9/29/2019

ஜேவிபிக்கு வாக்களிப்போம்- இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ்-

(ஜே.வி.பி எனும் கட்சி மீதான பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும் குறைந்த பட்சம் அக்கட்சியானது தனிநபர் அதிகாரப் பிரயோகம் இல்லாததாகவும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாத கட்சியாகவும் அறிய முடிகிறது. மேலும் ஆளும் மரபுக்கட்சிகள் மீதான சிங்கள மக்களின் அதிருப்த்திகளும் அதிகமாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனையும் ஒரு வாய்ப்பாகக் கருதி எதிர்கால இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தமிழ் மக்களும் அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கு வாக்களிப்பதே பயனுள்ள ஒன்றாக நாம் கருதுகின்றோம்.)Résultat de recherche d'images pour "jvp sri lanka"

தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் செயல்பாடுகள் என்பது இவ்வாறான மரபையே பேணிவருகின்றது: தேர்தல் தவிர்ந்த நாட்களில் தமிழ் ‘மக்களுக்கான அரசியல் நிலம்’ என்பது அந்நிலம் சார்ந்த மக்களோடு தொடர்புகளற்ற வறண்ட பிரதேசமாகவே இருக்கும். தேர்தல் காலநிலைகளில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியல் நிலமானது செழித்து பூத்துக் குலுங்கத் தொடங்கிவிடும்.
தற்போதும் இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் காற்று வீசத்தொடங்கிவிட்டது. தமிழ் அரசியல் ‘செடிகள்’ ‘மரங்கள்’ எல்லாம் துளிர்த்து மலரத் தொடங்கிவிட்டது. இருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் ‘ஆல விருட்சமானது’ (கூட்டமைப்பு) தனக்கான உரம் (சலுகைஇ சூட்கேஸ்) வழங்கப்படாததால் அதன் அரசியல் வேர்கள் மண்ணோடு மண்ணாகவே ஊர்ந்துகொண்டிருக்கிறது. அந்த ‘ஆல விருட்சம்’ ஒரு நாள் அரசியல் ‘செடிகள்’இ ‘மரங்களை’ மேவியவாறு தனது விஷ்வரூபத்தை காட்டி நிற்கும். ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் வாக்களிப்பும்:
இலங்கையின் ஆளும் தரப்பின் இரண்டு பிரிவினர்களின் தொடர்ச்சியான ஆளுமைகளால் தமிழ் மக்களும் பிற சிறுபான்மை இனங்களும் எதிர்கொண்ட நெருக்கடிகள் இழப்புக்களை நாம் இங்கு தொடர்ந்து நினைவு கூறவேண்டிய அவசியமில்லை. நேர்மையாகவும் இனச்சார்பு நிலையற்று சிந்திப்பவர்களாலும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மேற்படி இரண்டு தரப்பு அரசியல் ஆளுமைகளால் விழைந்த கேடுகளை புரிந்துகொள்ளமுடியும். இவர்களால் இலங்கைவாழ் சிறுபான்மை இனங்களின் பாதிப்பென்பது வெளித்தோற்றமானது. இவர்களால் இலங்கை தேசமும் பெரும்பான்மை இனங்களான சிங்கள நடுத்தர உழைக்கும் பிரிவினர்களும் மறைமுகமாக மிகவும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதை எவ்வித இனச்சார்பு நிலையற்று சிந்திப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்த இருதரப்பினர்களின் அரசியல் வேறுபாடுகளையோ அல்லது அவர்களது சர்வதேச வெளிவிவகார நிலைப்பாடுகளிலுள்ள வேற்றுமைகளையோ நாம் இங்கு புள்ளிவிபர சான்றுகளோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்ய முன்வரவில்லை. இலங்கையின் பின்காலனித்துவ ஆட்சி அதிகார வரலாற்றின் அனுபவத்தில் மேற்படி இருதரப்பினரின் ஆட்சி அதிகார நிர்வாகமானது அனைத்து மக்களுக்கும் தேசத்திற்கும் பாதகமானதாகவே செயல்பட்டு வருகின்றது. எனவே இவ்விரு தரப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகற்றப்பட வேண்டியவர்களாக நாம் கருதுகின்றோம்.
