8/26/2021

காபூல் விமான நிலைய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலி

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தபோது காயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.


அங்கு இரண்டு தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. ஆனால்இ அதை பிபிசி இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

சம்பவம் நடந்தபோது நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலைய வாயில் பகுதிக்கு எதிரே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை வாயில் பகுதியில் இருந்த தாலிபன்கள் உள்ளே செல்லுமாறு வற்புறுத்தி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்ததாகவும் தெரிய வருகிறது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
»»  (மேலும்)

2000 ரூபா கிடைக்காதவர்கள் முறையிடலாம்

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்யலாம்...!

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அல்லது கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையீட்டை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
»»  (மேலும்)

8/19/2021

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தலைவி காலமானார்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு உறுப்பினரும் மகளீரணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார்.

இவரது மரணம் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ சந்திரகாந்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்

கட்சியின் மூத்த தலைமைகளின் ஒருவராக இருந்து கட்சியை வளர்த்தெடுத்தமையில் செல்வி மனோகர் அவர்களின் பங்களிப்பு என்றும்  எம்மால் மறக்க முடியாதது. 

ஒரு கட்சியின் மகளீரணி செயற்பாடுகள் என்பதைத்  தாண்டி   பெண்களை அணிதிரட்டுவதிலும் அரசியல் மயப்படுத்துவதிலும்  செல்வி அவர்களின் களப்பணிகளும் கடின உழைப்பும் என்றும் போற்றத்தக்கன.

வருடந்தோறும் இடம்பெறும் மகளீர்தின நிகழ்வுகளை மக்கள் மயப்படுத்தி கிழக்கிலங்கை   பெண்களின் விடுதலை குரல்களை உலகறியச் செய்த அவரது அயராத பணியானது கனதிமிக்கது . 
 
குறிப்பாக 'நல்லாட்சி' காலத்தில்  எமது கட்சி எதிர்கொண்ட நெருக்கடிமிகுந்த சூழலில்   கட்சியை பாதுகாப்பதில்  அவர் காட்டிய பிரயத்தனங்கள்   எமது கட்சியின் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கன.

செல்வியக்கா என்று எங்களனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட செல்வி மனோகரனது இழப்பில் மீளாத்துயரில் உழலும் அவரது கணவர்,குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கட்சியின்  மகளீரணியினர் மற்றும் உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமைப் பணிக்குழு சார்பில் எனது ஆழ்ந்த  அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதோடு செல்வியக்காவுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன். என்றும் தெரிவித்துள்ளார்.

»»  (மேலும்)

எளிமையாக நடந்த பிள்ளையானின் பிறந்ததின நிகழ்வுகள்

கிழக்கின் தலைவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடம்பரமான நிகழ்வுகள் தவிர்த்து சமூக நலப்பணிகள் பல  இடம்பெற்றுள்ளது.

 இரத்ததான நிகழ்வு, சிரமதானங்கள் மாவட்டம் முழுக்க 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் என்று பல நிகழ்வுகளும் சிறப்பு பூஜைகளும் மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க நடைபெற்றுள்ளன. 

 அதனடிப்படையில் பேத்தாழை பொது நூலக வளாகத்தில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் புதுக்குடியிருப்பு கிராமிய மட்ட குழுவின் தலைவருமான திருமதி சோயா ஜெயரஞ்சித் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

»»  (மேலும்)

8/14/2021

சீற்றங்கொண்ட பிள்ளையான்


 நேற்று வியாழனன்று  மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் இணைந்து மாவட்டத்திலுள்ள வாகரை, பனிச்சங்கேணி, கொக்கட்டிச்சோலை, கிரான்குளம் உள்ளிட்ட இடங்களுக்கான கள விஜயத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழு  தலைவர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார். 

நீரியல்சார் வளங்களை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், புதிய துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகள் போன்றவற்றினை அமைத்தல்  என்பன தொடர்பாக  இவ்வேளையில் ஆராயப்பட்டது. 

