Election 2018

5/02/2016

மட்டக்களப்பு சிறையிலிருந்து ஒரு மேதின செய்தி(மட்டக்களப்பு சிறையிலிருந்து தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவரும் கிழக்குமாகாண முதல் முதலமைச்சருமாகிய சிவ.சந்திரகாந்தன் விடுத்த ஒரு மேதின செய்தி.இது இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் மேதின ஊர்வலத்தில் வினையோகிக்கப்ப்பட்டது.)


எமது தேசத்தை வளம்படுத்தும் தொழிலாளர்களே!வாழ்நாள்முழுக்க அடிமைகளாய் உழைத்து தேய்ந்து மாண்டுபோய்க்கொண்டிருந்த அமெரிக்க தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காய் போராட தொடங்கிய மாதமே இந்த மே மாதம் ஆகும். சிக்காக்கோ நகரிலே தொடங்கிய அந்த போராட்டம் அமெரிக்க தேசமெங்கும் பரவி உலக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவேதான்  மானிட குல வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத நாளாக இந்த மே மாதம் இருக்கின்றது.

அதனைப்படையில் 1889ம் ஆண்டு பிரான்சின் தலைநகராம்  பாரிஸ்நகரிலே கூடிய "சர்வதேச சோசலிச தொழிலாளர்களின்  மாநாடு" எட்டு மணிநேர வேலைக்காக குரல்கொடுப்பதற்காக   இந்த மே மாதத்தின் 1ம் நாளை பிரகடனம் செய்து, அதற்காக "உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என அறை கூவியது. அதனூடாக சர்வதேச தொழிலாளர்களின் உரிமையையும் ஒற்றுமையையும் உயர்த்தி பிடிக்கும் ஒருதினமாக இந்த மேமாத முதலாம் நாள் இருந்து வருகின்றது. 
தொழிலாளர்களின் வாழ்வு மேம்படவும் அவர்களின் எதிர்காலம் சுபிட்சம் பெறவும் பாடுபடுபவர்கள் இந்த மேதினத்தை தொழிலாளர் வர்க்கத்தின் திருநாளாக கொண்டாடிவருகின்றனர். எனவேதான் கிழக்குமாகாணத்தின் விவசாய /மீன்பிடி /மற்றும் கூலிதொழிலாளர்களின் உரிமைக்குரலாக எழுந்து நிற்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாம்  கடந்த ஆறு வருடங்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பு மண்ணில் இந்த மேதினத்தை கொண்டாடி வருகின்றோம். குறிப்பாக நகரங்களில் மட்டுமே மையம்கொள்ளும் மேதினத்தினை வரலாற்றில் முதல் தடவையாக விவசாயிகளின் படுவான்கரை மண்ணில் நடத்திக்காட்டினோம்.

துரதிஷ்டவசமாக கடந்த அறுபது எழுபது வருடங்களாக   தமிழ் தேசியவாதம் என்னும் போர்வையில் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரசியலே வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் வியாபித்துள்ளது . ஆனால் எமது அரசியல் உருவாக்கமானது தமிழ் பேசும் மக்கள் என்னும் பெயரில் நடத்தப்பட்டுவரும்   மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றான  ஒரு சிந்தனையை தூண்டியது.    யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் பல்கலைக் கழகங்களிலிருந்தும் மட்டுமே தலைவர்கள் பிறக்கமுடியும் என்கின்ற வரலாற்றை மாற்றி எழுதினோம். மட்டக்களப்பில் இருந்து எழுந்து நின்ற ஒரு சாமானிய மனிதனூடாக  ஊடாக அதனை சாதித்து காட்டியவர்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகளேயாகும்.

 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் எமது மக்களின் வாழ்வை மக்களின் வாழ்வை தின்றுஏப்பம் விடுவதற்கு இந்த மேட்டுக்குடி அரசியல் வாதிகளே காரணமாகும். தமிழரசுகட்சியினரே எம்மை பிழையாக வழிநடத்தியவர்களாகும். அவர்களே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். தனித்தமிழீழம் என்னும் வட்டுகோட்டை தீர்மானத்தை  நிறைவேற்றினர். புத்தகம்கூட பிடிக்க தெரியாத வயதில் எமது கரங்களில் ஆயுதங்களை திணித்தவர்கள் இந்த தமிழரசு கட்சியினரே   இப்போது ஏதுமறியாத அகிம்சைவாதிகளாக நடிக்கின்றனர்.


1983ல் யுத்தம் அகோரமானபோது எமது மக்களை கைவிட்டுவிட்டு இந்தியாவிற்கு ஓடிப்போய் தமிழ்நாடு அரசவிருந்தினர்களாக சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். இந்த தலைவர்களின் குடும்பங்களும் வாரிசுகளும்   இன்று ஐரோப்பியர்களாக /கனடியர்களாக /அமெரிக்கர்களாக / தொழிலதிபர்களாக வலம் வருகின்றனர்.ஆனால் எமது மண்ணிலே யுத்தத்துக்கு முகம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்/எமது ஏழை/எளிய மக்கள்தான். தமது குழந்தைகளை இழந்தவர்கள். எமது வரவானது அந்த கொடிய காலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. யுத்தத்தின் அடிபாடுகளுக்குள் இருந்து எமது மக்களை மீட்டெடுத்தது. அடித்தள மக்களின் உட்கட்டுமான அபிவிருத்திகள் இன்றி எமது சமூகம் வளம் பெற முடியாது. எமது சமூக பலம் கட்டியமைக்கப்பட்டால் மட்டுமே எமக்கு எதிர்காலம் உண்டு என்பதை   நெஞ்சிலே நிறுத்தி நாம் சேவையாற்றினோம்.

