5/19/2019

கிழக்கின் மாற்றுத் தலைமையாக பிள்ளையான்?

கிழக்கின் மாற்றுத் தலைமையாக பிள்ளையான்? Résultat de recherche d'images pour "பிள்ளையான்"
(எழுவான் வேலன் என்பவரால் எழுதப்பட்டு மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் அரங்கம் வாராந்த பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் இங்கே மீள் பிரசுரமாகின்றது)

19.04.2019ம் திகதிய 60 வது அரங்கம் பத்திரிகையில் ‘அரங்கம் பத்திரிகையில் இருந்து பிள்ளையானைச் சந்தித்தேன்’ எனும் அதன் ஆசிரியர் திரு.பூ.சீவகன் அவர்களுடைய கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதே கட்டுரையை தனது முகநூலிலும் பதிவு செய்திருந்தார். பத்திரிகைக் கட்டுரையின் பதிற்குறிகள் எவ்வாறு இருந்தது என்பது தெரியாது. ஆனால் முகநூலில் பலவாறான பதிற்குறிகளையும் கருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது. இந்த அவதானத்தின் அடிப்படையில் பிள்ளையான் தொடர்பான எனது அவதானத்தினை இப் பத்தியின் ஊடாக முன்வைக்க விரும்புகின்றேன்.
முகநூலில் வெளிப்படுத்தப்பட்ட பதிற்குறிகளும் கருத்துக்களையும் பின்வரும் வகையில் வகைப்படுத்த முடியும்.

1. பிள்ளையானை ஆதரிப்பவர்கள்
அ. மட்டக்களப்பு மண்சார்ந்து பிரதேசப் பற்றுடன் பிள்ளையானை ஆதரிப்பவர்கள்
ஆ. இதுவரையான மாகாண ஆட்சிக்காலங்களை விட பிள்ளையானுடைய ஆட்சிக்காலம் சிறந்தது எனும் அடிப்படையில் பிள்ளையானை ஆதரிப்பவர்கள்.

2. பிள்ளையானை எதிர்ப்பவர்கள்
அ. சனநாயகவாதிகள்
ஆ. புலி ஆதரவாளர்கள்
இ. யாழ் மேலாதிக்க சிந்தனையாளர்கள்
ஈ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள்.

மட்டக்களப்பு மண்சார்ந்து பிரதேசப் பற்றுடன் பிள்ளையானை ஆதரிப்பவர்களும் இரண்டாவது வகைப்பாட்டினுள் வருகின்ற பிள்ளையானை எதிர்ப்பவர்களும் கிழக்கு மக்களின் தேவைகள் அவர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக உண்மையான புரிதல் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பது சந்தேகமே.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது மட்டக்களப்பில் பொதுமக்களிடம் கருணாவுக்கு பெரும் ஆதரவு அலை எழுந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்த மக்கள் ஆதரவை மிக நிதானமாக அவதானித்த விடுதலைப் புலிகள் கருணாவுக்கு எதிராக முதலில் ஊடாக யுத்தத்தினையே ஆரம்பித்தனர். அதன் மூலம் மிக விரைவாக மட்டக்களப்பு மக்களை வெற்றி கொண்ட புலிகள் அடுத்ததாக இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தனர். இவை இரண்டிலும் தோல்வியடைந்த கருணா எடுத்த தவறான முடிவுகளும் அவருடைய தனிப்பட்ட ஒழுக்க நடத்தைகளும் மட்டக்களப்பு மக்கள் அவர் மேல் கொண்டிருந்த நம்பகத் தன்மையினை இழப்பதற்கு காரணமாயிற்று.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கருணாவுடன் கருணாவுக்கு நம்பிக்கையானவராக இருந்த பிள்ளையான் கருணாவுடன் முரண்பட்டுக்கொண்டு ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ எனும் கட்சியுடன் வெளியே வருகின்றார். 2008ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியடைந்து மாகாணசபையின் முதல்வராகவும் ஆகின்றார்.
இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் புலிகளை ஆதரித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு மக்கள் கருணாவையும் பின்னர் பிள்ளையானையும் ஆதரிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதாகும்.

