10/18/2016

வடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இங்கிலாந்து சென்றுள்ளமையால் முதலமைச்சரின் அமைச்சுப் பொறுப்புக்கள், வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சத்தியப்பிரமாணம் செய்துள்ளதுடன், மாகாண நிர்வாகம், நிதி, திட்டமிடல் சட்டஒழுங்கு, மின்சாரம் ஆகிய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு காணி, விடு, வீடமைப்பு நிர்மாணம், மீள்குடியேற்றம், மகளிர் விவகாரம் கைத்தொழில், சுற்றுலா, உள்ளுராட்சி ஆகிய அமைச்சுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வைத்து, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னிலையில் இவர்கள் இருவரும் திங்கட்கிழமை (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த பகிர்ந்தளிப்பு நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்கு 2 வார காலமாகும் என்பதால் இவ்வாறு அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள இங்கிலாந்து, கிங்ஸ்டன் நகரத்தில் சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிப்பதுடன்  தமிழ்மொழி அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
கிங்ஸ்டன் நகரம் ஏற்கெனவே, ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது.

0 commentaires :

Post a Comment