8/26/2019

தேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திருமாவளவனின் லண்டன் நிகழ்வு

Résultat de recherche d'images pour "திருமாவளவனின் லண்டன் நிகழ்வு"
கடந்த 24-25ம் திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த தோழர் திருமாவளவனுடனான சந்திப்போடும், அவரது அமைப்பாய்த் திரள்வோம் எனும் நூலினின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டும் திரும்பியுள்ளோம். ஒரு சிறு சல சலப்போடு ஆரம்பமாகி மிக நிறைவோடும், எம்மை பொறுத்தவகையில் அந்நிகழ்வானது தோழர் திருமாவளவனின் உரைமீதான ‘மிகத் தெளிவான’ புரிதலோடும் நிறைவடைந்தது.

இந்நிகழ்வை மிக சிரமத்துடன் பல்வேறு சுமைகளையும் தானே சுமந்துகொண்டு இந்நிகழ்வை நடத்தி முடித்ததில் வியப்புக்குரியராக திகழ்பவர் கே.கே. ராஜா. அவரோடு மிக நெருக்கமாக நின்று பணிபுரிந்தவர்களாக நண்பர்களான ராகவன், பௌசர் போன்றவர்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எனவே அவர்களுக்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும்.

இந்நிகழ்வில் உரையாற்றியவர்கள் குறித்த செய்திகளை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். அதுகுறித்த விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் வழியாக நீங்கள் அறியலாம்.

இதில் இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியாகிய எமது கருத்தும்-புரிதலும்

அமைப்பாய்த் திரள்வோம் நூல் மீதான அறிமுக உரையாற்ற கேட்கப்பட்டபோது அந்நூல் குறித்து பேசுவதாக இருந்தால் குறைந்த பட்சம் 40 நிமிடங்களாவது எமக்கு தேவைப்படும் எனக் கேட்டிருந்தோம் ஆனால் அனைவருக்கும் வழங்கப்பட்ட நேரமோ 7நிமிடங்கள்.

இந்நூலானது நாம் அறிந்து புரிந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களையும் சிந்திப்பதற்கான பல்வேறு கருத்துக்களும் நிறைந்திருக்கிறது. எமது சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளையும் அவற்றை எதிர்கொண்டு சிந்தித்து செயலாற்ற முன்வருபவர்களும் இந்நூலை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானது. தொடர்ந்து பேசுகையில் எமக்கு தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளின் அடிப்படைப் புரிதல்களில் எவ்வகையான குறைபாடுகள் இருக்கின்றதோ அதேபோன்றுதான் தோழர் திருமாவளவனுக்கும் எமது சமூகத்தில் நிலவும் சாதிய சமூகத்தின் புரிதல்களிலும் குறைபாடுகள் இருக்கும். என்பதோடு ஆறுமுக நாவலரின் கருத்தியலோடு இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட எமது சமூகத்தில் நிலவும் சாதிய ஓடுக்குமுறைப் பாகுபாடுகள் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தும் தேவதாசன் உரையாற்றினார். உரையாற்றுபவர்கள் வரிசையில் இறுதியாக இருந்ததால் அவருக்கு வழங்கபப்பட்ட நேரமோ 6நிமிடம்
இந்த அரங்கிலே இரண்டு திருமாவளவனை நான் பாரக்கின்றேன். ஒன்று உருவமாகவும் மற்றொன்று அரூபமாகவும் எனக்கு காட்சியளிக்கின்றது. உருவமாக என்முன் தோன்றும் திருமாவளவன் என்பவரை நான் கட்புலன் செவிப்புலன் எனும் புலனுர்வுகளால் மட்டுமே உள்வாங்கப்பட்டு உணர்வுபூர்வமாக புரிந்துகொண்ட ஒரு திருமாவளவன். ஆனால் இந்த அமைப்பாய்த் திரள்வோம் எனும் நூலினூடாக புரிந்துகொண்ட ‘அரூபமான திருமாவளவனே’ எனக்கு முதன்மையானவர் மதிப்பிற்குரியவராக தெரிகின்றார். இந்த அரூபமான திருமாவளவனை வெறும் உணர்வுபூர்வமாக மட்டுமல்லாது, உணர்வால், மனதால், கருத்தால், அறிவால் என பன்முக புரிதலுக்குள் வசமாகிப் புரிந்துகொள்ளும் தேவையை, அவசியத்தை புரிந்துகொள்வதால் இந்த அரூபமான திருமாவளவனே எனக்கு முதன்மையானவர். இந்த உருவமான திருமாவளவனோ பல்வேறு தந்திரோபாயங்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டிய திருமாவளவனாக இருக்கின்றார். இருப்பினும் தமிழகத்தின் முன்னகர்விற்கு தடையாக நிலைத்துவிட்ட கருத்தியலை தகர்த்து முன்னகர்விற்கான மாற்று சிந்தனையாளராகவே இந்த அமைப்பாய்த் திரள்வோம் எனும் அரூபமான திருமாவளவனை நான் காண்கின்றேன் என அசுரா அவர்கள் அவருக்களிக்கப்பட்ட 7 நிமிட சிற்றுரையை தகர்த்து 8 நிமிடங்களுக்குள் தனது பேருரையை நிகழ்த்தினார். இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் வெளியீடாக அசுராவின் உரைப்பிரதி நூலான ‘உய்த்துணரும் அரூபங்களால் ததும்பிநிற்கும் அமைப்பாய்த் திரள்வோம்’ எனும் கருத்துப்பகிர்வை தேவதாசன் அவர்களால் தோழர் திருமாவளவனிடம் அவ்வரங்கிலே கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் நிகழ்ந்த சல சலப்பின் பின்னணியும், தோழர் திருமாவளவனின் விடுதலைப் புலிகளின் ஆதரவும், பிரபாகரன் மீதான அபிமானமும்.

