5/30/2016

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் காலமானார்

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில்
காலமானார். இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்று கொண்டிருந்த அமரர் சிவா சுப்ரமணியம்
நாடறிந்த எழுத்தாளராவார்.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான அவர், இலங்கையில் பல்வேறு தேசிய பத்திரிகைகளில்
அரசியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். கவிதை, சிறுகதை,
இலக்கியங்களிலும் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டவராவார். யாழ். குடாநாட்டிலுள்ள அக்கால
இடதுசாரி முன்னோடிகளுடன் அமரர் சிவா சுப்பிரமணியம் நெருக்கமான அரசியல் தொடர்புகளை
கொண்டிருந்த அதேவேளை, தென்னிலங்கையின் சிங்கள இடதுசாரி அரசியல்வாதிகளுடனும்
நட்புறவை பேணி வந்துள்ளார். சிவா சுப்பிரமணியம் சிறந்த அரசியல், இலக்கிய விமர்சகராவார்.
எழுத்துத்துறை மீதும், பத்திரிகைத்துறை மீதும் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக தினகரன்
பத்திரிகையின் இணை ஆசிரியராக இரு தசாப்தங்களுக்கு முன்னர் பிரவேசித்த சிவா சுப்பிரமணியம்
பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 2010 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
உள்ளூர், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் ஏராளமான ஆக்கங்களைப்
படைத்துள்ளார்.
தனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் காரணமாக அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்த போதிலும்
மீண்டும் தினகரன் ஆசிரியர் பதவியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் அவரை தேடிவந்தன. ஆனால்,
கொள்கை பிடிப்புக்காரணமாக அவர் அதனை ஏற்க மறுத்தார்.
கொழும்பிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கோண்டாவில் சென்று வாழத்தொடங்கிய அவர்,
தினக்குரல், தினமுரசு உட்பட மேலும் பல ஊடகங்களில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி
வந்தார். சில வருட காலம் உடல் நலம் குன்றி இருந்த போதிலும் அவர் தனது எழுத்துப் பணியை
கைவிடாமல் தொடர்ந்தும் எழுதிக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சு வரை எழுத்தை கைவிடாத
ஒருவராக சிவா சுப்பிரமணியம் போற்றப்பட வேண்டியவர்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் கொண்டிருந்த ஆளுமைத்திறன்
பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. மும்மொழிகளும் திறமையாக எழுதக்கூடிய அவர், சக
ஊடகவியலாளர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி முகனூல் ஈஸ்வரலிங்கம்

0 commentaires :

Post a Comment