறுகிய அரசியல் இலாபம் கருதி யார் செயற்பட்டாலும் மக்களின் துணையுடன் முறியடித்து அரசியல் அதிகாரங்களை மீண்டும் பெற்று நாம் நூலகத்தினை பூர்த்தி செய்வோம். எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் வெற்றி மூலம் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து செவ்வனே நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.
»»  (மேலும்)

அண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம் அவர்களது நினைவு கூட்டம்

மக்கள் கலைஞர்
முனைவர். கரு. அழ. குணசேகரன்
நினைவேந்தல் கூட்டம்
---------------------------------------------------------
நாள் : ...
31. 01. 2016 - ஞாயிறு காலை 10 மணி
--------------------------------------------------------------
இடம் :
பல்கலைக்கழகம் கன்வென்ஷன் அரங்கம்
புதுவை பொறியியல் கல்லூரி எதிரில்
காலாப்பட்டு, புதுச்சேரி
----------------------------------------------------------------
அன்புடையீர் வணக்கம்.

எனது கணவரும், புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத் துறை புல முதன்மையரும், பேராசிரியருமான முனைவர். கரு. அழ. குணசேகரன் 17. 01. 2016 அன்று காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மண்டபம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கே.ஏ.ஜி அவர்களின் ஆத்ம சாந்திக்காக வருகிற 31. 01. 2016 ஞாயிறு காலை 10 மணியளவில் குடும்பத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இக்கூட்டத்தில் தாங்கள் குடும்பமாகப் பங்கேற்று அஞ்சலி செலுத்த அன்போடு அழைக்கின்றோம்.
அன்புடன்
முனைவர். வீ. ரேவதி
மகள் : மருத்துவர். குணவதி
மகன் : மருத்துவர். அகமன்
------------------------------------------------------------------------
தொடர்புக்கு
7502150649, 9443984650, 9629775008
»»  (மேலும்)

1/27/2016

அக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு

அக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு
கருத்துப் பகிர்வுக்கும் கலந்துரையாடலுக்குமான அழைப்பு
தொனிப்பொருள்: "இலக்கியமும் சமூக உறவுகளும்"
...
கருத்துரை வழங்குவோர்:
* பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான்
* பேராசிரியர் செ.யோகராசா
* எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா
காலம்: 30.01.2016 சனிக்கிழமை
நேரம்: மாலை 4.00 முதல் மாலை 6.30 வரை
இடம்: அக்கரைப்பற்று பொதுப் பூங்கா திறந்த வெளி அரங்கு
( நீர் விநியோக வடிகாலமைப்பு சபை அலுவலகத்திற்கு அருகாமையில்)
( பிரதான வீதியிலுள்ள டெலிகொம், பிரதேச செயலகம் ஆகியவற்றிற்குப் பின்பாக)
ஆர்வமுள்ள அனைவரையும் மிக்க அன்புடன் அழைக்கிறோம்.
ஏற்பாடு: இலக்கிய நண்பர்கள்
»»  (மேலும்)

1/25/2016

மலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்

இலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இவ்வாறான சிறுநீரக வியாபாரத்தில் 'தரகர்கள்' ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள நிலைமை பற்றி வெளியில் கூற அச்சப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
'ஹட்டனில் உள்ள தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பத்துலட்சம் ரூபா பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை பெற்றுவிட்டு' சிலர் அவருக்கு பணம் கொடுக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் உள்ளதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறினார்.
வறுமை காரணமாக அல்லது விழிப்புணர்வு குறைவாக உள்ளமை காரணமாக மலையக மக்களை குற்றக் கும்பல்கள் இலக்கு வைப்பதாக தான் கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகத்தை வாங்குவதாக தகவல்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மலையக மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையின் சில மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை விற்கும் சட்டவிரோதமான வியாபாரம் நடப்பதாகக் கூறி வெளியான புகார்களைத் தொடர்ந்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளை செய்வதை இடைநிறுத்துமாறு அரசாங்கம் அண்மையில் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, சிறுநீரக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள் யாராவது இருப்பார்களாயின் அவர்கள் தங்களின் அத்தாட்சி பூர்வமான அனைத்து விபரங்களையும் தமக்கு தெரிவிக்குமாறு சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

சீறினார் சம்மந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர்!

