5/24/2016

எல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் மலையகம்...... # அரசியலுக்கு அப்பால்...... எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திலகர் மனம்திறக்கிறார்

  நேற்றைய நாள் களப்பணியில் உடற்சோர்வை விட உளச்சோர்வே அதிகமாகியது. காலை ...9 முதல் இரவு 9 வரை களத்தில் இருந்தேன். அம்பகமுவ பிரதேசத்தை அண்மித்த வட்டவல (குறுக்குவாடி டம்பல்ஸடோ, குருவத்தை வுட்ஸ்டாக் ) இவை கண்டி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தோட்டங்கள். நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஊவாக்கல மூன்றாம் பிரிவு . அங்கே மக்களின் குற்றச்சாட்டு கூட ஊவாக்கல பிரிவுக்கு வரும் அபிவிருத்தி திட்டங்கள் ஊவாக்கல 3ம் இலக்க பிரிவுக்கும், வெள்ளிமலை பிரிவுக்கும் வருவதில்லை என்பதாகும். ஊவாக்கல மெராயா நகரை அண்மித்த தோட்டமாயினும் மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மூன்றாம் பிரிவும், வெள்ளிமலையும் மேலே வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள தோட்டங்கள். 

அடுத்தது வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோணபிட்டிய தோட்டம். கோணப்பிட்டிய பிரிவில் மறைந்த அமைச்சர் பெ.சந்திரசேகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத்திட்டம். ஒரு கிராமம் போல காட்சி தரும் இந்த வீடுகள் தற்போது நிலத்தாழிறக்ககத்துக்கு உள்ளாகி மண்சரிவு ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. அதே தோட்டத்தின் இன்னுமொரு பிரிவு மெரிகோல்ட். இந்த பெயருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அமைந்துள்ளது. மண்சரிவு மாத்திரமல்லாது மக்கள் மனதளவிலும் சரிந்தவர்களாகவே உள்ளனர்.
மிகவும் பின்தங்கிய இந்த லயன் குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவை கண்டி மாவட்ட எல்லை (மறுமுனையில்) யில் அமைந்துள்ளன. அதேபோல 'நாடு' ( சிங்கள கிராமங்கள்) களின் எல்லையில் அமைந்துள்ளன. 


இந்த மக்களுக்கான இறுதித் தீர்வும் புதிய தனி வீடுகள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், எல்லைப்புறத்தில் வாழும் மக்கள் என்ற வகையில் பௌதீக தேவைகளுக்காக கடந்து 'உளவள ஆலோசனைகளும்' தேவைப்பாடுகளும் அவசியம் என உணர முடிகின்றது. ஒரு லயன் குடியிருப்பை வேலிகளையும் பற்றைகளையும் விலக்கி கடந்து கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அவர்களது வாழிடமும் தோற்றங்களும் நெஞ்சை கனக்க செய்யுமாப்போல் அமைந்துவிட்டன. மனதளவில் சோர்வடைந்து நடை தளர்ந்தே தங்குமிடம் திரும்பினேன்.
அரசியல் அரங்கில் அடியெடுத்து வைக்குமுன்னர் செயற்பாட்டாளனாக பல்வேறு தளங்களில் பணியாற்றிய அனுபவமுண்டு. அரசியல்வாதிகளை விமர்சனம் செய்ததுமுண்டு. இப்போதும் விமர்சனம் மற்றும் சுய விமரசனத்தினூடாகவே இந்த அரசியலை முன்னெடுப்பவன் என்ற வகையில் அரசியல் வகிபாகத்தினூடாக உள்ள அதிகாரங்களைக் கொண்டு குறைந்த பட்சம் தீர்வுகளை நோக்கி நகரக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த நிலையில் தனியே அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதை மாத்திரம் இலக்காக கொள்ளாது தம்மால் இயன்ற வழிகளில் சமூக ஆற்றுப்படுத்தல், உளவள மேம்படுத்தல், தகவல் திரட்டல். பணிகளை ஆர்வமுள்ள அன்பர்கள் முன்னெடுக்க வெளியொன்று திறந்தே கிடக்கிறது. இந்த பணி ஊடகம் சார்ந்து செயறபடுவோருக்கும் பொருந்தும். இந்த இயக்கச் செயற்பாடுகளின் மூலம் வெளிப்படும் உண்மைகளையும் தகவல்களையும் மீண்டும் 'அரசியல் செயற்பாட்டாளர்களை அவதூறு செய்வதற்கு மாத்திரம்' பயன்படுத்தாமல் குறித்த மக்களின் மீட்சிக்கான வழிமுறைகளுக்காகவும் கையாள வேண்டும் எனவும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.


நூறாண்டு கால பிரச்சினைகளை அரசியல்வாதிகள் கையில் மட்டுமே தீர்வுதேடி ஏனையோர் வாளாவிருப்பது எவ்வித்த்திலும் சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்லாது என எண்ணத் தோன்றுகிறது. அது இன்னுமோர் நூறாண்டுகளுக்கு நம் மக்களை பின்னோக்கியே தள்ளும் அபாயத்தைக் காட்டி நிற்பதாக உணர முடிகிறது. இணையமும் முகநூலும் நம் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கு உதவும் அதேவேளை உள்ளூரில் மக்களின் அவலத்தில் இருந்து மீட்க இதே முகநூல் சவாலாக அமைந்துவிடும் சாத்தியங்களும் உண்டு. முகநூலில் கவலைப்பட்டு விடுவதனால் மாத்திரம், விமர்சனம் செய்து விடுவதனால் மாத்திரம் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் போவதில்லை என நம்பகரமாக தெரிகிறது. ஏனெனில் இங்கே 'எல்லைப்புறம்' என குறிப்பிடப்படுவது 'காடுகளின்' எல்லைகள் மாத்திரமல்ல 'நாடு' களின் எல்லைகளும் தான் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

*நன்றி முகனூல்

0 commentaires :

Post a Comment