8/26/2016

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

மாவனெல்ல, ஹெம்மாத்தகமவில், மீட்கப்பட்ட இளைஞனின் சடலம், பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என்று பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தை அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். 29 வயதுடைய மொஹமட் ஷகீம் சுலைமான் என்ற குறித்த வர்த்தகர் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு அருகாமையில் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறையிட்டிருந்தனர்.




மோப்பநாய்கள் சகிதம் அப் பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் சுலைமான் அணிந்திருந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டதுடன், இரத்தக்கரைகள் படிந்திருந்தமையும் அவதானிக்கப்பட்டது. இதேவேளை, காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிக்கவேண்டுமாயின் சுமார் 2கோடி ரூபாவை கப்பமாக தரவேண்டுமென கடத்தல்காரர்கள் கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இவர் தொடர்பில் தகவல் தருமாறு அவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியிருந்ததுடன், வர்த்தகர்கள் பலரிடமும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்றுப் புதன்கிழமை (24) மாலை, வனெல்ல, ஹெம்மாத்தகம பிரதான வீதியில் இனந்தெரியாத இளைஞனின் சடலமொன்று கிடப்பதாகப் பொலிஸாருக்கு தகவல் கிடைந்துள்ளது. அவ்விளைஞன், டெனிம் உடுத்தியிருப்பதாகவும், மொஹமட் ஷகீம் சுலைமானின் சடலமாக இருக்கலாம் எனச் சந்தேகித்த பொலிஸார் அவரது உறவினர்களுக்கு அறிவித்தனர். சடலமிருந்த இடத்துக்கு வருகை தந்த உறவினர்கள், சடலம் மொஹமட் ஷகீம் சுலைமானது என அடையாளம் காட்டியுள்ளனர்.

0 commentaires :

Post a Comment