இதன்போதே பிள்ளையானது மாகாணசபை ஆட்சிக்காலத்தில் பிரதேச பொதுமக்களுக்கென பிரித்துக்கொடுக்கப்பட்ட 'வட்டவான் இறால்வளர்ப்புத்திட்டம்' தற்போது பெருமுதலாளிகளின் சொந்தமாகியிருப்பதையிட்டு அதிருப்தி தெரிவித்ததோடு கடந்த நல்லாட்சி அரசில் தனது மக்கள் நலத்திட்டங்கள் பண முதலைகளுக்கு தாரைவார்க்கப்பட்டமைக்கு யார் காரணம் என அதிகாரிகளை கடிந்து கொண்டார். அவற்றை ஏழைகளுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

அவர்  சிறையிலிருந்த காலத்தில் நடந்த மேற்படி சம்பவங்கள் பற்றி  அவரது சிறைக்குறிப்புகளுடன் வெளியான நூலில்  அவர் ஆதங்கப்பட்டு எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

8/13/2021

மாகாணங்களுக்கிடையிலான அனைத்து வீதிகளும் முடக்கம்

மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசியமற்ற எந்தவொரு பயணத்தையும் மாகாணங்களுக்கிடையில் மேற்கொள்ள வேண்டாம். மாகாணங்களுக்குள் உட்புகும் பிரதான மற்றும் குறுக்கு வழிகள் அனைத்து முடக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். தனிப்படுத்தல் சட்டத்தைமீறி எவரும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் கைதுசெய்யப்படுவர். அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பெறப்படும் என்றார்.

»»  (மேலும்)

8/12/2021

எத்தனை பேரை இழந்தோம்?
இலங்கை அரசியலில் – குறிப்பாக எனது ஊடக பணியில் இந்த ஓகஸ்ட் மாதம் முக்கியமான மறக்கமுடியாத மாதங்களில் ஒன்று.

#ஞாபகங்கள் 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு மாலைப்பொழுதில்தான் கொழும்பின் கறுவாக்காட்டுப் பகுதியில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் பிரான்ஸை சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 17, தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதே 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஒரு சனிக்கிழமை இரவு 9.30 ஆளவில் கேதீஸ் என்று அழைக்கப்படும் அப்போதைய அரச சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதே 2006ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 4.40அளவில் அலுவலகத்திற்கு எனது வாகனத்தில் புறப்பட்டு சென்ற வேளை நான்  காணாமல் போனேன். 

சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும்  முன்னைய சம்பவங்கள், என் வாழ்வில் கடந்து வந்த கரடு முரடான பக்கங்களின் ஞாபகங்களையும் மீண்டும் நினைவில் கொண்டு வருகின்றன. அவையே இந்தப் பதிவின் வெளிப்பாடு.

2005 ஓகஸ்ட்டில் லக்ஸ்மன் கதிர்காமர், அவரது வாசஸ்தலத்தில் நீச்சல் தடாகத்தில் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சில நிமிடங்களிலேயே  அன்று நான் பணிபுரிந்த சூரியன் எவ்.எம்மின்  செய்தியில் Breaking news ஆக ஒலிபரப்பினோம். 

வழமைபோல் நம் செய்திப்பிரிவே முதலில் இந்தத் தகவலை ஒலிபரப்பிய ஊடகங்களில் முன்னிலை வகித்தது. அன்று பணி முடிந்து நான் வீடு சென்ற சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் குறித்து வந்த தொலைபேசி தகவல்களை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டோம். அது குறித்து மேலதிக தகவல்களை அறிவதற்கு  நிறுவனத் தலைவரிடம் இருந்தும் எனக்கு  அழைப்பு வந்தமை 16 வருடங்களின் பின் ஞாபகம் வருகிறது. 

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் பிரான்ஸை சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 17, தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு 15, வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 
இந்தக் கொலை இடம்பெற்று ஒரு மிகக் குறுகிய நேரத்திலேயே சூரியன் எவ்.எம் செய்தியில் Breaking news வெளியானது. 

அதுமட்டுமல்லாது அந்தப்பகுதியில் இருந்த ஒருவர் (பெயர் ஞாபகம் இல்லை) கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்த அந்த சூழலில், கையடக்கத் தொலைபேசிக்கான சிக்னல் குறைவாக இருந்த நிலையிலும், ஒரு கட்டடத்தின் கூரையில் இருந்து தந்த தகவல்கள் நேரடி ஒலிபரப்பாக கலையகத்தில் இருந்த அறிவிப்பாளருடன் (யார் என்பது நினைவில் இல்லை) இணைந்து நான் மேற்கொண்டிருந்தேன். 