தோற்றமளிக்கும் வெளிச்சமாக ஜே.வி.பி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க
எமது நம்பிக்கைக்குரியவகையில் தோற்றமளிக்கும் இந்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் அவர்களது கட்சி மீதான தமிழ் தரப்பு விமர்சனங்கள் என்பதும் மிகவும் அவதானிப்புக்குரியதே. இவர்கள் இனப்பிரச்சனை குறித்து தமது அபிப்பிராயங்களை கறாராக முன்வைத்து செயல்பட்டவர்களல்ல! தமிழ் மக்கள் தொடர்பான அரசியலில் எவ்வகையிலும் வெளிப்படையாக தமது அபிப்பிராயங்களை முன்வைப்பவர்களாக இருந்ததில்லை! இறுதி யுத்தத்தின்போது பலவகையிலும் சிங்கள இனவாத அரசிற்கு சார்பாகவே செயல்பட்டு வந்தவர்கள்! தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அனுரகுமார திசநாயக்க அவர்களும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து எவ்விதமான உத்தரவாதமும் வழங்கமுடியாதவராக இருக்கின்றார்! எனவே அவரையோஇ அவரது கட்சியையோ தமிழ் மக்கள் எந்தவித நம்பிக்கையில் ஆதரவளிக்க முடியும்? வாக்களிக்க முடியும்? எனும் அபிப்பிராயமும் நிலவுகின்றது.
இதுவரையில் தமிழ் தரப்பு அரசியல் தலைமைகளானதுஇ நம்பிக்கை அடிப்படையிலும் வாக்குறுதிகள் வழங்குவதன் அடிப்படையில் ‘தோற்றமளிக்கும்’ சிங்கள தலைமைகளையே தொடர்ந்து ஆதரித்து வந்தும்…இ தொடர்ந்து ஏமாந்தும் போனவர்கள். எனவேதான் அவ்வாறான வாக்குறுதி வழ்ங்கக் கூடியதாகவும்இ நம்பிக்கை அளிக்கும் வகையிலான ஒரு ‘தோற்றமளிக்கும்’ தரப்பாக ஜே.வி.பி யின் வேட்பாளரும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான எதிர்பார்ப்பை தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்லஇ முற்போக்குஇ நடுநிலை விமர்சகர்களின் எதிர்பார்ப்பும் இவ்வாறாகவே அமைந்திருப்பதையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஜே.வி.பி உறுப்பினர்கள் சிலருடன் உரையாடிய வகையிலும் அவர்களது கட்சியின் மரபு சார்ந்த புரிதலின் அடிப்படையிலும் ஒரு முடிவுக்கு எம்மால் வரமுடிகிறது. அவர்களின் இலட்சிய நோக்கு என்பது அதிகமாக தமது சித்தாந்தத்திலும் அதனூடாக அவர்கள் முன்வைக்கும் கொள்கையை அடைவதற்கான இலக்கை நோக்கியே செயல்படுபவர்களாகவும் ஊகிக்க முடிகிறது. மாறாக இலக்குக்கான கொள்கை வகுப்பதிலும் அந்த இலக்கை அடைவதற்கு இடையூறாக கொள்கை சித்தாந்தங்கள் நிலவும் பட்சத்தில் அவைகள் மீதான மறுபரிசீலனை மேற்கொள்வதில் அவர்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் உணரமுடிகின்றது. அந்த வகையில் அவர்களது இலக்கு என்பது கொள்கையும்இ சித்தாந்தமும்தான். இந்த சம்பவத்தை எமது ஆயுதப்போராட்ட அனுபவங்களூடாகவும் நாம் கண்டுகொள்ளலாம். விடுதலைப் புலிகளோடு இணைந்த சில இடதுசாரிய சிந்தனையை உள்வாங்கிய அமைப்புகளும் இவ்வாறான சித்தாந்தக் கொள்கைகளையே நிறைவேற்றும் பிரதான இலக்காக கருதியவர்கள். அவ்வாறான தமது சித்தாந்த பற்றுதியின் பின்னணியில்தான் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்தார்கள். விடுதலைப் புலிகளோடு இணைந்தும் செயல்பட்டார்கள். புலிகளின் தனிநபர்கள் மீதான கொலைகளையும் நியாயப்படுத்தும் வகையில்இ அவைகள் ஆயுதப்போராட்டத்தில் தவிர்க்கமுடியாத அசம்பாவிதங்கள் எனவும் கருதிக்கொண்டார்கள். பிற்பாடு தமது நேரடி அனுபவங்களூடாக பலர் மௌனமாகி விலகிக்கொண்டனர். சிலர் புலியின் வாலைப்பிடித்த பரிதாப நிலைக்கும் உள்ளானார்கள்.
அரசியல் கள உழைப்பின் அனுபவம் என்பது எமக்கு அறவே இல்லை. வாக்குறுதியளிக்கும்இ நம்பிக்கையளிக்கும் வகையிலான ‘தோற்றமளிக்கும்’ கட்சிகளையும் தலைமைகளையுமே நாம் எதிர்பார்த்து அரசியல் செய்து பழக்கப்படுத்திக் கொண்டோம். அரசியல் கள உழைப்பு சார்ந்த அனுபவத்தின் முன்னோடிகள் என்று எமக்கு யாரும் இல்லை.
இவ்வாறான அனுபவங்களோடு தற்போது நடைபெற இருக்கம் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யின் வேட்பாளரான அனுரகுமார திசநாயக்க அவர்களையே இலங்கையின் மாற்று சக்தியாக கருதவேண்டியுள்ளது. அவரும் அவரது கட்சியும் தமிழ் மக்களுக்குரிய ‘தோற்றமளிக்கும்’ சக்தியாக காட்சி தராதபோதும் அவர்களை ‘தோற்றுவிக்கும்’ (சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளின் நியாயங்களை உரையாடிப் புரியவைப்பது) தலைமையாகவும்இ ‘தோற்றுவிக்கும்’ கட்சியாகவும் மாற்றுவதற்கு அரசியல் கள உழைப்பாளிகளைக் கொண்ட தமிழ் அரசியல் சக்திகள் தேவைப்படுகின்றது. துரதிருஷ்டவசமாக அவ்வாறான சமகால தமிழ்-அரசியல் கள உழைப்பாளிகளை எம்மால் இனம்காண முடியவில்லை.
சமகாலத்தவர்கள் அனைவரும் தமது கட்சி நலன்களுக்காகவும்இ தமது சுய தேவைகளுக்குமான எதிர்பார்ப்புடன் செயல்படும் தரப்பினராகவே எம்மால் அவதானிக்க முடிகிறது.
ஜே.வி.பி எனும் கட்சி மீதான பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும் குறைந்த பட்சம் அக்கட்சியானது தனிநபர் அதிகாரப் பிரயோகம் இல்லாததாகவும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாத கட்சியாகவும் அறிய முடிகிறது. மேலும் ஆளும் மரபுக்கட்சிகள் மீதான சிங்கள மக்களின் அதிருப்த்திகளும் அதிகமாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனையும் ஒரு வாய்ப்பாகக் கருதி எதிர்கால இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தமிழ் மக்களும் அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கு வாக்களிப்பதே பயனுள்ள ஒன்றாக நாம் கருதுகின்றோம்.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்து வரும் இரண்டு ஆளும் தரப்புகளுக்கு எதிராக வாக்களிப்பதற்கு அண்மையில் நிகழ்ந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நீராவியடி சம்பவத்தின் அனுபவமும் போதுமானதே. தீவிர பௌத்த அடிப்படைவாத பிக்குகளின் இனவாத செயல்களுக்கு மறைமுகமாகவும்இ வெளிப்படையாகவும் மேற்படி இரண்டு ஆளும் தரப்பினர்களின் ஆதரவென்பது தொடர்ந்துகொண்டே இருந்து வந்திருக்கின்றது. எனவே புதிதாக ஒரு தரப்பினரையே இலங்கையின் ஆளும் தரப்பாக நாம் எதிரபார்க்கவேண்டிய நெருக்கடியான சூழலாகவும் கருதவேண்டியிருக்கின்றது.
இதை நாம் அதிகமாக எதிர்காலத்தின் புதிய தலைமுறைகளிடமே எதிர்பார்க்கின்றோம். அவர்களாலேயே வாக்களிப்பதோடு மட்டுமல்லாது ‘தோற்றுவிக்கும்’ தலைமை ஒன்றிற்கான கள அரசியல் உழைப்பின் முக்கியத்துவம் கருதப்படமுடியும் எனவும் நம்புகின்றோம்.
இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ்-

0 commentaires :

Post a Comment