4/29/2022

பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே


ஒரு சிறந்த தலைமைக்குரிய 
சிறப்பம்சம் என்பது விமர்சனங்கள்,ஆலோசனைகள் எங்கிருந்து வந்தாலும் அவை குறித்து பரிசீலித்து நடவடிக்கைகளை எடுப்பது என்பதாகும். அந்த பண்பினை தமிழக முதல்வரிடம் அடிக்கடி காணமுடிகின்றது. 

இலங்கை நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களில் அக்கறைகொண்டு   ஈழத்தமிழர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தார். 

அவ்வேளை  இப்படி தமிழர் சிங்களவர் என்று பிரித்தறிந்து உதவி செய்வது வரவேற்கத்தக்கதல்ல என்கின்ற ஆட்சேபனைக்குரல்கள்  அதுவும் ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடியவர்களிடமிருந்தே எழுந்தது. திராவிடமுன்னேற்ற கழகத்தின் தோழமைகளின் ஊடாக அவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  

அவ்விமர்சனங்களின்  தாற்பரியத்தை புரிந்துகொண்டு 'தங்களது உதவிகள் முழு இலங்கை மக்களுக்குமானது' என்று தீர்மானித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மட்டுமன்றி தங்களது பிழையான அணுகுமுறையை இத்தகைய விமர்சனங்களின் அடிப்படையில் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் இன்று சட்டசபையில்  பகிரங்கமாக அறிவித்துள்ளார் முதல்வர்.

ஒரு தலைமைக்குரிய சிறப்பான பண்பு இது. பாராட்டுக்கள் முதல்வர் அவர்களே!

அரசின் அனுமதி கிடைத்தவுடன் இலங்கை மக்களுக்காக வழங்கப்படவுள்ள பொருட்களாவன…..  

*80 கோடி இந்திய ரூபாய்கள்  பெறுமதியான 40 ஆயிரம் தொன் அரிசி, 
  பருப்பு  போன்றவை.

*28 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான  137 வகையான    மருந்துப்பொருட்கள்.

* 15 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான 500 தொன் எடையுள்ள 'குழந்தைகளுக்குரிய பால்மா' பவுடர் 

தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள். 

»»  (மேலும்)

4/10/2022

வெருகல் படுகொலை ஒரு வரலாற்றுப் பார்வை


அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள்
 “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.

ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த “கிழக்கு பிளவு”அவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

புலிகளின் தலைமை தளபதியும் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான கேர்ணல் கருணா அறிவித்த கிழக்கு பிளவே மேற்படி நெருக்கடிக்கு காரணமாயிற்று.

புலிகளின் வரலாற்றை புரட்டிபோடும் வல்லமை அந்த கிழக்கு பிளவிற்குள் ஒழிந்திருந்ததை இருந்ததை புலிகளால் அனுமானிக்க முடியவில்லை.

கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாகிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதில் புலிகள் தவறுக்குமேல் தவறிழைத்தனர். கிழக்கு பிளவை தாண்டிச்செல்லுதல் என்பதே கடைசிவரை புலிகளால் முடியாது போன ஒரே காரியம் என வரலாறு  தன்பக்கங்களில்  குறித்துக்கொண்டது. 

அதன் காரணமாக 2004ம் ஆண்டை தொடர்ந்துவந்த ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாக அமைந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிடையே நீண்ட காலமாக தொடர்ந்துவந்த பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளே இந்த கிழக்கு பிளவின் அடிப்படையாக இருந்தது.

எனினும் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் உருவாக்கிய நிழல் நிர்வாக கட்டமைப்பில் நியமிக்கப்பட்ட 32 துறைசார் பொறுப்பாளர்களும் வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாண மக்களும் போராளிகளும் வடக்கு தலைமையால் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டே இந்த கிழக்குபிளவிற்கு உடனடி காரணமாயிற்று புலிகளது இராணுவ வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்த ஜெயந்தன் படைபிரிவும், அதன் தளபதி கருணாம்மானும் சுமார் ஆறாயிரம் போராளிகளுடன் பிரிந்து நின்று கிழக்கு பிளவை அறிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் சார்பில் அவர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை பல தளபதிகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் ஆதரித்து ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் கிழக்கு மாகாணமெங்கும் நடாத்தினர். ஆனால் அந்த மக்களின் குரல்களுக்கு புலித்தலைமை கிஞ்சித்தேனும் மதிப்பு வழங்கவில்லை.


