5/22/2016

எம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நபர்களுக்கு’- தலித் சமூக மேம்பாட்டு முன்னணிதலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எம்மீதும் எமது சக ஆதரவாளர்கள்; மீதும் தொடர்ச்சியான அவதூறுகளும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. புகலிடத்திலுள்ள சில சாதிய சமூகமேலாதிக்க மனங்களின் வெளிப்பாடுகளாக மேலெழும் இவவாறான அவதூறுகளை எதிர்கொண்டும், கடந்தும்… தொடர்ந்தும் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எனினும் திட்டமிடப்பட்ட வகையில் தொடர்ந்தும் இவ்வாறான அவதூறுகளை பரப்புவது இவர்களது சுயஇன்ப தணிப்பிற்கான செயல்பாடு எனவும் ஒதிக்கிவிட முடியாது. இது யாழ்மேலாதிக்க அதிகாரத்தை காப்பாற்றும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். எமது சமூகத்தில் நிலவும் சாதியம் அதன் தோற்றம் குறித்த நிதானமும், அதில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் வரலாற்றுப் புரிதலையும் எதிர்கொண்டு செயல்பட விளைபவர்கள் நாம். சாதியம் குறித்த எமது பேசுபொருளானது வெறும் அரசியல் முழக்கமல்ல. சமூக பண்பாட்டு வேர்களை அசைக்கும் எத்தனிப்பாகவும் இருக்கின்றது. எமது இவ்வாறான செயல்பாட்டை கண்டு அஞ்சுபவர்களே தொடர்ந்தும் எம்மீதானா அவதூறுகளை புகலிடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் பினாமிகளின் பெயரில் நகைக்கடைகளும், நீச்சல் தடாகத்துடன் கூடிய மாடி வீடுகளும் வைத்திருக்கின்றனர் என்று குளிர்தேசத்தில் தற்போது புதிதான வதந்தி ஒன்றை எம்மீது பரப்பிக் குளிர்காய்கின்றனர். எமது செயல்பாட்டின் மீதோ, கருத்துநிலை மீதோ எவ்வித உரையாடலுக்கும் தயாரற்ற இவ்வாறான ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதற்கான உங்களது நோக்கம் என்ன?

இலங்கையிலும் சரி, புகலிடத்திலும் சரி சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள், அரச கைக்கூலிகள், துரோகிகள், எனும் கருத்தியல் ஆழமாக வேரூன்றப்பட்டு வருகின்றது. இவ்வாறான தொர்ச்சியான செயல்பாட்டை புகலிடத்திலுள்ள சில புதிய தலைமுறையினருக்கும் எடுத்துச்சென்று எமது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பொது எதிரி சிங்கள் அரசு மட்டுமல்ல, சாதியம் குறித்து பேசுபவர்களும் தமிழ்த் தேசியத்திற்கான பொது எதிரிகள்தான் என காட்டுவதற்கான அரசியல் உள்நோக்கம்தான் இது. புகலிடத்தில் உள்ள புதிய தலைமுறையினர் சிலர் விரிவான தேடலும், வாசிப்பும் இன்றி வன்முறைக் கலாசாரத்தையும் காவி வந்து செயல்படுபவர்களாக உள்ளனர். இவர்கள் மத்தியிலே இவ்வாறு எம்மீதான கருத்தியலை விதைப்பதன் உள்நோக்கத்தை நாம் ஒரு கொலை அச்சுறுத்தலாகவே கருதுகின்றோம். நாம் கடந்து வந்த வன்முறைக் கலாசாரத்தில் தேசத்துரோகிகளுக்கான அதிகபட்ச தண்டனை எதுவாக இருந்தது?

ஆனால் பொதுவாகவே இளையதலைமுறை என்பது நிலைஊன்றித் தரித்து நிற்கும் ஒரு சமூகமல்ல. அவர்கள் தேடுகிறார்கள், உரையாடுகிறார்கள். வன்முறை கலாசாரத்தை செரித்து வளர்ந்தவர்கள் அவர்கள். நாம் அவரகள் மீது மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்களை யாரும் வழிநடத்த முடியாது.

அவதூறுப் பிரியர்களே, தயவுசெய்து சமூகவளரச்சிக்கான மனித மேம்பாட்டிற்கான அறிவியல் பூர்வமான தேடலுக்கும் உரையாடலுக்குமான வாசலை திறவுங்கள். தொடர்ந்தும் இருளுக்குள் உறைந்து உருகாதீர்கள். வெளிச்சத்திற்கு வாங்கள். அரூபமாக நின்று எதையும் நீங்கள் சாதிக்கப்போவதில்லை. பொதுவெளியில் பேசுவதாக இருந்தால் எதையும் ஆதாரத்துடன் முன்வைக்கவேண்டும் எனும் ‘குறைந்தபட்ச’ அறிவும் அற்ற ‘நபர்களுக்காக’ இதை எழுதுவதை ஒரு அவமானமாக கருதுகின்றோம்.

அவதூறுப் பிரியர்களே, நமது முன்னணி செயற்பாட்டாளர்களிடம் பினாமிச்சொத்து இருக்குமானால் தக்க ஆதாரத்துடன் காலம்தாழ்த்தாது பகிரங்கமாக வெளியிடவும்
.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ் -20-05-2016

0 commentaires :

Post a Comment