எப்படி தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்களோ அதே போல் மட்டக்களப்புத் தமிழர்கள் யாழ் மேலாதிக்க தலைமைத்துவங்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழர்கள் என்ற ஒன்றுபடுதலின் அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பவர்களாக யாழ் மேலாதிக்கவாதமே இருந்து வந்திருப்பதை
வரலாறு முழுக்க அவதானிக்க முடியும். இதற்கு எதிரான மாற்றுக்களை முன்வைப்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்பட்டு துரோகிகளாக்கப்படுவதனால் தமிழ்த் தேசியத்தினை மானசீகமாக நேசித்து தமது சமூக அரசியல் பொருளாதார அபிலாசைகளை அடக்கி வைத்துக்கொண்டார்கள். இந்த நிலையில்த்தான் கருணாவையும் பின்னர் பிள்ளையானையும் தங்களுடைய சமூகப் பொருளாதார அரசியல் அபிலாசைகளின் பிரதிநிதிகளாகப் பார்த்தார்கள் அவற்றை அடைய முயன்றார்கள்,முயல்கிறார்கள் இதுவே பிள்ளையானுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவுப் பலமாகும்.

இதனை விளங்கிக்கொண்டு பிள்ளையான் தொடர்பான மேற்படி எதிர்ப்பாளர்களின் கருத்களுக்கு வரலாம். முதலில் சனநாயகவாதிகளை எடுத்துக் கொள்வோம். இவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு "பிள்ளையான் ஒரு கொலைகாரன்" சனநாயகத்துக்கு அவர் சரிவராது என்பதாகும். ஒருவர் மீதுள்ள குற்றம் சட்டரீதியாக நிரூபிக்கப்படாதவரைக்கும் அவர் நிரூபராதி என்பார்கள் இதனால் இந்தக் குற்றச்சாட்டு சட்டத்துக்கு புறம்பானதாகும்.

இருப்பினும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் சமூகத்தின் உயர் வர்க்கத்தினராக இருப்பதனையும் காணலாம். எல்லா இடங்களிலும் இந்த உயர் வர்க்கம் மக்களுடைய துன்ப துயரங்களில் பங்கெடுக்காது சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தமது நலன் பேணுபவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக தங்களுடைய வர்க்க நலனுக்கு பாதகமானவர்களை விமர்சனம் செய்து ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும். இந்த உயர் வர்க்கத்தினரால் சனநாயகவாதிகள், மனித உரிமைவாதிகள், பெண்ணியல்வாதிகள், என்ற பன்முகத்துடன் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் அவர்கள் எதிர்பார்த்த சனநாயகத் தன்மையுடன் நடந்துகொள்ளாது சனநாயகக் கொலைகாரர்களாகவும் அதிகாரவெறிகொண்டவர்களாகவும் இருக்கின்ற பலரை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இந்த உயர் வர்க்கம் அவர்களின் சனநாயகப் படுகொலைகள் பற்றியும் அதிகாரவெறி பற்றியும் பொதுவெளியில் பேசாதது மட்டுமல்ல அவ்வாறானவர்களுடன் தங்கள் தேவைகளுக்காக ஒட்டி உறவாடவும் தயங்காதவர்கள். இதுதான் அவர்களின் சுயநல வர்க்க குணாம்சமாகும்.

சனநாயகவாதிகளாகவும் மனித உரிமை வாதிகளாகவும் அடையாளப்பட்டுக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பவர்கள் பின்பு அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு கொலைகாரர்களாக மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களையும் இந்த சனநாயகவாதிகளால் வழங்கமுடியாது என்பதே உண்மையாகும். இதனால் எந்தக் கொலைகாரனையும் ஆட்சியில் அமர்த்தலாம் என்பது பொருளல்ல. கொலைகாரனுக்கும் போராளிக்கும் இடையிலான வித்தியாசங்களை நாங்கள் விளங்கிக் கொள்ளல் வேண்டும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றஃஇருந்த கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் பிள்ளையானை விட மிக மோசமான கொலைகளைச் செய்தவர்கள் என்பதை இவர்கள் மிக லாபகமாக மறந்து விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல போராளித் தலைவர்களாக (அவர்கள் மொழியில் கொலைகாரர்கள்) இருக்கின்றவர்களை கேள்விகேட்காது விமர்சிக்காது அங்கீகரிக்கின்ற உயர் வர்க்கம் ஏன் பிள்ளையானை மட்டும் கொலைகாரனாகப் பார்க்கின்றது என்பதற்குள்தான் அவர்களுடைய அரசியல் இருக்கின்றது. அதாவது மட்டக்களப்பிலிருந்து உயர் வர்க்கத்தையும் யாழ் மேலாதிக்கத்தையும் மீறி ஒரு படிக்காத சிறுவர் போராளியாக இருந்த ஒரு பொடியன் முன்னுக்கு வருகிறானே என்கின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் அதுவாகும்.
இங்கு பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது ஒரு கொடுங்கோன்மையாளனாக தன்னை காட்டிக் கொள்ளாது மக்கள் நலநாட்டமும் சனநாயகப் பற்றும் செயல்திறனும் உள்ளவராகவே தன்னை வெளிக்காட்டியிருக்கின்றார். இதுதான் பிள்ளையானை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சமாகும். இந்த அம்சம் இந்த சனநாயகவாதிகளை கலக்கடைய வைக்கின்றது. எங்கே எமது வர்க்க நலனும் நாம் கோட்பாட்டில் மட்டும் பேணும் சனநாயகமும் செயல்திறனும் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் பிள்ளையானை கொலைகாரனாக வெளிப்படுத்தவேண்டிய உளவியல் நிர்ப்பந்தத்தினை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
அடுத்து, புலி ஆதரவாளர்கள், யாழ் மேலாதிக்க சிந்தனையாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள். போன்றவர்களை எடுத்துக் கொண்டால் இந்த மூன்று வகைப்பாட்டினரும் சந்திக்கும் ஒரு புள்ளி தமிழ்த் தேசியம் என்பதாகும். இவர்கள் எல்லோரும் தமிழ் தேசியத்தை சிதைத்த ஒரு துரோகியாகவும், பிரதேசவாதியாகவுமே
பிள்ளையானைப் பார்க்கிறார்கள். உண்மையில் தமிழ்த் தேசியத்தைச் சிதைத்தது கருணாவோ பிள்ளையானோ அல்ல இந்த விமர்சகர்களை விட அவர்கள் தமிழ்த் தேசியத்துக்காக தம்மை ஆகுதியாக்கப் புறப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியத்தைச் சிதைத்தது யாழ் மேலாதிக்க கருத்தியல் என்பதை இவர்கள் உணர மறுப்பது வேதனையான விடயமாகும்.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்பே யாழ் உயர் வேளாளர் தம்மைவிட சாதி குறைந்தவர்களையெல்லாம் வடமராட்சியான், தென்மாராட்சியான், வலிகாமத்தான், தீவான், மட்டக்களப்பான், தோட்டக்காட்டான் என்று பிரதேச வேறுபாடு காட்டி அழைத்ததுடன் அவர்களை தம்மைவிடக் கீழானவர்களாகவுமே நோக்கினார்கள், நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் இதனை தற்காலிகமாக மூடிமறைத்திருந்தாலும் தம்மைவிடக் கீழானவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதையோ அல்லது பொறுப்புக்கள் எடுப்பதையோ விரும்பியவர்கள் அல்ல. தவிர்க்கமுடியாமலே சகித்துக் கொண்டார்கள். இந்த உள்முரண்பாட்டின் உச்ச வெளிப்பாடே கருணா பிளவு ஆகும். இதற்கு முன்பு மிதவாத அரசியலில் இருந்து மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியை பின்னர் தழிழர் விடுதலைக் கூட்டணியை காலூன்ற வைத்த சொல்லின் செல்வர், முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட செ.இராசதுரை விலகிச்சென்றிருந்தார் என்பதை மறக்கக் கூடாது. இந்த உண்மையை யாழ் மேலாதிக்கம் உணர மறுக்கும் வரை தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இருக்க முடியாது என்பதே உண்மையாகும்.