tamilarasyaநேற்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், பேராசிரியர் சிற்ரம்பலம் அவர்களின் செயல்பற்றி தான் அடைந்த விசனத்தை வெளிப்படுத்தினார். சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான பேராசிரியர், ஏற்க முடியாத காரணங்களை கூற முற்பட்ட போதும் அது சபையேறாததால், தான் தமிழ் அரசு கட்சி சார்பாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.
வாழ்நாள் பேராசிரியர் வார்த்தை தடுமாறிய செயலானது, அவர் கூட மேய்ப்பனை விலத்தி வழிமாறி திகைத்து “மே” “மே” என கத்தும் செம்மறி ஆட்டின் நிலை போலானது. ஏனெனில் தமிழ் மக்கள் பேரவை அங்குரார்பண கூட்டத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, பேராசிரியர் தான் தமிழ் அரசு கட்சி சார்பாகவே கலந்து கொண்டதாக கூறினார். அடுத்து அவரிடம் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு அவர் பதில் கூறுமுன், முந்திக்கொண்ட சுரேஸ் கேள்வி கேட்டவர் மேல் சீறிப்பாய்ந்தார்.
நேற்றைய கூட்டத்தில் சம்மந்தர் சீறியதும், பேராசிரியர் தப்பிப்பிழைக்க பொய்யுரைத்தார். ஏனெனில் ஏற்கனவே யாழ்ப்பாண தமிழ் அரசு கட்சி கிளை சிற்றம்பலம் அவர்களின் செயல் காரணமாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, ஏகமனாதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்ற செய்தி ஏற்படுத்திய கலக்கம், சம்மந்தர் சீறிப்பாய்ந்ததும் பேராசிரியர் சிற்றம்பலத்தின் மனதில் பெரும் புயலை கிளப்ப பேயறைந்தவர் போலானார்.
பேராசிரியருக்கு அரசியல் பாடம் நடத்திய சம்மந்தர், நாங்கள் கூட்டமைப்பாய் செயல்படுகிறோம். மக்கள் எங்களுக்கு தான் அரசியல் தீர்வுக்கான ஆணையை தந்துள்ளனர். எப்படியான தீர்வை எம்மால் எட்டமுடியும் என்பதை எமது கடந்த பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறித்தான் மக்கள் ஆணையை பெற்றோம். அதன் பிரகாரம் செயல்பட்டு சாதகமான தீர்வை நோக்கிய நகர்வை நாம் முன் எடுக்கிறோம். நீங்கள் இந்த கூட்டமைப்பில் ஓர் அங்கம். அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் இன்னொரு அரங்கில் ஏறலாம்?
வீட்டில் இருந்தபடி புதுமனை கட்டி, இருக்கும் வீட்டின் மீது எப்படி நீங்கள் கல்வீசலாம்? எனும் சாரப்பட சம்மந்தன் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கூற பக்கத்தில் சுரேஸ் இல்லையே என கலங்கிய பேராசிரியர், ராம பாணங்கள் போல் சம்மந்தர் தன் மீது பொழிந்த கேள்வி அம்புகளால், நிராயுதபாணியான ராவணன் போல் கலங்கி, இன்று போய் நாளை வா என ராமன் ராவணனிடம் கூறியது போல், தன்னிடம் சம்மந்தர் கூறுமுன் நான் தமிழ் அரசு கட்சி சார்பாக கலந்து கொள்ளவில்லை என, வெற்றிகரமாக பொய்யுரைத்தது பின் வாங்கினார்.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜெர்மனிய படைகளின் தாக்குதலுக்கு தப்பி ஓடிய ஆங்கில படைகள் பற்றி, அப்போதைய பிரித்தானிய பிரதமரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, தனது சுருட்டை இழுத்து புகைவிட்டு விட்டு, சேர் வின்சன் சேர்ச்சில் கூறிய பிரபலமான பதில் “நாம் வெற்றிகரமாக பின்வாங்கி கொண்டிருக்கிறோம் “. சம்மந்தரின் நேரடி குற்றச்சாட்டை நியாயம் கூறி மறுக்க முடியாத வாழ்நாள் பேராசிரியர், பொய்யுரைத்து போனதேன் என்பது புரியவில்லை!.  இதை உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் செயல் அரங்கேறும் காலம் இது என கொள்வதா?
– மாதவன் சஞ்சயன் –
»»  (மேலும்)

1/24/2016

"வாசிப்பு மனநிலை விவாதம்"
பிரான்ஸ் புகலிட எழுத்தாளர்களும் வாசகர்களும் இணைந்து தொடர்ச்சியாக நடத்திவரும் "வாசிப்பு மனநிலை விவாதம்" என்னும்   வாசகர் வட்டத்தின் ஒன்று கூடல் இவ்வாரம் இடம்பெறவுள்ளது. இன்று ஞாயிறு அன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நிகழ்வானது இருபதாவது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகாலமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இதுவரை காலமும் நடந்த நிகழ்வுகளில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பற்றிய உரையாடல்களை  வாசிப்பு மனநிலை விவாத அரங்கு கடந்து வந்துள்ளது.


இவ்வார நிகழ்வில் அண்மையில் காலமான டேவிட் ஐயாவின் நினைவு நூல் பற்றிய ஆய்வும் உருத்திராவின் ஆண்கோணி,ஜமிலின் தாளில் பறக்கும் தும்பி போன்ற கவிதை தொகுப்புகள் மீதான உரையாடல்களும் சேனனின் லண்டன்காரர்கள் நாவல் பற்றிய கருத்துரையும் இடம்பெறவுள்ளன. 
»»  (மேலும்)

1/22/2016

மட்டக்களப்பு “கோட்டைபூங்கா” திறந்துவைக்கப்பட்டது.

