4/21/2019

மீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..! “இலங்கை”

இலங்கையில் 6 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
30 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இலங்கைவாழ் அனைத்து மக்களும் இவ்வாறான குண்டுவெடிப்புகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், உடைமை அழிவுகளையும் எதிர்கொண்டு மீண்டெழுந்து வாழந்து வரும் நிலையில், இவ்வாறான பயங்கரவாத நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்தகாலங்களில் இனவாத யுத்தமாக தொடர்ந்து…, முடிவுற்ற நிலையில், தற்போது மதவாத நெருக்கடியாக அவ்வாறான அவலநிலை மீண்டும் தொடரப்போகின்றதா எனும் அச்சமாகவே இன்றைய இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிந்திக்க தூண்டுகிறது.

மூன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் மூன்று ஆடம்பரவிடுதிகளிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம்காரணமாக இலங்கையின் உல்லாசத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது அதில் முன்னேற்றம் நிலவிவரும் சூழலில் முப்பத்தைந்து வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளும் இன்றைய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இக்குண்டுவெடிப்பு சம்பந்தமான எச்சரிக்கை முன்பே புலனாய்வுப்பிரிவற்கு அறியக்கிடைத்தும் அதை இலங்கை புலனாய்வுத்துறை அலட்சியப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. இத்தாக்குதல் குறித்த உரிமைகோரும் தரப்பு இதுவரை தம்மை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் கத்தோலிக்க மதத்திற்கான ஒரு சர்வதேச அடிப்படைவாத சக்திகளின் செயலாக இருக்கலாம் என்பதாகவும் ஊகிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களில் இக்குண்டுவெடிப்பு தாக்குதலினாலும், விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினாலும் கொல்லப்பட்டவர்களுக்கும், காயத்திற்கும் உள்ளான மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை அரசியலும், இலங்கை அரசும் இச்சம்பவத்தையும், தொடர்ந்து இவ்வாறான அசம்பாவிதம் நடக்காதவகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மக்கள் அச்சத்துடனும் பதட்டத்துடனும் எதிர்நோக்கியிருப்பதாகவே கருதமுடிகிறது.

இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி

0 commentaires :

Post a Comment