“கருணாம்மான் தமிழ் தேசிய துரோகி “என்றும் அவர் ஒரு “தனிநபர்”என்றும் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் எத்தனிப்பில் புலிகள் இறங்கினர்.அதுமட்டுமன்றி புலிகளின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகள் மீது படையெடுத்து அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர்.


2004ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி அறிவிக்கப்பட்ட கிழக்கு பிளவானது யாழ்-மேலாதிக்கத்தின் இராணுவ வடிவமான  தமிழீழ  விடுதலை   புலிகளால் மூர்க்கத்தனமாக கையாளப்பட்டமை மாபெரும் படுகொலைக்கு வழிவகுத்தது.


கிழக்கு பிளவின் மீதான புலிகளது இந்த மிலேச்சத்தனமான அணுகுமுறைக்கு ஊக்கமளிப்பவர்களாகவும் ஆலோசனை வழங்குவர்களாகவும் தமிழ் புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் செயற்பட்டனர்.


இது அன்று தமிழ் இனத்துக்கு கிடைத்த பெரும் சாபமாகும். எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தவர்களுக்கு தமது சொந்த போராளிகளுடன்,நேற்றுவரை ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேச தெரியாதுபோனது.


இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் ஆற்றங்கரையில் மிகப்பெரிய படுகொலையொன்றை வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் படையினர் நிகழ்த்தினர். பிரிந்து செல்கிறோம், ஜனநாயக பாதைக்கு திரும்புகிறோம், சரணடைகிறோம் என்று என்று சொன்ன கிழக்கு போராளிகள் சுமார் 210 பேர் கோரத்தனமாக படுகொலை செய்யப்பட்டனர்.


பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு அவர்களது உடலங்கள் சின்னபின்ன படுத்தப்பட்டன. அந்த பிரதேசத்து கிராமவாசிகள் எல்லோரும் துரத்தியடிக்கப்பட்டு எவரது உடல்களும் புதைக்கப்படாமலும் அடையாளம் காணப்படாமலும் சுமார் ஒரு வாரத்துக்கு வெருகல் பிரதேசம் நாற்றமெடுத்து கிடந்தது.


இத்தனைக்கும் ஏப்ரல் 10ல் இந்த வெருகல் படுகொலை நடாத்தப்பட்டபோது இலங்கையில் நோர்வே தலைமையிலான சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. இந்த படுகொலையை  தொடர்ந்து கிழக்கு மாகாணம்   எங்கும் புகுந்த புலிகள் கிழக்கு பிளவை ஆதரித்த புத்திஜீவிகளை கொன்று வீசினர் ராஜன் சத்திய மூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம்,தில்லைநாதன் என பலரும் கொல்லப்பட்டனர்.


இந்த நிகழ்வுகளின் தொடராக கிழக்கு போராளிகள் பிரபாகரனது தலைமையிலான புலிகளுடன் மோதலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தனித்த கிழக்குமாகாண கோரிக்கை வலுப்பட்டது. கிழக்குப்போராளிகள் தமது போராட்டத்தின் ஊடாக   வன்னிபுலிகளை கிழக்கிலிருந்து துரத்தியடிப்பதில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வெற்றிபெற்று அதன் பின்னர்  ஜனநாயக பாதையில் காலடி வைத்தனர்.


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் எனும் அரசியல் கட்சி கிழக்கிலிருந்து உதயமானது.வடக்குக்குள் மட்டும் குறுக்கப்பட்ட புலிகளின் ஆயுள் 2009ம் ஆண்டு அரசபடைகளால் முடித்து வைக்கப்பட்டது.

»»  (மேலும்)

4/09/2022

வெருகல் படுகொலையின் 18 வது நினைவேந்தல்


வெருகல் படுகொலையின் 18 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்/ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஏற்பட்ட கிழக்கு பிளவின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த வெருகல் படுகொலையில் சுமார் 210க்கும் மேற்படட கிழக்கு போராளிகள் வெருகல் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

மிக கொடுமையான இந்த சகோதர படுகொலையை நினைவுகூர்ந்து கிழக்கிலங்கை சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியம் இந்த நினைவேந்தலை நடாத்துகின்றது.


»»  (மேலும்)

3/12/2022

மட்/சிறைச்சாலைக்குள் கரோயின் கடத்த முயன்றவர் கைது

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கரோயின் போதைபொருள் 

நேற்று (11.03.) மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிட வந்த ஒருவர் கரோயின் போதைபொருளை அக்கைதிக்கு கொடுக்க முற்பட்ட வேளை கைதாகியுள்ளார். சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் விளைவாக  குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.   

மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  மட்டக்களப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க அரபாத் என்பவரே இவ்வாறு கைதானவர் ஆகும்.

மட்டக்களப்பு நிருபர்   


»»  (மேலும்)

2/28/2022

மலையக மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்

மலைய அரசியல் அரங்கம் சார்பாக நுவரெலியா மாவட்ட. பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நியாய பூர்வமான கோரிக்கையுடன் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்கள் நாடுமுழுவதும் மேற்கொண்டு வரும் கையெழுத்து சேகரிப்பு நாளை (செவ்வாய்) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற இருக்கின்றது. 


நாடு முழுவதும் பயணித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த நியாயமான கோரிக்கையினை செவிசாய்த்து நாளையதினம் கிழக்கு வாழ் உறவுகளை இந்த கையெழுத்து சேகரிப்பில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கின்றது மலையக அரசியல் அரங்கம்
»»  (மேலும்)

13 வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோருங்கள்- புகலிடத்தமிழர்கள் வேண்டுகோள்

13 வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கையரசை கோருங்கள் என புகலிடத்தமிழர்கள்   சார்பில் கையெழுத்து இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக வாழும் இலங்கைத்தமிழ் அரசியல் ஆர்வலர்கள்  மேற்படி கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியுள்ளனர். 

சர்வதேசத்திடமோ இந்திய அரசிடமோ முன்வைப்பதை விட இக்கோரிக்கையானது இலங்கையரசிடம்  முன்வைக்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தி மேற்படி செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன எனது தெரியவருகின்றது. 

தமிழரசுக் கட்சிக்கு வெளியே  13 ஆவது சட்டத்திருத்ததை  நீண்டகாலமாக  ஆதரித்து அதனை நடைமுறைப்படுத்த உழைத்த பல கட்சிகளை  ஒருங்கிணைத்து 19 கட்சிகளிடம் கூட்டாக இணைந்து குரல்கொடுக்குமாறு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இக்கோரிக்கையின் முழுவடிவம் கீழே .....

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான - மாகாண சபை அதிகாரங்களின் தேவையை கோரும் நேர்மையானதும் உறுதியானதுமான குரலின் அவசியம் இன்று உணரப்படுகின்றது.

இலங்கையில் மாகாணசபை முறைமையின் அவசியப்பாடு குறித்த விடயமானது தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பேசுபொருளாக ஆக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் இம் மாகாணசபை எதற்கும் பயனற்றது, இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபக்கம், இம் மாகாண சபைக்குள் எதுவும் இல்லை என்று கூறிக்கொண்டே இதனை அமுலாக்க இந்தியா அழுத்தம் செலுத்த வேண்டும் என்னும் கருத்தை மறு தரப்பினர் முன்வைக்கிறார்கள்.

இதற்குள் எதுவுமே இல்லை என்ற கண்மூடித்தனமான நிராகரிப்பு வாதத்தைப் புறந்தள்ளி, கிடைத்துள்ள சட்டபூர்வமான தீர்வைக் கையேற்று, இலங்கையின் அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபையைப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடுகளினூடாக முன்நோக்கி நகர்த்துகின்ற சாதகமான கண்ணோட்டத்துடன் நோக்கும்படி இலங்கை அரசாங்கத்தையும் எதிர்க் கட்சிகளையும் கோருகின்ற நேர்மையான குரல்களும் அழுத்தங்களுமே இன்றைய தேவையாக உள்ளது.

இலங்கையின் இனக்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வாக இலங்கை அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே வழிமுறையாக தற்போது இம் மாகாணசபைத் தீர்வே எம் கைகளில் உள்ளது.

அத்துடன், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் சட்ட வலுவுள்ள ஆட்சியமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைநாட்டப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான சட்பூர்வ கட்டமைப்பாக அமைந்த ஒரேயொரு நடைமுறையிலுள்ள அரசியல் தீர்வும் இம் மாகாண சபைத் தீர்வு மட்டுமேயாகும்.

இதைவிட வேறு அரசியல் தீர்வுகளைத் தற்போது பேசுவதும், அத்தகைய ஒன்றுக்காக இப்போது கையில் இருக்கின்ற மாகாணசபைத் தீர்வினையும் கைவிடச் சொல்லிக் குரல் எழுப்புவதும், அதற்குள் ஒன்றுமே இல்லை என்று நம்பிக்கையீனத்தை மட்டுமே ஊட்டுவதும், அவ்வதிகாரத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு வகைசெய்வதும், அதனை இல்லாமல் செய்ய உதவுவதும் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக தொடர்ந்தும் அநாதரவான நிலைக்குத் தள்ளி விடுவதாகவே முடியும் என்பது நிதர்சனமானதாகும்.

அரை நூற்றாண்டு கால முரண்பாட்டுக்கும், நான்கு தசாப்த யுத்தத்துக்கும் தீர்வாக சர்வதேச அக்கறையுடனும், அதன் தலையீட்டுடனும் முன்வைக்கப்பட்ட ஒரே தீர்வு இம்மாகாண சபையாகும். ஒரு சர்வதேச நாட்டுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையின் யாப்புக்குள் சட்டமாக ஆக்கப்பட்டு, அதற்கான நிர்வாக ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்ட தீர்வும் இதுவேயாகும். எனவே இதை புறந்தள்ளினால் மீண்டும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள கூடிய அல்லது அவர்களால் வலியுறுத்தக் கூடிய தீர்வுகள் வருவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதையும் கவனித்தல் வேண்டும்.

நடப்பிலுள்ள இந்த மாகாண சபை அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி, சுயாதீனமாக இயங்கிய கிழக்கு மாகாண சபையும் தமிழ்ப் பேசும் மக்களைக் கொண்ட மலையக மாகாண சபைகளும் மிகுந்த அக்கறையுடன் பங்காற்றியதும் நாம் அறிந்ததே. அதன் மூலம் அம் மக்கள், சகலதுக்கும் மத்திய அரசாங்கத்தில் தங்கியிராமல் தமது பல அத்தியாவசிய காரியங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வந்ததையும் நாம் உதாரணமாக எடுத்து நோக்க முடியும்.

அது மட்டுமன்றி சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளும் கூட அந்த அதிகாரங்களை மிகப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அம்மாகாண நலன்களுக்கு எதிராக மத்திய அரசால் நடைமுறைப்படுத்த முயன்ற சில திட்டங்களை கேள்விக்குட்படுத்தியும் தடுத்தும் உள்ளன.

இந்த மாகாணசபை முறைமையை கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு மேலாக, வடக்கு கிழக்கில் அந்த அதிகாரங்களை அமுலாக்குவதற்கு எதிராக தடைக்கற்கள் பலவிதமாக கொட்டப்பட்டபோதிலும், இம்மாகாணசபை முறைமையைப் பாதுகாத்து, வலுவூட்டி மேம்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும், அதற்கான வழி வகைகள் பற்றியும் சிறுபான்மை மக்களாகிய நாம் கரிசனை மிக்க பார்வையைச் செலுத்த வேண்டிய நிலை இன்று எழுந்துள்ளது.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டும், அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அவ்வதிகாரங்களுக்கூடான நலன்கள் முழுமையாக சென்றடையாமல் இருக்க வகை செய்யும் போக்கே தொடர்ந்தும் நிலவி வந்தது. அத்துடன் மாகாண சபையில் உள்ள அதிகாரங்கள், அதன் செயற்பாடுகள் குறித்த விபரங்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவதும், நம்பிக்கையீனங்கள் பரப்பப்படுவதும் அபத்தமானதும் கவலைக்கிடமானதாகும்.