20160120_174953.jpg20160120_180559.jpgமட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட “கோட்டைபூங்கா” 20.01.2016 புதன்கிழமை பொது மக்கள் பாவனைக்காக வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
முன்னால் அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதன், மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநார் ஆகியோரையும்; கௌரவிக்கும் வகையிலும் “பிரின்ஸ்பாலம்” மற்றும் “AKநடைபாதை” என்பன உட்பட சிறுவர் மற்றும் பெரியோரும் பொழுதைக்களிக்க உதவும் வண்ணம் இப்பூங்கா அமைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இந் நிர்மானப்பணிகள் அனைத்தும் மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி வேறு எந்தவித உதவியுமின்றி மாநகர உத்தியோகத்தர்களாலும், ஊழியர்களாலும் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநார், மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் பாஸ்கரன்,மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நேசராஜா மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பின் சாதனையாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
»»  (மேலும்)

1/18/2016

நாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்துறை பேராசிரியருமான தலித் போராளி கே.ஏ .குணசேகரம் காலமானார்

 .

நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரம் உடல் நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இன்று திடீரென இறந்தார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் வடு நூலுக்கும் முக்கியமான இடம் உண்டு.

நாட்டுப்புற இசையை தமிழகமெங்கும் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர் கே ஏ ஜிஅவர்கள். கவிஞர் இன்குலாப்பின் "மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா"பாடலை மெட்டமைத்து பாடி உலகெங்கும் பரப்பியவர் குணசேகரம் அவர்கள்.தலித் மக்களின் எழிச்சி அரசியலில் அவர் ஒரு குறியீடாக வலம்வந்தார்.அன்னாருக்கு எமது தோழமை கலந்த ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகட்டும்..

»»  (மேலும்)

1/17/2016

பாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு

நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின்  அனைவருக்கும் அகிளைழைப்பு விடுக்கின்றது.
நாளை 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு; 5 rue pierre L'Ermite, 75018 Paris இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பொங்கலுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வானது; பல்வேறு பண்பாடு சார்ந்த உணவு வகைகளுடன் கூடிய கலை நிகழ்வுகளும் கொண்ட இந்த பொங்கல் விழா மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
»»  (மேலும்)

ஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா?

(05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது பாசிச புலி பயங்கரவாதிகளால் குண்டுவைத்து கொலை செய்யப்பட்டார்.இன்று அவரது 19வது நினைவுதினம் .)
A. Thangathurai.jpg

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை திஃ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.
நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம்இ இரத்தினபுரிஇ கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.
புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.
அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றி யுள்ளார். வீதி அபிவிருத்திஇ பாலங்கள் நிர்மாணம்இ நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்திஇ சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்திஇ கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.

1971ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாவட்ட ரீதியிலான தரப்படுத்தலை த.வி.கூட்டனி எதிர்க்க முடிவுசெய்தபோது அது யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனையமாவட்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதமான சட்டம் அதை நாம் எதிர்க்க முடியாது என்று குரல் எழுப்பினார் அவ்வேளை அமிர்தலிங்கம்   இந்த இரண்டு துரையாலும் (மற்றையது இராஜதுரை)
எமக்கு ஒரே பிரச்சனைதான் என்று சொன்னாராம்.

மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.
தமிழ்இ சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத் துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரச துறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.
அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.
இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 

1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதிஇ தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.இவ்வேளை த.வி.கூட்டணி  எந்த ஒரு எதிர்ப்பு போராட்டத்தையும் செய்யவில்லை.மண் பறிபோகிறது என்று இன்றுவரை கத்தும் இக்கட்சியினர் மூதுர் தொகுதி பறிபோகையில் தங்கத்துரைக்குத்தான் தொகுதி பறிபோகிறது என்று மெளனம் காத்தனர். இதற்கு மாற்றாக வவுனியாதொகுதியில் இருந்து பிரித்து கிளிநொச்சி தொகுதியை உருவாக்குவதும் அதனூடாக மூதூரில் இழக்கப்படும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பீடு செய்வது என்று சிறிமாவுடன் தமிழரசுக்கட்சி இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையை அமிர்தலிங்கம் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.
பொதுமக்களினதும்இ தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கு இழைத்ததுரோகத்தையும் மறந்து தொடர்ந்து கட்சி  உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.

மீண்டும் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதாரஇ கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சம காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட அப்பாவிமக்கள் ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.ஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா? 

எம்.ஆர் ஸ்டாலின்
»»  (மேலும்)

1/16/2016

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தி

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தி 
»»  (மேலும்)

1/14/2016

சமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்


சமகால இலங்கை அரசியல் மீதான ஆய்வரங்கு எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று பாரிஸ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடு சஞ்சிகையின் ஆதரவில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் இந்நிகழ்வினை எதிர்வரும் 17ம் திகதி ஞாயிறன்று இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
எம்.ஆர்.ஸ்டாலின்,இரஜாகரன்,உதயகுமார்,சந்தான போன்ற அரசியல் செயற்பட்டாளர்கள் முக்கிய உரையாற்றவுள்ளனர்.உரைகளைதொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. »»  (மேலும்)

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வர் -சிவ.சந்திரகாந்தன்

சேற்றில் கால் வைத்து எமக்கு சோற்றைத்தருகின்ற உழவர்களுக்கும் அவர்களுக்கு துணையாக சூரியனுக்கும் நன்றிகூறும் இந்நன்னாளில் குரோதம், பொறாமை, பழிவாங்கும் உணர்வுகள் அற்றவர்களாகவும் அனைவரிற்கும் சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், இன ஐக்கியம், ஒற்றுமை என்பன இவ்வாண்டின் உழவர் திருநாளில் நிலைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அனைவரிற்கும் இனிய தைத்திருநாள் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிவ.சந்திரகாந்தன்
தேசிய தலைவர்
தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சி.
வெளியீடு: TMVP கட்சி காரைதீவு பணிமனை  
»»  (மேலும்)

1/13/2016

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஜனவரி 14ம் திகதி  பிற்பகல் 03.30 மணிக்கு கொழும்பு  தேசிய நூலக கேட்போர் கூட மண்டபத்தில். "புதிய அரசியலமைப்பு, பழைய நாடகம்"  என்ற கருப்பொருளில், முன்னிலை சோசலிசக் கட்சி கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள மைத்திரி-ரணில் அரசானது இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை (Constiutional Reform) மேற்கொள்ள குழுவொன்றை   நியமித்துள்ளது. இச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளுவதன் மூலம், இலங்கை மக்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடப்படும் என மைத்ரி - ரணில் அரசும், அதன் அடிவருடிகளும் பிரச்சாரம் செய்கின்றனர்.
முன்பு தமிழீழம் கோரினோரும்; அதற்காக பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் பலியிட்டோரும் கூட  நம்புகின்றனர், அறுபது ஆண்டு காலத் தேசிய பிரச்சினை புதிய இலங்கை அரசின் அரசியல் யாப்பு திருத்ததின் ஊடாக முடிவிற்குவருமென!
இது எந்த வகையிலும் எந்த மக்களினதும் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. பசி, பட்டினி, வறுமை, வேலை வாய்பின்மை, போர்க்காயங்கள், வடக்குக் -கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார அழிவுகள், இயற்கை வள பாதிப்புகள், தரமான கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் எவற்றிக்கும் இத்திருத்தம் தீர்வைத் தரப்போவதில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான உரிமைகள் எவற்றையும் இந்த சீர்திருத்தம் வழங்கப் போவதில்லை.      
மேற்கு நாடுகளினதும், ஏகாதிபத்தியங்களினதும் சுரண்டலை அதிகரிக்கவே தற்போதய அரசியல் யாப்புத் திருத்தும் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் லாபம் அடைப்போபவர்கள் ஒடுக்குமுறையாளர்களும், சர்வதே மற்றும் உள்ள நாட்டுக் கொள்ளைக்காரர்களும், சுரண்டல் வாதிகளுமே.   
இதன் அடிப்படையில், ஒடுக்கப்படும் மக்கள் என்ன செய்யப் வேண்டும் என்பதை விவாதிக்கவே "புதிய அரசியலமைப்பு, பழைய நாடகம்"  என்ற கருப்பொருளில், முன்னிலை சோசலிசக் கட்சி கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
»»  (மேலும்)

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ‘மாமனிதன்’ எம் சி சுப்பிரமணியம்அ.தேவதாசன்
தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ்
12-01-2016

mc6  “அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது –
ஆனால் அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது.”   : எம்.சி.சுப்பிரமணியம்

இலங்கை வடபுலத்து சாதிய கட்டமைப்பு என்பது இன்றுவரை அசைக்கமுடியாமலே இயங்கி வருகிறது. ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது கல்வி, பொருளாதாரம் ஆகும்;. யாழ்ப்பாண வட புலத்தில் சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது மிக மிக தாமதமாகவே கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது இன்னும் பல ஆண்டுகள் பின் தங்கியே வருகிறது. ஆங்கிலேயர்கள் இலங்கையை தமது ஆட்சிக்குள் கொண்டுவந்த ஆரம்ப காலத்திலேயே உயர் சாதியினர் எனச் சொல்லப்படும் வெள்ளாளர்களுக்கு கல்வி வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிட்டன. ஆனால் அக்கல்வியை தாம் மட்டுமே சுவீகரித்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு சென்று சேரவிடாமல் தடுப்பதற்கும் பெரும்பாடு பட்டனர். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை தமக்கு அடிமை குடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வியை தடுத்தமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனாலும் இவர்களது கபட நோக்கத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த சிலர் தாம் படித்தே தீரவேண்டும் தமது இனமக்கள் மீண்டெழ வேண்டுமென்ற இலட்சியத்துடன், பல        அவமானங்களையும், கொடுமைகளையும், தீண்டாமைகளையும் எதிர்கொண்டு வெள்ளைக்கார பாதிரிமாரின் தயவில் படித்து முன்னேறினர். அதுமட்டுமன்றி தாம்   சார்ந்த சமூகத்தினருக்கும் ஒளி விளக்காக திகழ்ந்தார்கள். அந்த வகையில் ஜோய் போல், எம்.சி.சுப்பிரமணியம் போன்ற இன்னும் சிலரை குறிப்பிடலாம்.
எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 27-09-1917 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். ஐந்து வயதில் மெதடிஸ்த கல்லூரியில் தொடங்கிய கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் முடித்துக்               கொண்டார். தாழ்த்தப்பட்ட சாதியினர் பாடசாலைக்கு செல்வதற்கே மறுக்கப்பட்ட காலத்தில் பல அவமானங்களை தாங்கியவாறும், பல எதிர்ப்புகளின் மத்தியிலும்;தான்  தனது கல்வியை தொடர்ந்தார். உயர்சாதியினர் வாங்குகளில் இருந்து படித்தபோது, இவர் வெறும் தரையில் இருந்தே படிக்க முடிந்தது. இது போன்ற அவலமான நிலைமைகள் அவருக்குள்ளேயே சாதியம் மீதான கோபத்தையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  மறுக்கப்படும் கல்வி உரிமைகள்  கிடைக்கவேண்டும் என்ற ஆவேசத்தையும் தூண்டிவிட்டது. இதனால்தான் அவர் படித்து முடித்து அரச உத்தியோகம் கிடைக்கப்பெற்றும் அவைகளை தூக்கி எறிந்துவிட்டு முழுநேர சமூகவிடுதலைப் போராளியாக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
1944 இல் தலித் குடும்பத்தைத் சேர்ந்த பெண்ணின் இறந்த உடலை தகனம் செய்வதற்காக
வில்லூண்டி மயானத்தில் எடுத்து சென்று எரிக்க முற்பட்டபோது அதை பொறுக்காத உயர் சாதியினர் துப்பாக்கிச் சூடு செய்தனர். இதன்காரணமாக முதலி சின்னத்தம்பி எனும் தலித் கொல்லப்பட்டார். இதற்கெதிரான போராட்டத்தில் முக்கிய பங்காளராக களம் இறங்கிய எம்.சி. தொடர்ந்து சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்திலும் பங்கு கொண்டு பல செயற்திட்டங்களை உருவாக்கினார்.
யாழ்ப்பாணத்தில் “சன்மார்க்க வாலிபர் சங்கம்” எனும் அமைப்பை உருவாக்கி அதனூடாக பல துடிப்புள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
சாதியக் கொடுமையை உடைத்தெறிய சரியான பாதை கார்ல் மார்க்ஸின் தத்துவமே என்பதை அறிந்துகொண்ட எம்.சி இடது சாரியக் கருத்துடைய பொன்;.கந்தையா, வைத்திலிங்கம், கார்திகேசன் போன்றோரோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.
சன்மார்க்க வாலிபர் சங்கம் இயங்கி வந்த காலத்திலேயே வள்ளுவர் சபை, ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம் போன்ற அமைப்புக்களும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக இயங்கி வந்தன. இவ் அமைப்புக்களில் யோய் போல், இராசேந்திரனார், சூரனார் போன்றோர் முனைப்புடன் செயற்பட்டு வந்தனர். சாதிய கொடூரத்தை தோற்கடிக்க தாம் ஒன்றுசேர வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1942 இல் யோய் போல் தலைமையில்  சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பை உருவாக்கினர்.
இவ்வமைப்பு கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தது. எம்.சி. அவர்களின் தலைமை திறனையும், போராட்ட குணாம்சத்தையும் தெரிந்து கொண்ட மகாசபையினர் 1952 இல் மகாசபையின் தலைவர் பொறுப்பை வழங்கினர்.
இவர்களது தொடர்ச்சியான போராட்டத்தின் பயனாக 1956 இல் நல்லூர் கந்தசாமி கோயில் முதன் முதலாக ஒடுக்கப்பட்ட சாதியினர் உள்ளே சென்று வணங்குவதற்கு திறந்து விடப்பட்டது. கன்பொல்லை, கரவெட்டி மக்கள் மீதான உயர்சாதியினரின் தொடர்ச்சியான கொடுமைகளை அரசுக்கு உணர்த்தும் முகமாக சோல்பரி பிரபுவை தொடர்புகொள்ள எம்.சி. அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டார்.  இதற்கு அப்போது பருத்தித்துறை தொகுதி          பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு தடுத்த வண்ணமே இருந்தார். அதையும் மீறி எம்.சி. அவர்கள் தனது கைப்பட சோல்பரி பிரபு அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு அமைய சோல்பரி பிரபு நேரடியாக வந்து கன்பொல்லை கரவெட்டி கிராமங்களை பார்வையிட்டதுடன் படமும் பிடித்து சென்றனர். இதனால் கோபமுற்ற மேல்சாதியினர் அக்கிராமங்களின் குடிசைகளை தீக்கிரையாக்கி அம்மக்களை அகதிகளாக்கி அலையவிட்டனர். எம்.சி. அவர்களையும் தாக்கி அழிப்பதற்கான திட்டங்களை தீட்டினர். எனினும் அக்காரியத்தை அவர்களால் நிறைவேற்றமுடியவில்லை.
எம்.சி. அவர்களின் தலைமையில் மகாசபை ஆரம்பித்து வைத்த சமூக விடுதலைப் போராட்டம் மேல்சாதியினருக்கு மட்டுமின்றி தமிழ் அரசியல் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோருக்கும் பெரும் தாக்கத்தை யும் பின்னடைவையும் ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் அங்கத்தினர்களாகவும் போராளிகளாகவும் செயற்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இடதுசாரியக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இந்நிலையில் 1960 இல் இடது சாரியக்கருத்தாளர்களில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ரசிய சார்பு, சீன சார்பு என
பிரியும் நிலை ஏற்பட்டது. மகாசபையில் இருந்து செயற்பட்ட டானியல், எஸ்.ரி.நாகரெத்தினம் போன்ற பலர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் இணைந்து ‘அடித்தால் திருப்பி அடிப்போம்’ எனும் கருத்தியலோடு போராட முற்பட்டனர். இவ்விரண்டு அமைப்புகளின் போராட்ட முறை வேறுபடினும் சாதிய ஒழிப்பு கொள்கையில் ஒரு வண்டிலில் பூட்டிய இரு குதிரைகள் போல போரிட்டனர்.
கல்வி மறுக்கப்பட்டிருந்த வட பகுதி தலித் மக்களுக்கு 1956 இல்  எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் தொடர்ச்சியாக மகாசபை
விடுத்த கோரிக்கையின்  பயனாக 15 பதினைந்து பாடசாலைகள் வடபகுதி எங்கும் உருவாக்கப்பட்டது.
1 – குட்டிய புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – கோப்பாய்
2 – சண்டிலிப்பாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3 – கட்டுவன் புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
4 – அச்சுவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
5 – சுதுமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
6 – இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – பருத்தித்துறை.
7 – புலோலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
8 – மட்டுவில் தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
9 – வசந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை -காங்கேசன்துறை.
10- மந்துவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
11- சரசாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
12- கைதடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
13- வரணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
14- வெள்ளம் பொக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – சாவகச்சேரி
15- பொன் கந்தையா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – மாணிப்பாய்.மேற்படி பாடசாலைகளில் கற்பித்தவர்களும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அதிலும் யாரும் அரசால் நியமிக்கப்படாத நிலையில் சம்பளம் பெறாமல் தலித் மக்களின் மேன்மை கருதி இலவசமாக
தொண்டாற்றினர். பின்னாளில் மகாசபையின் தொடர்ச்சியான கோரிக்கைக்கிணங்க அரச நியமனம் பெற்ற    ஆசிரியர்களாயினர்.  இப்பாடசாலைகள் பல ஆரம்பிக்கபட்ட காலத்தில் உயர் சாதியினரால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றது.

முதலியார்களும், விதானைமார்களும் உயர்சாதியிலேயே நியமிக்கப்பட்டிருந்தமையால் தலித்துக்கள் அவர்களது வீடுகளுக்குள் செல்லமுடியாமல் தமது அரச காரியங்களை செய்வதற்கு பெரும் வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த வேளையில் மகாசபை அரசாங்கத்தில் கோரிக்கை வைத்ததன் காரணமாக வட பகுதியில் பல கிராமங்களில்  சமாதான நீதிவான் (ஜே.பி) பதவிகள் பல தலித்துக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் காரணமாக தங்கள் அலுவல்களை கூச்சமின்றி தேக்கமின்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. இப்படி தலித்துக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவர்களில் முக்கியமானவர் எம்.சி.ஆகும். இவரது அயராத உழைப்பையும் தியாகம் பொருந்திய வாழ்க்கையையும் கவனத்தில் கொண்ட மக்கள் அவர் தனது பணியை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் தமது அன்பை வெளிப்படுத்தவும் தலித் மக்களால் நிதி  சேகரிக்கப்பட்டு ஓர் அழகான கார் வண்டியை பரிசாக வழங்கினர்.
எம்.சி. அவர்களது தன்னலமற்ற  சேவையினையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தினையும் உணர்ந்த,  1970 இல் அமைந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிகளின் கூட்டு அரசு அவரை சிறுபான்மைத் தமிழர்களின் சார்பில் நியமன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். இத்தெரிவே பின்னாளில் திரு.இராஜலிங்கம் போன்ற தலித் மக்களின் பிரதிநிதிகளுக்கு தமது கட்சியில் வேட்பாளர் வாய்ப்புகளை கொடுத்து பாராளுமன்றம் அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தினை தமிழரசுக் கட்சியினருக்கு ஏற்படுத்தியது.
இவர் பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்த காலத்தில பல நூறு தலித் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததுடன், ஆயிரக்கணக்கானவர்களுக்கு கல்வி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். 1956 இல் கொண்டு வரப்பட்ட ‘சமூக குறைபாடுகள் ஒழிப்புச்சட்டம்’ சரியான முறையில் இயற்றப்படாமையால் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 1974 இல் மேற்படி சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
  1974 இல்  எம்.சி. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் உடுப்பிட்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்புகையில் “எளிய சாதி” காரில் செல்வதா என்ற எரிச்சல் காரணமாக அவர் சென்ற வாகனத்திற்கு உயர் சாதியினரால் கைக்குண்டு வீசப்பட்டது. அதில் எம்.சி. யோடு சேர்ந்து பயணித்த அன்ரனி, வைத்திலிங்கம், டொமினிக்ஜீவா ஆகியோர் காயங்களுடன் மயிரிழையில்  உயிர்தப்பினர்.
தலித்திலக்கிய முன்னோடி டானியல் அவர்கள் மரணித்தபோது அவரது நினைவாக ஈழநாடு வாரமலரில் (20-04-1986) எம்.சி. அவர்கள் கீழ்வரும் கவிதையை எழுதியிருந்தார். அதுவே எம்.சி. இன் இறுதிக்கவிதையாகவும் இருந்தது.அடிமை விலங்கறுப்போம் – அதில்
ஆயுதங்கள் செய்திடுவோம்.
கொடுமை மிக மலர்ந்த இக்
குவியத்தை மாற்றிடுவோம்.அவர் தன்வாழ் நாளில் தலித் மக்களின் மீட்சிக்காக பல சாதனைகளை நடத்தி முடித்தார். 12-01-1989 இல் சுகயீனம் காரணமாக இம்மண்ணை விட்டு பிரிந்தாலும், எங்கள் செயலோடும், சிந்தனையோடும் என்றும் வாழ்கிறார்.  எம்.சியும் அவரோடு இணைந்து உழைத்த போராளிகளும் ஏற்றி வைத்த ஒளியில்தான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று உலகத்தை பார்க்கிறோம். ஆனாலும் இன்னும் இம்மக்கள் பூரணத்துவமான
மேம்பாட்டை பெற்றுக்கொள்ளவில்லை. சாதியம் யுத்த காலங்களில் துப்பாக்கி நிழலில் மறைந்திருந்ததே தவிர        அது அழிந்து விடவில்லை. இன்னும்  சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் புதுப்புது வடிவங்களோடு  தமிழ்  தேசியம் எனும் காப்பரணின் துணையோடு வாழ்ந்துகொண்டே இருக்கிறது. இவைகளை உடைத்தெறிய எம்.சி சுப்பிரமணியமும், டானியலும், எஸ்.ரி.நாகரெத்தினமும்  எம்மிடமிருந்து மீண்டும் மீண்டும் தோன்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்களை மறந்து விடாமல் என்றென்றும் அவர்களை நினைவில்  கொள்வோம்.

