6/03/2016

கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் றஷீட் பதவி உயர்வு!


காரைதீவு நிருபர் சகா


கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராக மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
...
இவருக்கான நியமனக் கடிதம் புதன்கிழமை (01) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரினால் கையளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 03ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இலங்கை கணக்காளர் சேவையின் முதலாம் வகுப்பைச் சேர்ந்த இவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் திணைக்களத்தின் அம்பாறை- மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் என்பவற்றில் கணக்காளராகவும் கிழக்கு மாகாண சபையின் கல்முனைப் பிராந்திய பிரதி கணக்காய்வாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் 2014ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையில் கணக்காளராக கடமையாற்றி வருகின்றார்.
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணி பட்டப்படிப்பையும் இந்திய காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் எம்.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஹச்சு முஹம்மத்- ஆஷியா உம்மா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி கடமை நிமித்தம் திருகோணமலை செல்லும்போது இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பி, பலத்த காயங்களுடன் கால் ஒன்றும் முறிவடைந்த நிலையில் பல மாதங்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, முழுமையாக சுகமடையாத போதிலும் கல்முனை மாநகர சபை அலுவலகத்திற்கு சென்று தனது கடமைகளை சிறப்பாக மேற்கொண்டு, தனது விவேகமான செயற்பாடுகள் காரணமாக மாநகர சபையின் நிதி நிலைமைகளை மேம்படுத்தியுள்ளார்.
அவர் கடமையாற்றிய அனைத்து அலுவலகங்களிலும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் மனங்களை வென்று, அவர்களது நன்மதிப்பை பெற்றுள்ளதுடன் ஒரு தலைசிறந்த நிர்வாகியாகவும் தடம்பதித்துள்ளார்.

நன்றி தகவல் முகனூல்

0 commentaires :

Post a Comment