4/28/2018

மே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை

உலக தொழிலாளர்களின் போராட்ட தினமான மே 1ம் திகதியை, இலங்கை அரசு வேறு ஒரு திகதிக்கு மாற்றி இருக்கின்றது. பௌத்த மதத்தின் கொண்டாட்டத்தை முன்னிறுத்திய இந்த திகதி மாற்றமானது, இலங்கையை பௌத்த நாடாக பிரகடனம் செய்திருக்கின்றது. இலங்கை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க பௌத்த சிந்தனை முறையையே, அரசும் - ஆளும் வர்க்கமும் கையாள்வது வெளிப்படையாக இதன் மூலம் அம்பலமாகி இருக்கின்றது.Résultat d’images pour may
இலங்கையில் ஆட்சியாளர்களும் - ஆளும் வர்க்கமும் காலகாலமாக பௌத்த – சிங்கள மக்களின் பெயரில், இன-மத ரீதியாக மக்களை ஒடுக்கிய வரலாற்றின் ஒரு அரசியல் நீட்சியாகவே, பௌத்த கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றது. இதன் மூலம் மதம் - இனம் கடந்த, போராடும் உழைக்கும் மக்களின் மேதின போராட்டத்தையும், அதன் பாரம்பரிய வர்க்க வரலாற்றையும் மறுதலித்திருக்கின்றது. அதேநேரம் மதரீதியாக உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி இருக்கின்றது.
உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தி சுரண்ட உதவுகின்ற எல்லா இனவாத-மதவாத தேர்தல் கட்சிகளும், இதனை எதிர்க்கவில்லை. குறிப்பாக இன-மத ஒடுக்குமுறையை  முன்னிறுத்தி செயற்படும் தமிழ் - முஸ்லீம் இனவாத-மதவாத கட்சிகள், பௌத்த ஆதிக்கம் மூலம் முன்னிறுத்தும் நவீன ஒடுக்குமுறையை எதிர்க்காத பின்னணியில் இருப்பது, அக்கட்சிகளின் வர்க்கக் குணாம்சமே. 

இதுவரை காலமும் மே தினத்தை தங்கள் தினமாகக் காட்டி, நீலம் - பச்சை - சிவப்பு கொடிகளுடன் மே தினத்தை "வர்க்கம் கடந்த" முதலாளித்துவ வர்க்க கொண்டாட்டமாக்கிய முதலாளித்துவக் கட்சிகளும், மே தினத்தை பிறிதொரு தினத்துக்கு மாற்றி தொழிலாளர்களின் முதுகில் குத்தியதை வரவேற்றுள்ளது. இதன் மூலம் இதுவரை காலமும் போலியாக தம்மை முன்னிறுத்தி, தொழிலாளர்களை ஏமாற்றி வந்த முகமூடியை இழந்துள்ளனர்.
பௌத்த சிந்தனையை முன்னிறுத்திய இந்த தேர்தல் கட்சிகளில், போலி இடதுசாரிகட்சிகளும் அடங்கும். குறிப்பாக ஜே.வி.பி இரட்டை வேடத்துடன் தன்னை அம்பலமாக்கி இருக்கின்றது. வடக்கில் மே முதலாம் திகதி மே தினமாக கொண்டாடுகின்ற அதேநேரம், மக்களை பிரித்தாளும் அரசின் பௌத்த சிந்தனைக்கு அமைவாக தெற்கில் பௌத்த கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு ஏற்ப, மே தினத்தை அரசு முன்வைத்த திகதிக்கு கொண்டாடுகின்றது.
உழைக்கும் வர்க்கத்தை இனம் - மத ரீதியாக பிளக்கும் வண்ணம், ஜே.வி.பி இன-மத ரீதியாக இரு மேதினங்களை அறிவித்து இருக்கின்றது. அரசை விடவும் உழைக்கும் மக்களை இன-மத ரீதியாக பிரித்து வாக்குப் பெறுவதில், தாங்களே கெட்டிக்காரர்கள் என்பதை நிறுவ முனைந்திருக்கின்றது.
இதன் மூலம் உழைக்கும் மக்களைப் பிரித்தாளும் அரசின் பௌத்த சிந்தனைக்கு ஜே.வி.பியின் அணுகுமுறை பச்சைக் கொடி காட்டியிருப்பதுடன், பௌத்த வாக்குகளை பெறுதவற்கு ஏற்ப உழைக்கும் வர்க்கத்தைப் பிரித்து அதன் முதுகில் குத்தி இருக்கின்றது.  தன்னை உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாக காட்டிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றும் முதலாளித்துவ பௌத்த கட்சி தான் ஜே.வி.பி என்பதை, தனது பிரித்தாளும் இரட்டை அணுகுமுறைகள்  மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இனம் - மதம் மூலம் மக்களை ஒடுக்குகின்ற முதலாளித்துவ தேர்தல் கட்சிகளின் வரிசையில் ஜே.வி.பி அணிதிரண்டு நிற்பதுடன்;, தமிழ் மக்களை ஏமாற்ற வடக்கில் தொழிலாளர் வர்க்க கோசம் போடுவதுமாக, உழைக்கும் வர்க்கத்தைப் பிரிக்கும் புதிய அத்தியாயத்தை ஜே.வி.பி தொடங்கி இருக்கின்றது.
இந்த தொழிலாளர் விரோத மற்றும் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்கும் முதலாளித்துவ பௌத்த சிந்தனை முறையை எதிர்த்து, புதிய ஜனநாயகக் கட்சியும், முன்னிலை சோசலிசக் கட்சியும் மே 1 திகதியை, தங்கள் தொழிலாளர் தினமாக அறிவித்திருக்கின்றது. அதேநேரம் மேதினத்தின் வரலாற்று முக்கியத்துவத்துடன், வர்க்க போராட்டத் தினமாக பிரகடனம்  செய்திருக்கின்றது. 
நாம் அனைவரும் மதம் - இனம் கடந்த புரட்சிகர கட்சிகளின் பின் அணிதிரள்வதன் மூலம், தொழிலாளர்களின் உரிமையை மட்டுமின்றி, பௌத்த சிந்தனைமுறையிலான ஒடுக்குமுறைக்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளுவதற்கு எதிராகவும் அணிதிரள்வதையே, போராட்ட வரலாறுகள் எம்மிடம் கோரி நிற்கின்றது.     

                     

0 commentaires :

Post a Comment