ஆனால் ஒரு கட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட ஆண்கள் பெண்களின்  சடலங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தி இருந்தோம். ஆனால்  அவர்கள் அக்ஷன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் என்பது பின்பே தெரிய வந்தது. இந்த செய்தியும் சூரியன் எவ்.எம்மிலேயே முதலில் வெளிவந்தது.

இவ்வாறே 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஒரு சனிக்கிழமை இரவு 9.30 ஆளவில் அப்போதைய அரச சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் என்றழைக்கப்படும் கேதீஸ்வரன் லோகநாதன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உடனடியாகவே தெஹிவளையில் இருந்து வந்த தகவல் ஒன்றி அடிப்படையில் இந்த தகவலை உறுதிப்படுத்த தெஹிவளை காவற்துறைக்கு அழைப்பெடுத்தேன். அவர்கள் துப்பாக்கிச் சூடு ஒன்று இம்பெற்றதை உறுதிப்படுத்தினார்கள் மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை. பின்னர் தெஹிவளையில் இருந்த சிங்கள, தமிழ் நண்பர்களிடம் மேலதிக தகவல்களை பெறக் கூடியதாக இருந்தது. அதத்துடன் அலுவலகத்தில் இருந்தும் இது குறித்து சிங்கள செய்திப்பிரிவும் கூடுதல் தகவல்களை பெற்ற்று இருந்தனர். இவை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நான் நினைக்கிறேன் 9.45 – 10.00 மணிக்கு இடையில் சூரியனில்  Breaking news ஆக ஒலிபரப்பினோம். 

எனக்கு கவலையை ஏற்படுத்திய மரணங்களுள் கேதீஸின் மரணமும் ஒன்று. இவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எமது அலுவலகம் இருந்த உலக வர்த்தக மையத்தின் ஒரு மாடியில் இருந்த சமாதான செயலகத்தில் இவரைச் சந்தித்து இருந்தேன். அதன் பின் வானொலியில் ஒரு நேர்காணலையும் செய்திருந்தேன். புலமைசார் மட்டத்தில் அப்போது இருந்த புத்திஜீவிகளில் முக்கியமானவர். 

இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இடம்பெற்றாலும், முதலில் சூரியன் செய்தியிலேயே Breaking news  வரும் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. இதனை இலங்கையின் ஊடக பரப்பினரும் அன்று அங்கீகரித்திருந்தனர்.

ஆனால் துர்ப்பாக்கியம் என்னவெனில் இதே 2006ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 4.40அளவில் அலுவலகத்திற்கு எனது வாகனத்தில் புறப்பட்டு சென்ற வேளை காணாமல் போன என் செய்தியையும் இதே சூரியன் எவ்.எம் செய்தியே முதலில் ஒலிபரப்பியது. அன்றைய காலை 6.45 ற்குரிய செய்தி ஆசிரியர் காணாமல் போனதை Breaking news  ஆக காலையிலேயே ஒலிபரப்பாக்கி இருந்தனர்.

நன்றிகள்*முகநூல் நடராஜா குருபரன்
»»  (மேலும்)

8/10/2021

இன்று ஆதிக்குடிகள் தினம்.


