11/13/2016

வடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை (NFGG)

வடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை (NFGG)
வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது. அம்மாகாணங்கள் இரண்டும் தற்போதுள்ளதைப் போன்று தனித்தனி மாகாணங்களாகவே செயற்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (10.11.2016) கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், புதிய அரசியலமைப்பிற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எனவே நாட்டிலுள்ள எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.
அரசியமைப்பினூடாக அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாகவுள்ளோம். எனினும் அதிகாரப் பகிர்விற்கான நடவடிக்கைகள், சகல சமூகத்தினரதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகார அலகு தொடர்பாக பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகள் முறையில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதிலும் நாட்டின் அரசியல் தீர்வு முயற்சியில் அது ஒரு படி முன்னேற்றமான விடயம் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே மாகாண சபைகள், தற்போதுள்ளதைப் போன்று ஒன்பது மாகாணங்களாகவே செயற்பட வேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். ஆகவே வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
மேலும் தற்போதுள்ள மாகாண சபை முறைதான் ஓரளவுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
அத்துடன் மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகளால் உரிய முறையில் செயற்பட முடியும்.
வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் நாம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அதன்போது வடக்கும் கிழக்கும் தற்போதுள்ளதைப் போன்று, இரு மாகாணங்களாக தனித்தனியே செயற்படுவதனையே மக்கள் வலியுறுத்தினர்.
ஆதலால், மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கி தமது கட்சி இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: விடிவெள்ளி 11.11.2016.

0 commentaires :

Post a Comment