இருபது வருட காலம் துருப்பிடித்து கிடந்த மாகாண சபைகளுக்கு நாமே உயிரூட்டினோம், நாமே கல்வித்துறையில் பாரிய அபிவிருத்திகளை செய்தோம்.நாமே நூல் நிலையங்களையும் பிரதேச சபைகளையும் நிர்மாணித்தோம்.  நாமே எமது மக்களின் வீதிகளை புனரமைத்து அன்றாட ஜீவனோபாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு பாதைகளை திறந்தோம்.கிழக்கு மாகாணத்தில் மட்டும் இருபது பாலங்களை கட்டுவதற்கு  நாமே அடிகோலிட்டோம். மட்டக்களப்பு நகரை மீண்டும் புது பொலிவுற  கட்டி எழுப்பியது நாமேதான் என்பதை என்றும் எவரும் மறக்க முடியாது. இவற்றின் ஊடாகத்தான் எமது மக்களின் வாழ்வு  இயல்பு நிலைக்கு திரும்பியது.

தமிழரின் அரசியல் என்பது தமிழரசுக்கட்சியின் ஆயுள் கால கொந்துராத்து அல்ல என்பதை கிழக்கு மாகாணசபையை உருவாக்கியதனூடாக அம்பலப்படுத்தினோம். மக்கள் நலன் நாடும் ஒரு மண்ணின் மைந்தனால்தான்  எமது மக்களையும் அவர்கள் வாழ்வையும் வளம்படுத்த முடியும் என்று  நிரூபித்து காட்டினோம்.  ஆனால் இந்த சமூக மாற்றத்தை இந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. கிழக்குமாகாண சபையை பறித்தெடுத்து இன்று இனவாதிகளின் கைகளில் ஒப்படைத்தனர்.வடக்குமாகாணசபையை பொறுப்பெடுத்து ஊழல்களின் மையமாக சீரழித்து வைத்திருக்கின்றனர் .

அநாகரிக மனித பதவிகளின் அற்ப ஆசையாலும் வெற்றியின் பித்தத்தாலும்  எம்மை நோக்கி இன்று அரசியல் பழிவாங்கலை அரங்கேற்றி இருக்கின்றனர். கிழக்கிலே உருவான இந்த வரலாற்று மாற்றத்தை அழித்தொழிக்க யாருடன் இவர்கள் சேர்ந்து சதி செய்கின்றனர் என்பதை எமது மக்கள் உணர்வார்கள்.கொழும்பிலே கொஞ்சி குலாவிகொண்டு வடக்கு கிழக்கிலே மார்தட்டி பேசுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். தொழிலாள வர்க்கத்தின் விருப்பு வெறுப்புக்களை இந்த மேட்டுகுடிகளால் புரிந்து கொள்ள முடியாது.கடந்த நூற்றாடு கால சிந்தனைகளுடன் நாம் இன்றைய உலகை எதிர்கொள்ள முடியாது.எமது அரசியல் பாதையில் மாற்றங்கள் தேவை.

இன்று நமது நாட்டிலே தொழிலாளர்கள் சொல்லொண்ண துயரங்களை அனுபவித்து வருகிறார்களே,அதற்கான தீர்வு பற்றி யாரவது கவலைபடுகிறார்களா? ஏழைவிவசாயிகளும்,மீனவர்களும்,கூலித்தொழிலாளர்களும் ,மூட்டை சுமப்பவர்களும் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் குறித்து எந்த அரசியல்வாதிகளாவது குரல்கொடுக்கிறார்களா? எமது தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயல்பாடுகள் மட்டுமே கைகொடுக்கும்.மாறாக உரிமை, உரிமை என்று  போலி கோஷம் எழுப்பும் கூட்டமைப்புகாரர்களால் எமது ஏழை மக்களின் வாழ்வு சிறக்க எதையாவது உருப்படியாக செய்ய முடிகிறதா? எனவேதான் இந்த மேதினத்தில் நாம் புதியதாய் எழுவோம் என உறுதி கொள்வோம்.

*தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள் ஓங்குக!

*உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று அறை கூவல்  விடுக்கும் இந்த நாளிலே இன, மத,--பேதங்கள்  கடந்த  தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவோம்.

*இலங்கையின் எதிர்கால அமைதிக்கும் அபிவிருத்திக்கும் இன, மத,--பேதங்கள்  கடந்த  தொழிலாளர்களின் ஒற்றுமையை வழிவகுக்கும் என உரத்து கூறுவோம்.   


தலைவர் சி.சந்திரகாந்தன் 
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 
 01/05/2016
மட்டக்களப்பு

0 commentaires :

Post a Comment