இன்று ஆதிக்குடிகள் தினம். அதற்குப் பொருத்தமாக கனகசபாவதி சரவணபவன் எழுதிய கிழக்கின் பழங்குடிகள் (Tribes of the East) நுாலை நண்பர் சிராஜ் மஸ்ஹுர் அனுப்பியிருந்தார். அதனை நண்பர் கவிஞர் அலறி சேர்ப்பித்திருந்தார். கிழக்கு மாகாண ஆதிக்குடிகள் பற்றிய நுால். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பழங்குடிகள், வேட்டையாடிகள், காப்பிரிகள் பற்றி உரையாடல்களாலான நுால். LES VEDDAHS DU SRI LANKA - 1arcencielpourlesrilanka.com
கிழக்கின் ஆதிக்குடிகள் (வேடர்கள்) பற்றி மூன்று தசாப்தங்களுக்கு முன் கலாநிதி சி.வி. தங்கராஜா பல ஆய்வுகளை செய்திருந்தார். கலாநிதி சி. ஜெயசங்கர் குழுவினர் கிழக்கு வேடர்களின் அரங்க, இலக்கியச் செயற்பாடுகளை வெளியுலகு அறியச் செய்ய பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள். பேராசிரியர் கிருஸ்ணராஜா, கலாநிதி சி.வி. தங்கராஜா, நான் உட்பட நரிக்குறவர்களில் சில முன்னெடுப்புக்களைச் செய்திருந்தோம். இதனையும் பல்வேறு ஆய்வுச் செயற்பாடுகள் அதிகம் நடந்திருக்கலாம்.
நண்பர் கமல் பத்திநாதன் கிழக்கின் வேடுவர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, அதனை நுாலுருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். இது உள்ளிருந்து தன் வரலாறு காணும் முயற்சி. என்னிடமும் சில, பல விடயங்களை அவ்வப்போது பரீட்சித்துக்கொள்வார்.
இதனைவிடவும், உதிரியாக பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகளுக்காகவும், புள்ளிகளுக்காகவும் செய்த பல ஆய்வுகள் வெளிப்படுத்தப்படாமல் கறையான்கள் அரித்த கதைகளும் இருக்கின்றன.
உயிரியல் பல்வகைமையில், ஒரு முக்கியமான மட்டம், கலாச்சார பல்வகைமை. இது  மனிதர்களின் காணப்படும் வாழ்க்கை முறைகளின் பல்வேறுபட்ட தன்மைகளுடன் சம்பந்தப்பட்டதுடன், பாரம்பரிய மனித குழுக்கள், பழங்குடிகள், அவர்களின் தாவர, விலங்கு, மருத்துவ, காலநிலை போன்ற பல்வேறு சுதேசிய அறிவுகளுடன் ஆராய்ந்து, அதனை பயனுள்ள முறையில் உபயோகிக்கின்றது.
கலாச்சார பல்வகைமை:
உலகில் 200 மில்லியன் பழங்குடி மக்கள் காணப்படுகின்றனர். உதாரணமாக அமேசன் காடுகளில் காணப்படும் மக்கள், அவுஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்கள், இலங்கையிலுள்ள வேடர்கள். நாம் பழங்குடி மக்களை, அவர்களின் வாழ்க்கை முறைகளை உயிர்ப்பல்வகைமையின் ஒரு அங்கமாகவும் நோக்கலாம்.
உயிர்ப்பல்வகைமை போன்று, பழங்குடி மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் நவீன மனிதர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுச் செல்கின்றன. உதாரணமாக அமேசன் பகுதியில் காணப்பட்ட 6 மில்லியன் பழங்குடி மக்களில், தற்போது 200,000 கும் குறைவானோரே எஞ்சியுள்ளனர். இலங்கையிலுள்ள வேடர்கள் சிங்களவர், தமிழரிடையே தன்மயமாக்கப்பட்டுள்ளனர். பூகோளமயமாதலின் விளைவாக உலகில் காணப்படும் 6000 மொழிகளில் அரைவாசி அடுத்த 100 வருடங்களில் அழிந்து விடலாம் என எதிர்வு கூறப்படுகிறது. பழங்குடி மக்களிடையே பாரம்பரியமாக உபயோகிக்கப்பட்டு வரும் பயிர்ச்செய்கை இனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட இனங்களால் அழிக்கப்படும் அபாயமும் உண்டு. எமது கிராமங்களில் பாரம்பரியமாக உபயோகிக்கப்பட்ட பயிரினங்கள், புதிய கூடிய விளைவுகளைக் கொடுக்கக் கூடிய பயிர்களிற்கு இழக்கப்பட்டு வருவதும், பல வகையான கோழி, ஆடுகள் போன்ற பண்ணை விலங்குகள் வர்த்தக ரீதியான இனங்களிற்கு இழக்கப்பட்டு வருவதும் நடைபெற்று வருகின்றன.
பழங்குடி மக்கள் முக்கியமாக உயிர்ப்பல்வகைமை கூடிய இடங்களிலேயே, அதாவது காடுகள் போன்ற இடங்களிலேயே காணப்படுகின்றனர். அதனால் தொன்று தொட்டு இவர்கள் உயிர்ப்பல்வகைமையுடன் சேர்ந்து வாழ்வதற்கு, அவற்றை அழிக்காமல் உபயோகிப்பதற்கான வழிமுறைகளை அறிந்தவர்கள். பழங்குடிமக்கள் பற்றிய அறிவு எமது தற்போதைய உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு தேவைகளுக்கு முக்கியமானது.
உயிர்ப்பல்வகைமையை பேண்தகு முறையில் உபயோகிப்பதற்கான முறைகளை அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, நாம் இருபதிற்கும் குறைந்த தாவரங்களையே உணவிற்காக பயன்படுத்துகிறோம். ஆனால் ஆபிரிக்கா நாட்டைச் சேர்ந்த Efe pygmies  100 க்கும் மேற்பட்ட தாவரங்களை உணவிற்காக பயன்படுத்துகின்றனர். ஒரு இனத்தில் காணப்படும் வான் வகை (wild strains) பல்வகைமை தன்மையின் அறிவு எமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிற்கு முக்கியமாகும்.
விஞ்ஞான முன்னேற்றமடைந்த மனிதன் கண்டுபிடிக்காத பல மருந்து வகைகள் பழங்குடி மக்களிடையே உபயோகத்திலுள்ளது. உதாரணமாக 3000 கும் மேற்பட்ட தாவரங்கள் கருத்தடைக்காக பழங்குடி மக்களிடையே பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் காணப்படும் ஆயுர்வேத வைத்திய முறையில் பயன்படும் மூலிகைகளும் இதற்கு மற்றுமொரு உதாரணமாகும்.
இவை போன்ற பல்வேறு காரணங்களால் பழங்குடிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பழங்குடிகளை பாதுகாப்போம். அவர்களைப் போற்றுவோம். நன்றி முகநூல் *அம்ரிதா
»»  (மேலும்)

