உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/12/2017

சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை

- சாதிமீறிய காதல் திருமணம் செய்துகொண்டதற்காக தலித் இளைஞரான சங்கர் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காயங்களுடன் உயிர்தப்பிய கவுசல்யா

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள சங்கரின் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று கௌசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் கத்திகளால் வெட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். அதற்குப் பிறகு, ஒரு முறை தற்கொலை முயற்சியிலும் கௌசல்யா ஈடுபட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, கௌசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. 1500 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் யு சங்கரநாராயணன் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் மூன்று அரசு வழக்கறிஞர்களும் இவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடத்தப்பட்டுவந்தது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் முடிவடைந்து, டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரையும் விடுவித்தார்.
மீதமிருந்த 9 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதில் சின்னச்சாமிக்கு தூக்குதண்டனையோடு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 3 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் 2 லட்ச ரூபாயை கௌசல்யாவுக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
ஜெகதீசனுக்கு தூக்கு தண்டனையோடு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 
மூன்று பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்வது குறித்து தீர்ப்பை முழுமையாகப் படித்துப்பார்த்த பிறகு முடிவுசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment