7/08/2016

பெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது

Résultat d’images pour lutte poingகிளிநொச்சியிலுள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபராகும் தகுதியுடையவராகவும் அப்பணியை மேற்கொள்வதற்கான கல்விவலயத்தின் அனுமதியும் பெற்ற பெருமாள் கணேசன் அவர்கள்  யாழ்மேலாதிக்க அரசியல் அதிகாரப் பின்பலத்தால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையகத் தமிழரான பெருமாள் கணேசன் அவர்கள் கிளிநொச்சி வாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.  கல்விப்புலமை நிமித்தமாக அடையக்கூடிய அவரது உயர்பதிவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது.

தொடர்ந்தும் கல்விபணியகத்தின் உயர்மட்ட பதவிகளை தீர்மானிக்கும் சக்திகளாக  யாழ்மேலாதிக்க சாதியினராகவே இருந்து வருகின்றனர்.  அதன் காரணமாக யாழ்மாவட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் உயர்பதிவிகளை அடைவதற்காக பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டியுள்ளது.

தமிழ்மொழி பேசும் சமூகம் எனவும், தமிழ்தேசியம் என்றும் பேசப்பட்டுவரும் ஒற்றைக் கருத்தியிலானது. எம்மிடையே நிலவிவரும் சாதியப்பாகுபாடுகளையும், சமூகப் பாராபட்டசங்களையும் புரிந்துகொள்ளவும் அதற்கான மாற்று வழிமுறைகளையும் கண்டுகொள்ள தடையாகவே இருந்து வருகிறது.

எனவே தமிழ்த்தேசியத்திற்கான தலைமைகளை தேர்ந்தெடுக்கும் நாம் தொடர்ந்தும் எசமானர்களையே தேர்ந்தெடுத்து அரசியல் அதிகாரத்தையும் கையளித்து வருகின்றோம். எமது தேர்தல் பிரதிநிதித்துவமானது தமிழ்மொழி பேசும் மக்களுக்கானதாகவோ, தமிழ்த்தேசியத்திற்கான பிரதிநிதிகளாகவோ இருக்கமுடியாது. சாதியரீதியாக பிளவுண்டிருக்கும் சமூகத்திற்கு மக்களாலான பிரதிநிதித்துவமே அவர்களுக்கான சமூக உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாக இருக்கும். அதன்காரணமாகவே தலித்சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி சமூகவிடுதலைப்போராளிகள் முன்பே வலியுறுத்தி வந்துள்ளனர்.


அந்தவகையில் மலையக சமூகத்தின்மீதான யாழ்மையவாத சிந்தனை என்பதும் சாதிய பாராபட்சத்திற்கு நிகரான ஒரு சிந்தனையாகவே இருந்துவருகிறது. எனவேதான் வன்னி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த்தேசியத்திற்கான அரசியல் எசமானர் ஒருவரின் பின்புல அதிகாரம் மலையகத்தை சேர்ந்த பெருமாள் கணேசன் அவர்களின் தலைமை ஆசிரியர் பணிக்கு தடைவிதிக்கும் பலத்தை கொண்டதாக இருக்கிறது. வன்னி மாவட்டமானது கணிசமான மலையக மக்கள் வாழும் பகுதியாக இருக்கும்போது, அங்கு தமிழ்த் தேசியத்திற்கான பிரதிநிதித்துவத்தால் மலையக மக்கள் பயன்பெறுவது சாத்தியமற்றுப்போகின்றது.  தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் பணிபுரியும் தலித்துக்களுக்கும், மலையக மக்களுக்கும் இங்கே ஒன்றை நாம் வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது. தமிழ்த் தேசியக்கட்சியுடன் இணைந்து நீங்கள் அரசியல் செய்யும் பட்சத்தில் சட்டம் இயற்றும் வல்லமை அற்றவர்களாக தொடர்ந்தும் பிரதிநிதிகளாக மட்டுமே தேர்தெடுக்கப்படுவீர்கள்.

எனவே பெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் அவர்களுக்கான தனித்துவமான அரசியல் பிரதிநித்துவத்திற்கான அவசியத்தையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ்

0 commentaires :

Post a Comment