8/07/2021

முகநூல் பதிவொன்றுக்காய் மூக்குவழிய அழுத சுமந்திரன்

கடந்தவாரம் batti.tv என்கின்ற ஒரு முகநூல் பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுக்காக வரும் காட்சிகள் ஒளிபரப்பானது. வயோதிபம் (88)காரணமாக அவரை கைத்தாங்கலாக பலர் கொண்டுவந்து பாராளுமன்ற ஆசனத்தில் அமர்த்துகின்றனர். அந்த காணொளியை ஒளிபரப்பிய batti.tv "சம்பந்தரின் முதிர்ந்த முதுமையில் அவரால் மக்கள் பணியாற்ற முடியாது என்பதையிட்டு கருத்துச்சொன்னது." அதில் எந்தவொரு வார்த்தைகளும் அவரது முதுமையை கிண்டலோ, கேலியோ செய்யவில்லை.

ஆனால்  batti.tv யின் அந்த விமர்சனங்களை மட்/பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனை திட்டி தீர்க்க தனக்கு வாய்ப்பாக கருதி அக்கருத்துக்களை திரித்த சுத்துமாத்து சுமந்திரன் batti.tv சம்பந்தரின் முதுமையை கிண்டல் செய்ததாக கதையளந்திருக்கின்றார். அதனுடாக  பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்காக தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை ஒரு முகநூல் பதிவுக்காக வீணடித்திருக்கின்றார். சிலவேளை முகநூல் பதிவாக இருந்தாலும் அதற்கு ஒரு மக்கள் பிரதிநிதி அதற்கு பொறுப்புமிக்க பதில் சொல்லவேண்டிய கடப்பாட்டை  கொண்டவர்தானே? என்று அவர் யோசித்து ஒரு பதிலை வழங்கியிருக்கமுடியும். 