மேலும் வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசமாக இருந்த போதிலும் வடக்கின் சமூக, பொருளாதார, அரசியல் வேறு கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமை வேறு தமிழ் அரசியல் தலைமைகளும் போராட்டத் தலைமைகளும் இரண்டுக்கும் ஒரே வகையான அரசியல் நடைமுறையினை கையாண்டதன் விளைவே கிழக்கு மக்கள் இன்று அரசியல் அனாதைகளாக்கப்படுவதற்குக் காரணமாகும். இதனையும் மேற்கூறிய மூன்று வகைப்பாட்டினரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

கிழக்கின் அரசியல் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கூட கிழக்கில் தனியான அரசியல் நடைமுறையினைக் கையாழ்வதற்கு வக்கற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவ்வாறு தனியான அரசியல் நடைமுறையினைக் கையாளும் போது அது தங்களுடைய யாழ்ப்பாண அரசியல் இருப்பை பாதிக்கும் என அஞ்சுகிறார்கள். கிழக்கில் பிள்ளையானுடன் சேர்ந்து இயங்கும் கட்சியின் இருப்பு வடக்கில் கேள்விக்குறியாகும் என நினைக்கிறார்கள். எனவே இந்த அரசியல் கட்சிகள் வடக்கு மக்களைத்தான் கவனத்தில் கொள்கிறார்களே தவிர கிழக்கு மக்களை அல்ல என்பதும் கவனத்தில் எடுத்தக்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தினையும் பிள்ளையான் தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக் கொள்வதாக இல்லை.

முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண ஆட்சியினையும் பின்னர் கிழக்குமாகாண ஆளுநர் நியமனத்தில் எதுவும் செய்யமுடியாத தமிழ் அரசுக் கட்சியினர் தேவாலயக் குண்டு வெடிப்பில் உண்டான முஸ்லிம் வெறுப்புணர்வை தங்கள் அரசியல் இலாபத்துக்காக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் ஹிஸ்புல்லாவின் வெலிக்கந்த பல்கலைக் கழகத்துக்கும் காணிவழங்கியது பிள்ளையானும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக் கூறி பிள்ளையானை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள். இது அவாகளின் அரசியல் வங்குரோத்து நிலையினையே எடுத்துக்காட்டுகின்றது.

எனவே வடக்கு மக்களின் விருப்பு வெறுப்புக்கும் அவர்களுடைய அரசியல் இருப்புக்கும் கிழக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பது எந்தவகையிலும் நீதியானது அல்ல. எனவே கிழக்கு மக்கள் தங்களுக்கான ஒரு மாற்று அரசியல் தலைமையைத் தேடுகிறார்கள். இந்தத் தேடுதல் வடக்கிற்கு எதிரானதாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதில்லை. உண்மையில் கிழக்கு பலமாக இருக்கும் போதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் சுயநிர்ணயம் பாதுகாப்பானதாக அமையும் என்பதை பிரதேசவாதச் சாயம் பூசுபவர்களும் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘வெறுங்கையில் முழம் போடமுடியாது’ என்பார்கள் அது போல் தற்போது அந்த மாற்றுத் தலைமையாக பிள்ளையானை எடுத்துக்கொள்கின்றார்கள் அதன் வெளிப்பாடே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவாகும். இந்த ஆதரவும் வளர்ச்சியும் பிள்ளையானை பிள்ளையாராக ஆக்கி பூசிக்கப்பட வேண்டியவ ஒருவராக உருவாக்காமல் விமர்சனத்துக்கும் மாற்றத்துக்கும் உரிய தலைவராக பிள்ளையானை எடுத்துக்கொள்வதே இன்றைய கிழக்கின் தேவையாகும். 

0 commentaires :

Post a Comment