»»  (மேலும்)

1/10/2016

குமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

இன்று கோகாலை நீதிமன்றில்; குடியியல் சட்டத்தினை மீறியதான, குமாரின் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச தரப்பு சட்டத்தரணி சமூகமளித்திருக்காததன் காரணத்தால் வழக்கினை விசாரணைக்கு உட்படுத்த முடியாததன் காரணமாக வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். குமாரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்படுள்ளது.
குமார் தனது இலங்கை குடியுரிமையினை மீள பெற பல விண்ணப்பங்களை குடிவரவு அமைச்சிற்கு விண்ணப்பித்தும் பதில்கள் ஏதும் கிடையாத நிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது. ஜனாதிபதி, பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை குமாருக்கு குடியுரிமை வழங்கத்தான் வேண்டும், அதில் தமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது ஆனால் இது சட்டப்பிரச்சனை என சட்டத்தை நோக்கி கையை நீட்டுகின்றனர். ஆனால் நீதிமன்றமோ இது சட்டப்பிரச்சினை அல்ல, அரசியல் பிரச்சனை என அரசாங்கத்தை நோக்கி கையை நீட்டுகின்றது.
சிங்கப்பூர் மகேந்திரனுக்கு 24 மணி நேரத்தில் குடியுரிமை வழங்கி மத்திய வங்கி ஆளுநராக்கவும்; கடவுச்சீட்டு மோசடி செய்த விமல் வீரவன்சாவை, பிரதமர் தலையிட்டு கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றவும் அரசாங்கத்தால் முடியும். ஆனால் இலங்கையில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய செயற்பாட்டளரான குமாருக்கு குடியுரிமையினை மீள வழங்க இத்தனை இழுத்தடிப்பு. சட்டம், நீதி என்பது இலங்கையில் எப்போதும் நாட்டை கொள்ளை அடிப்பவர்களை பாதுகாப்பதற்கே ஒழிய; மக்களுக்கோ இன்றி மக்கள் நலன்களிற்க்காக செயற்படுபவர்களிற்கு அல்ல என்பதே உண்மை
»»  (மேலும்)

1/08/2016

கருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புகளும்

கருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புகளும் dfdfdfdfdfdf
»»  (மேலும்)

தமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்?

தமிழ்நாட்டின் நாகைமாவட்டம் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்கிற தலித் முதியவர் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதுமை காரணமாக மரணமடைந்தார்.
அவரது சடலத்தை வழக்கமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை மோசமாக இருந்ததால் அருகில் இருக்கும் வழுவூர் என்கிற ஊருக்குள் இருக்கும் சாலை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அவரது குடும்பத்தவரும் உறவினர்களும் முயன்றனர்.
ஆனால் அதற்கு வழுவூர்க்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழுவூர் என்பது தலித் அல்லாதவர்கள் வசிக்கும் ஊர். அந்த ஊரில் இருக்கும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மரணமடைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழுவூர்ப்பாதை வழியாக செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும்படியும், அதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கும்படியும் உத்தரவிட்டது.
ஆனாலும் வழுவூர்க்காரர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பின்னணியில் காவல்துறையினர் செல்லமுத்துவின் சடலத்தை பலவந்தமாகக் கைப்பற்றி ஊருக்கு வெளியில் இருக்கும் பழைய பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அதை எதிர்த்த இறந்தவர்களின் உறவினர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழோசைக்கு விவரித்தார் மயிலாடுதுறையில் இருக்கும் செய்தியாளர் ஏ இளஞ்செழியன்.
»»  (மேலும்)

அய்யய்யோ ஆபத்து

 -Résultat de recherche d'images pour "நோர்வே" இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். 


நோர்வே வெளிவிவகார அமைச்சரை உத்தியோகப்பூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 10.25 மணிக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. வரவேற்பைத் தொடர்ந்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் பேச்சு நடத்தவுள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு வர்த்தக மாநாடு ஒன்றிலும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்டும் அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே, அந்த முயற்சியில் தோல்வியடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையுடன் அரசியல் உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளது என்று ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. -
»»  (மேலும்)

1/06/2016

கல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.நா.ராஜிதா மருத்துவபீடத்திற்கு தெரிவாகி சாதனை

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.ககு.பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் மாணவி செல்வி.நா.ராஜிதா உயிரியல் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி 1ஏ, 2பி பெறுபேற்றினைப் பெற்று (மாவட்டநிலை- 25) கல்லூரியின் வரலாற்றிலும் கல்குடா கல்வி வலயத்தின் வரலாற்றிலும் முதல் தடவையாக மருத்துவபீடத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.


கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பாரிய முயற்சியின் பயனாக மட்.ககு.பேத்ததாழை விபுலானந்தாக் கல்லூரி 1000 பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு 1ஏபி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு நவீன தொழினுட்ப ஆய்வுகூட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, மிகவும் திறமைமிக்க ஆசிரியர்களையும் நியமித்து அதிபர் திரு டி.சந்திரலிங்கம் அவர்களது வழிகாட்டலின் கீழ் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீகிருஸ்ணராஜா மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று மாணவியை வாழ்த்தியதோடு அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.

»»  (மேலும்)

1/04/2016

திருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்


திருகோணமலை மாவட்டத்துக்கான
ஒரு பல்கலைக் கழகம்

1950 களில் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தொடங்கப் பட்டு அது திருகோணமலையிலேயே அமைக்கப் படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.ஆனாலும் அன்றய அரசியல் சூழ் நிலைகள் அது அமையாமலேயே முடிந்து போன கதையானது.
1990 களில் திருகோணமலை பல்கலைக் கழக கல்லூரி உருவானது.பின்னாளில் சிறிது காலம் சிறிஜெயவர்த்தன புர பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் இயங்கியது.2001ல் கிழக்குப் பல்கலைகழக வளாகமாக இணைக்கப் பட்டு இன்றுவரை இயங்குகிறது.
இன்றய சமூக பொருளாதார அரசியல் கல்வி கலாசார பின்னணியில் திருகோணமலை வளாகம் கிழக்குப் பல்கலைகழகத்திலிருந்து பிரிந்து தனியான பல்கலைக் கழகமாக மாற்றப் பட வேண்டும்.
ஏனய பல்கலைக் கழகங்களில் இல்லாத துறைகள் உருவாக்கப் படவேண்டும்.
1.கப்பல் கட்டுமான தொழில் நுட்பம்
2.கடல் தொழில் நுட்பம்
3.நாட்டுப் புறவியல்
4.ஈழத்தமிழர் இசை நடன மரபு
5.தொல்லியலும் மானிடவியலும்
ஆகிய புதிய துறைகளை முன்மொழியலாம்.
மூதூர் பிரதேசத்தில் ஒரு வளாகத்தையும் கிண்ணியா தம்பலகாமம் பிரதேசத்தில் மற்றொரு வளாகத்தையும் உருவாக்கலாம்.
திருகோணமலை கல்விமான்களும்,சமூகஆர்வலர்களும் அரசியலாளர்களும் இணைந்து இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபடவேண்டும். இதற்கான ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படவேண்டும்.
பாலசுகுமார்
முன்னாள் பீடாதிபதி
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்.

நன்றி முகனூல் 

»»  (மேலும்)

1/01/2016

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்»»  (மேலும்)