சிலவேளை வயோதிபம் என்பது சம்பந்தரது சிந்தனாசக்தியை பாதிக்கவில்லை,அவரது பேச்சுத்திறனை பாதிக்கவில்லை. என்று பதிலளித்திருக்க முடியும். ஆனால்  சம்பந்தர் என்பவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட முடியாதவர் என்பதுபோலவும், ஊடகங்களின் கருத்து வெளிப்பாடு என்பது என்றும் தமக்கே சார்பாக இருக்கவேண்டும் என்பதுபோலவும் மிரட்டும் தொனியில் அவர் உரையாற்றியுள்ளார். 'முதுமையை கிண்டலடித்தமை ஊடாக batti.tv மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தி விட்டது' என்று  முதுமைக்கும் அங்கவீனத்துக்கும் முடிச்சுப்போட்டு  பொய்வழக்காடும் நீதிமன்ற பழக்க தோஷத்தில் கதையளக்கின்றார். 

இப்படியாக ஒரு ஊடகத்தை மிரட்டும் சுமந்திரனுக்கு எதிராக batti.tv மனித உரிமைமீறல் வழக்குகூட தாக்குதல் செய்யலாம். 

 
»»  (மேலும்)

8/02/2021

பொலிவுறும் மட்டுமாநகர்

மட்டக்களப்பு புறநகர் பகுதியான திருப்பெருந்துறையினை மையப்படுத்தியதாக நடைபாதை, மற்றும் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று குறித்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ

சந்திரகாந்தன் திட்டமிட்டு வருகிறார்.

அவர் சிந்தனையில் நகரவாசி களுக்கான நடைபாதை மற்றும் உடற்பயிற்சி சாதனங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி திட்டமாக இது வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான கள விஜயம் ஒன்றினை கடந்த வாரம் அவர் நடத்தினார். இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

8/01/2021

புலிக்குளம்

புலிக்குளத் திட்டத்தை சாத்தியமாக்கிய அமைச்சர் டக்ளஸிற்கு பல்கலை சமூகம் நன்றி தெரிவிப்பு
....................

கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து நீரைப் பெறும் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு யாழ் பல்கலைக்கழக பேரவை நன்றி தெரிவித்துள்ளது. 

இன்றையதினம்(31-07-2021) துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தின்போதே, கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக 2013ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்துக்கு அறிவியல்நகர் பகுதியில் 568 ஏக்கர் காணியைப் பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பின்னர், பல்கலைக்கழக வளாகத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுப்பதற்காக, பல்கலைக்கழகத்துக்குப் பின்புறமாக இருக்கும் புலிக்குளத்தைப் புனரமைத்து, அங்கிருந்து வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவரும் திட்டத்தை சாத்தியப்படுத்த ஏற்பாடு செய்திருந்தார். 

யாழ் பல்கலைக்கழகம் சார்பில் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

சுமார் 80 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட இந்தத் திட்டத்தை, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துதவற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார். 

இந்தப் பணிகளின் முன்னேற்ற  நிலை தொடர்பாக கடந்த 13ம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் ஆகியோருடன் நடாத்தியிருந்தார். 

இதன்போது, புலிக்குளத்தை அண்மித்ததாக இருக்கும் சுமார் 150 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலத்தையும் அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கே வழங்கவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். 

இதன்பிரகாரம் முதல் கட்டமாக 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு குளத்திலிருந்து நீரை எடுத்துச் செல்வதற்கான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் திரு.ராஜகோபு ஊடாக பணிகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.  

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையில் அண்மையில் குளப்புனரமைப்புப் பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம், அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விவசாயபீடம், பொறியியல்பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவை பயனடையவிருப்பதுடன், விவசாயபீடத்தின் விவசாயச் செயற்பாடுகளுக்கும் அது வரப்பிரசாதமாக அமையவிருக்கிறது. 

இவ்வாறு, அறிவியல்நகர் பல்கலைக்கழகத்துக்கு புலிக்குளத்திலிருந்து நீரைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தந்ததுடன், மேலதிகமாக 150 ஏக்கர் காணியையும் பெற்றுத்தந்தமைக்காகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அவரது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளரும், பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கோ.றுஷாங்கனுக்கும், துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையிலான யாழ் பல்கலைக்கழக பேரவை இன்றையதினம் நன்றி தெரிவித்திருந்தது.
»»  (மேலும்)