10/24/2016

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக்கிய மருத்துவ முகாம்

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் மருத்துவ முகாமானது இன்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை விளாந்தோட்டம் பல்தேவைக் கட்டடத்தில் இடம்பெற்றது

.

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் இம்மருத்துவ முகாமை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து மேற்கொண்டதுடன், விமோச்சனா இல்லத்தினருடன் இணைந்து மது ஒழிப்பு வேலைத்திட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மருத்துவ முகாமில் 150 க்கு மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்துள்ளதுடன் பலதரப்பட்ட மருத்துவசேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்தும் பல மருத்துவ சேவைகளையும் சமூக சேவைத்திட்டங்களையும் வழங்க விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விளாந்தோட்டம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. குடி நீர்கூட இல்லை. மருத்துவ வசதி பெறுவதாக இருந்தால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குதான் மக்கள் வரவேண்டிய நிலை. அக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியில் முன்னேறவேண்டும் என்கின்ற ஆர்வம் உள்ள மக்களாக உள்ளனர் ஆனால் வசதிகளற்ற கிராமம். பல மைல்களுக்கு அப்பால் பல கிராமங்கள் கடந்து பாடசாலை சென்று கற்று வருகின்றனர் மாணவர்கள். இரு மாணவர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
அங்குள்ள மக்கள் நாட்டு நடப்புக்களைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். வாசிகசாலை வசதியில்லை. குறித்த கிராம மக்கள் விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினரிடம் வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க வாசிகசாலை ஒன்றினை ஏற்படுத்திக்கொடுத்து தொடர்ந்து பத்திரிகைகளுக்கான செலவினையும் வழங்க விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

நீண்டகாலப்பிரச்சினையாக இருந்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் தீர்வினை வழங்க விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் வைத்திய முகாமில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. சுகுணன் தலைமையிலான வைத்திய குழுவினரும், விமோச்சனா இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும்மேல் அக்கிராம மக்கள் யானையின் அட்டகாசங்களுக்கு அஞ்சி வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment