4/22/2019

கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது

"நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்ல எத்தனிக்கும் காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது."
-ஊடகப்பிரிவு-
Résultat de recherche d'images pour "nfgg"
"இன்று காலை தொடர்ச்சியாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத்தனமான, மிலேச்சத்தனமான தாக்குதல்களை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) குறிப்பிட்டுள்ளது.
இன்று (21.4.2019) காலை கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை கண்டித்து NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கிறிஸ்தவ மக்களின் புனிதத்தினமான இன்று இவ்வாறானதொரு துன்பியல் சம்பவம் தேவாலயங்களிலும் முக்கிய சில இடங்களிலும் இடம்பெற்றிருப்பது மிக வேதனையான, கவலைக்குரிய ஒன்றாகும். சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்பும் அனைவரையும் இது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிக திட்டமிடப்பட்ட வகையிலும் பொது மக்களின் உயிர்களை இலக்கு வைத்தும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் மிக இழிவான ஒரு அருவருக்கத்தக்க செயலாகும்.
ஒட்டு மொத்த இலங்கையர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடு கடந்து இந்த நாட்டில் நிலவுகின்ற இனவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் என்பவற்றை முழுமையாக ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதற்கான அவசியமும் அவசரமும் இன்று மீண்டும் உணரப்பட்டிருக்கிறது.
இம்மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளையும் இதன் பின்னணிகளையும் உடனடியாகக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் எவராக இருப்பினும் இவ்வாறான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இனி ஒருபோதும் இந்த நாட்டில் இடம்பெறாத வகையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட வகையில் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இப்பதட்டமான சூழலில் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
இத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயங்களுக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு , இந்நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும், அனைத்து மக்களினதும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்பதோடு, இதற்காக அனைவரும் அர்ப்பணத்துடன் ஒன்று பட்டு உழைப்போம்.”

0 commentaires :

Post a Comment