உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/07/2016

இராஜதுரை துரோகியா? இராஜதுரைக்கு இழைக்கப்பட்டது துரோகமா?

வடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-04-
இராஜதுரை துரோகியா? இராஜதுரைக்கு இழைக்கப்பட்டது துரோகமா?

  மட்டக்களப்பில் செல்வநாயகத்துடன் யாரும் முகம்கொடுத்துப் பேசவும் தயாராயிருக்கவில்லை

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்துநின்று அடுத்து என்னசெய்வது என்கின்ற கேள்வியுடன் எழுந்தகாலம் தொட்டு இராஜதுரை செல்வநாயகத்துடன் இணைந்து செயற்பட தொடங்கினார். புதிய கட்சிக்கான ஆலோசனைகளிலும், கொள்கைத் திட்டங்களை வடிவமைப்பதிலும் தந்தை செல்வாவுடனேயே இருந்து பங்காற்றினார். கொழும்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பண கூட்டத்திற்கு மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட ஐந்துபேருக்கும் முன்னணியில் இருந்து செயற்பட்டவர் அவர். அவரூடாகவே தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாணத்தில் தமது முதலாவது காலடியை எடுத்து வைத்தது.

1952 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி எதிர்கொண்ட முதலாவது தேர்தல் இடம் பெற்றது. அதற்கான வேட்பாளர்களைத் தேடி மட்டக்களப்பின் மூலை முடுக்கெல்லாம் தந்தை செல்வா பயணித்தார். படித்தவர்கள், பட்டதாரிகள், பணக்காரர்கள், போடிமார்கள் என்று பலரது வீடுவீடாக ஏறி இறங்கிய செல்வநாயகத்துடன் யாரும் முகம்கொடுத்துப் பேசவும் தயாராயிருக்கவில்லை. குறுமண்வெளித்துறையில் இருந்து தோணிமூலம் மண்டூர் சென்ற செல்வநாயகத்தை மண்டூர் மண்ணிலேயே கரையிறங்கவிடாமல் திருப்பியனுப்பியவர்கள் படுவான்கரை மக்கள். அந்தளவிற்கு மாகாணபேதம் ஆழமாயிருந்த காலமது. இறுதியில் கல்குடா தொகுதியில் எஷ்.சிவஞானமும், மட்டக்களப்பு தொகுதியில் ஆர்.பி.கதிர்காமரும் இராஜதுரையின் முகத்திற்காக போட்டியிட முன்வந்தனர். ஆனபோதும் கடைசி நேரத்தில் “யாழ்ப்பாணக் கட்சியில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்பதைக் காரணம் காட்டி ஒதுங்கிக்கொண்டார்கள். பட்டிருப்பில் பேருக்குக்கூட யாருமே கிடைக்கவில்லை. 

திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமே
கல்லெறி தாங்கமுடியாது கலைந்து போனது


திருகோணமலையில் மட்டும் இராஜவரோதயம் போட்டியிட முன்வந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் யாருமே போட்டியிட முடியாத நிலையில் திருகோணமலை மாவட்ட பிரச்சார வேலைகள் இராஜதுரையிடம் ஒப்படைக்கப்பட்டன. திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமே கல்லெறி தாங்கமுடியாது கலைந்து போனது. ஆனாலும் இராஜதுரையின் நெஞ்சுரமும் சொல்வீச்சும் திருகோணமலை மக்களை தமிழரசுக்கட்சியை திரும்பிப்பார்க்க வைத்தது. இராஜவரோதயத்தின் வெற்றிக்காக இராஜதுரை சுமார் அறுபது கூட்டங்களை நடத்தி முடித்தார். தமிழரசுக்கட்சி எதிர்கொண்ட  முதலாவது தேர்தலில் தந்தை செல்வா கூட தோற்றுப்போனார். திருகோணமலையில் இராஜவரோதயம் வென்றார். “உன் தீந்தமிழ் பேச்சாலேதான் நாம் திருமலையை வென்றோம்” என்று தந்தை செல்வா இராஜதுரையை பாராட்டினார்.  இவ்வாறாகத்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுப்பதில் இராஜதுரை ஆற்றிய பங்கு ஒப்பற்றதாய் இருந்தது. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலுமாக தலா ஒரு பிரதிநிதியை மட்டும் தமிழரசுக்கட்சி வெல்ல முடிந்தநிலையில் பரந்தளவில் கட்சி தோல்வியையே தழுவியிருந்தது. இவ்வாறானதொரு நிலை இனியொருபோதும் இடம்பெற்றுவிடக்கூடாது என்று பெரும் கவலை கொண்டிருந்த தந்தை செல்வாவுக்கு கிழக்கின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் இராஜதுரையாகும். அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக  உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார்.

இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளரவில்லை இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது

இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளர்ந்தார் என்பதைவிட இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதே சாலப்பொருத்தமும் சத்தியமுமாகும். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்காசு இழக்கவைத்து அபார வெற்றியீட்டினார் இராஜதுரை. அன்று தொடங்கி ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றியீட்டிய தமிழ் தலைவர்கள் இராஜதுரையை தவிர வேறு யாருமிலர்.

தந்தை செல்வா இறந்தபின்னர் தலைமைப் பொறுப்புக்கு தகுதியாக இருந்த  இராஜதுரை திட்டமிட்டவகையில்  கட்சியால் ஒதுக்கப்படத் தொடங்கினார். கட்சியின் உருவாக்க காலத்தில் இருந்து தந்தை செல்வாவின் வலதுகையாக செயற்பட்டுவந்த இராஜதுரை அவர்கட்கு தந்தையின் மறைவை அடுத்து தலைமைப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரிமை மறுக்கப்பட்டது மட்டுமல்ல அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதற்கான சதிகள் மெதுமெதுவாக பின்னப்பட்டன.

1977 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி கட்சியில் அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு கூட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்சிக்காக இராஜதுரையால் வளர்த்தெடுக்கப்பட்ட காத்தமுத்து சிவானந்தன் எனும் இளைஞனுக்கு பதவியாசை ஊட்டி மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையை போட்டியிடாமல் தடுக்கும் முயற்சி அமிர்தலிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இராஜதுரையை தன் அரசியல் குருவாகவே எண்ணிவளர்ந்த காசி ஆனந்தன் மட்டக்களப்பு தொகுதியில்  “நான் களையெடுக்கப்போகின்றேன்” என்று கட்சிப்பத்திரிகையான சுதந்திரனில் அறிக்கை விட்டார். கட்சிக்குள்ளேயே இரண்டு பேர் மட்டக்களப்பு தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட சதி தீட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இராஜதுரை கட்சித்தலைமையை அணுகியபோது அதனை தேர்தல் நியமனக் குழு பார்த்துக்கொள்ளும் என்று அமிர்தலிங்கம் பதிலளித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேளை வந்தபோது 1952 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டுவரை கட்சியின் தேர்தல் நியமனக் குழு உறுப்பினராக இருந்து வந்த இராஜதுரை அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை  ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. இது இராஜதுரைக்கு விழுந்த முதுலாவது அடியாகும். அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் (இருபது ஆண்டுகள்) வெற்றியீட்டிய இராஜதுரையை தேர்தல் நியமனக் குழுவின் முன்னர் நேர்முகப்பரிட்சைக்கு ஆஜராகுமாறு அழைத்து அவமானப்படுத்தினார் அமிர்தலிங்கம். அந்த நேர்முகப்பரிட்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செல்லக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் இராஜதுரையை வேண்டிக்கொண்டனர். ஆனபோதிலும் கட்சி ஒழுங்கும், கட்சியின் நன்மையையும் கருதி தேர்தல் நியமனக்குழு முன்னர் ஒரு புதுமுக வேட்பாளரைப்போன்று இராஜதுரை ஆஜராகினார். அங்கு மட்டக்களப்பு தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் எவரையும் போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னதோடு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்குரியதாகவே இருந்துவரும் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்பதுவும் முஷ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலாகும் என்றும் விளக்கிக் கூறினார். அவரது எந்த விளக்கங்களும் தேர்தல் நியமனக்குழுவின் தலைமை நீதிபதியாக இருந்த அமிர்தலிங்கத்திடம் எடுபடவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராஜதுரையையும், தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனையும் நிறுத்த கட்சி முடிவுசெய்தது. வடக்கு கிழக்கின் அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்து சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பில் மட்டும் மேலதிகமாக தமிழரசுக்கட்சியை இராஜதுரைக்கு போட்டியாக களமிறக்கினர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழரசுக்கட்சியின் சின்னமாக இருந்துவந்த வீட்டுச்சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டமை, புதிய சின்னத்தில் போட்டியிட நேர்ந்த இராஜதுரையின்   ஆதரவாளர்களுக்கு பெரும்  குழப்பத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் நெருங்கிய வேளைகளில் இராஜதுரையின் தேர்தல் மேடைகளில் உரையாற்ற எந்தவொரு கட்சி முக்கியஷ்தர்களும் முன்வரவில்லை. ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்றோர் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டு காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அவர்களது விசமத்தனமான பேச்சுகளும் கட்சிப்பத்திரிகையான ‘சுதந்திரனில்’ இராஜதுரைக்கு எதிராக வெளிப்படையாகவே எழுதிய பண்புகெட்ட எழுத்துகளும் அளவற்றன. பட்டிருப்பு தொகுதியிலும் கல்குடா தொகுதியிலும் உதயசூரியனை ஒளிரச் செய்யுங்கள் என்று பேசிய கட்சித் தலைவர்கள் அதே வாயால் மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை உதிக்காமல் செய்யுங்கள் என்று பேசினர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே கட்சிக்குள்ளேயே இராஜதுரைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவமானங்களுக்கும் குத்துவெட்டுகளுக்கும் நிகர்த்த பிறிதொன்று இலங்கை வரலாற்றில் எங்கேனும் நிகழ்ந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் இராஜதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த சதி மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. வழமைபோலவே அந்தத் தேர்தலிலும் இராஜதுரை அமோக வெற்றியீட்டினார். வெற்றியின் பின்னர் தேர்தலில் நடந்த கழுத்தறுப்புகளை எல்லாம் மறந்துவிட முயன்று கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சித்தம் கொண்டேயிருந்தார். அதன் காரணமாகவே பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த பூ.கணேசலிங்கத்தின் வீட்டில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு வருமாறு விடப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று அங்கு சமரச முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் இடம்பெற்ற வீட்டைச்சுற்றி திட்டமிடப்பட்ட வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களால் இராஜதுரை கேவலப்படுத்தப்பட்டார். அன்று மாலை பாட்டாளிபுரத்தில் இடம்பெற்ற கட்சியின் நன்றி நவிலல் பொதுகூட்டத்தில் இராஜதுரைக்கு பேச சந்தர்பம் மறுக்கப்பட்டது. தேர்தலில் தோற்ற காசி ஆனந்தன்  முன்னணி பேச்சாளராக திகழ்ந்தார். மேடையிலே வீற்றிருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் செய்த சதியே அதுவாகும்.  தமிழரசுக்கட்சியின் தூணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரைக்கு மட்டக்களப்பு மண்ணிலேயே பேசும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை அவமானத்திலும் அவமானமாகும்.
முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்தொழித்த ‘சூறாவளி” வீசியது. வரலாறு காணாத பேரழிவுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகிடக்க, பதினைந்து அடிகளுக்கு மேல் எழுந்த கடல்கொந்தளிப்பு பல கிராமங்களை தடைமட்டமாக்கிவிட, 14 லட்சம் தென்னைமரங்கள் வீழ்ந்துகிடக்க, வீதிகள் எங்கும் உடைந்து மறிபட்டு சிதிலமடைந்து சீரழிந்த நிலையில் அவ்வழிவுகளை பார்வையிட பிரதமர் பிறேமதாசா மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மக்கள் முன்னிலையில் மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் அவசரமும் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி எனும் வகையில் இராஜதுரைக்கு இருந்தது. அந்தவகையில் இராஜதுரை பிரதமர் பிறேமதாசாவை சந்தித்து மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்தியம்பினார்.
மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது. இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை.  மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை. முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது. இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள், அநீதிகள், உபத்திரவங்கள், உத்தரிப்புகள், கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார். தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சிதேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சி அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார். தர்மத்தின் ஆவேசம் அது.

0 commentaires :

Post a Comment