நிகழ்வு ஆரம்பமாகி சில நிமிடங்களில் பின்வரிசையில் இருந்து இரைச்சலும் குரல் உயர்த்தி நிகழ்வை நிறுத்திக்கொள்ளும் படியாகவும் சிலர் கேட்டுக்கொண்டனர். எமது காதுகளை நோக்கி தொடர்ந்து பாயும் இன்பத் தேன் மொழியான தமிழ் தேசிய மொழியாம் துரோகி எனும் பாடல் திருமாவளவனை நோக்கியும் பாடப்பட்டு இந்த துரோகியின் நிகழ்வு நடக்கக்கூடாது உடனடியாக நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்டனர். அவர்கள் திருமாவளவனை நோக்கி முன்வைத்த குற்றச்சாட்டுக்களானது: ராஜபக்சவுடன் கைகுலிக்கி மகிழ்ந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது என சிலவற்றை குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து எழுந்து நின்று கூச்சலிட்டனர். திருமாவளவன் அவர்களை அமருமாறும் இறுதியில் நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும், என்மீதான உங்கள் சந்தேகத்திற்கும் பதிலளிக்கின்றேன் அமைதியாக உட்காருங்கள் என கேட்டுக்கொண்டார். எமது நோக்கம், இலட்சியம் வழிமுறை என்பது கேள்வி கேட்பதல்ல, விவாதிப்பதல்ல, தீர்ப்பு வழங்குவதே எனும் பாணியில் எதையும் கேட்கமறுத்துக் கூச்சலிட்டனர். ஏற்பாட்டாளர்கள் மிகவும் சிரமப்பட்டே அவர்களை ஒருவாறு வெளியேற்றினார்கள்.

தோழர் திருமாவளவனின் பேருரை ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நிகழ்ந்தது. இறுதியில் அதிகமாக விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரன் குறித்த தனது மதிப்பின், விசுவாசத்தின் தன்மையை மிக அழுத்தமாக முன்வைத்தார். பிரபாகரன் தன்னோடு உரையாற்றியது. பிரபாகரினிடம் சாதியம் குறித்து தன்னால் கேட்கப்பட்டபோது தனது இயக்கத்திற்குள் சாதியம் தலைதூக்காத வகையில் தான் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் இருப்பினும் சமூகத்தில் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆதனால் அங்காங்கே நிகழும் சாதிய பாகுபாட்டிற்கு எதிராக நாம் தண்டனை வழங்கிவருவதாகவும் எனக்கு கூறினார். மலரும் தமிழீழத்தில் சாதியம் முற்றாக ஒழிந்துவிடும் என தனக்கு வாக்குறிதி அளித்தவர் பிரபாகரன் எனவும் கூறினார். தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு மலம் தீத்திய செய்திகேட்டு பிரபாகரன் இரண்டு மூன்று நாட்களாக தூக்கமின்றி அவதிப்பட்டதாக தனக்கு கூறியதாகவும் அந்த மலம் தீத்தியவன் என்னும் உயிரோடுதான் இருக்கின்றானா எனக்கேட்டதன் ஊடாக சாதி ஒழிப்பில் பிரபாகரன் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கின்றார் என்பதை நான் அப்போது புரிந்துகொண்டேன் எனவும் கூறினார்.

லண்டன் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களும், அந்நிகழ்வோடு நெருக்கமானவர்களும், அனைத்திற்கும் மேலாக அந்நிகழ்வை தலைமை தாங்குபவர் ராகவன் என்பதை அறிந்ததும் லண்டனுக்கு முன்பாக தமிழகத்திலே முதலில் சல சலப்பு ஆரம்பமாகிவிட்டது.

எனவே தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஆதரவும், பிரபாகரன் மீதான பிரமையும் ஒரு வலுவான உணர்வுத் திரட்சியாக தொடர்ந்தும் மையம் கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் தேர்தல் முடிவுகளுக்கு எந்தவகையில் பிரபாகரன் ஆதரவு பயன்படுகின்றது எனும் விவாதத்திற்கு அப்பால். உணர்வுபூர்வமான அரசியல் நிலைப்பாட்டில் தமிழகத்தின் சந்தைப்பொருளாக விலைப்பட்டுவரும் ஒரு பொருளாகவே விடுதலைப் புலிகள் ஆதரவும் பிரபாகரனின் தலைமைத்துவமும் அங்கு பயன்பட்டு வருகின்றது. இதுகுறித்த விரிவான தகவலை அசுராவின் ‘உய்த்துணரும் அரூபங்களால் ததும்பிநிற்கும் அமைப்பாய்த் திரள்வோம்’ எனும் கருத்துப் பகிர்வில் காணலாம்.

எனவே எம்மை பொறுத்தவரையில் லண்டன் நிகழ்வில் தோழர் திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையினூடான புலிகள் மீதான அபிப்பிராயமோ, பிரபாகரன் குறித்து அவர் கொண்டிருந்த நம்பிக்கைகள் என்பது தமிழகத்து அரசியலுக்கானதாகவே புரிந்துகொள்கின்றோம். பிரபாகரினின் மரணத்திற்குப் பின்பும் அவர்களின் அரசியலுக்கு அது தேவைப்படுகின்றது. அமைப்பாய்த் திரள்வோம் எனும் நூலினூடாக அரூபமாக தோற்றமளிக்கும் திருமாவளவனே எமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவரக தோற்றமளிக்கின்றார்.

ஆகவே தோழர் திருமாவளவன் விடுதலைப் புலிகள் மீதும் அதனது தலைவராக இருந்து ‘மாண்டுபோன’ பிரபாகரன் மீதான அபிப்பிரயங்களை வெளிப்படுத்தியது தொடர்பாக திருமாவளவன் மீது எமக்கு எந்த ஏமாற்றமோ, வருத்தமோ இல்லை. அவரது அமைப்பாய்த் திரள்வோம் நூலினூடாக அவர்மீதான மதிப்பும் மரியாதையுமே என்றும் நிலைத்து நிற்கும்.

இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி –பிரான்ஸ்- 26-08-2019

0 commentaires :

Post a Comment