மாகாண சபை முறைமையின் மற்றுமொரு சாதகமான அம்சம் யாதெனில் மாகாண மட்டத்தில் இருந்து அப்பகுதி மக்கள் நலன் சார்ந்து செயல்படக்கூடிய புதிய இளம் அரசியல் தலைவர்களை உருவாக்க அது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குகின்றது. அத்துடன் தேசிய மட்டத்துக்கான சிறந்த தலைவர்களை உருவாக்கும் களமாகவும் அது பயன்படுகிறது.

அத்துடன் அந்த மாகாண நலன் சார்ந்து ஜனநாயக முறையில் நியதிச் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அப்பியாசத்திற்கூடாக, அது அத்தலைவர்களுக்கு அம்மாகாண மக்களின் பங்கேற்றலுடன் அடிமட்டத்தில் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும், இன்னும் புதிய அதிகாரங்களை பெறுவதற்கான முயற்சியை மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கவும் அவர்களுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்க வல்லது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மாகாண சபை முறைமையின் அதிகாரப் பரவலாக்கலை கையேற்று அதனை நேர்மையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்கள் தமது கடந்தகால வேதனை மிகுந்த போராட்டத்தின் பலனாக பெறப்பட்டதும் யாராலும் இலகுவில் அகற்ற முடியாத அதிகாரப் பொறிமுறையாக அவர்கள் கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் சகல சிறுபான்மை மக்களும் பிரிக்கப்படாத நாடொன்றுக்குள் அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலாக்கலுடன் சமத்துவமாக வாழ விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கையை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஏற்படுத்தவும் அது வகை செய்யும்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் ஸ்திரமாகவும், நெறிமுறையாகவும் நடத்தப்பட்டு வலுப்பெறுகையில் அவை நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் கைகோர்த்து, மாகாண நலன்களுக்கு பாதகமான திட்டங்கள் செயற்பாடுகள் வரும்போது அவற்றை கேள்விக்குட்படுத்தவும், தடுக்கவும் பரஸ்பரம் ஒத்தாசையாக இருக்க முடியும். அதன் மூலம் ஒரு கூட்டுத் தேசிய நலனின் அடிப்படையில் நாட்டின் அடிமட்டத்தை நோக்கிய இந்த அதிகாரப் பரவலுக்கான அடிப்படைப் பாதுகாப்புப் பொறிமுறையை வலுவாக்கி செழுமைப்படுத்தி பாதுகாக்க முடியும்.

இந்த அடிப்படையில், இலங்கையில் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் இம்மாகணசபை முறையின் சிறப்பான அம்சங்களை இதய சுத்தியுடன் வரவேற்று இப்பொறிஂமுறை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யப்படவோ அல்லது இல்லாமல் செய்யப்படவோ கூடாது என இலங்கை அரசையும், பிரதான எதிர்க்கட்சியையும், ஏனைய தேசியக் கட்சிகளையும் நோக்கி அழுத்தமான கோரிக்கையை கூட்டாக முன்வைக்க வேண்டும். அத்துடன் இந்த முறைமையை உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்த உடனடியாக தேர்தல்களை நடத்தி அவை சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும்படி இலங்கை அரசையும், பிரதான எதிர்க் கட்சியையும் கோருவதே சாலச் சிறந்ததாகும்.

அந்த வகையில், 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த மாகாணசபை பொறிமுறை மீது நம்பிக்கை கொண்டு அந்தப் பொறிமுறை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என உளமார விரும்பும் புலம்பெயர் இலங்கையர்களாகிய நாம், இலங்கையின் தேசியக் கட்சிகளுடன் இணைந்தும், சுயாதீனமாகவும் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிச் சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்அரசியல் கட்சிகள் கூட்டாக ஒரே குரலில் இந்த கோரிக்கையை இலங்கை அரசையும், பிரதான எதிர்க் கட்சியையும் நோக்கி அழுத்தமாக முன்வைக்க வேண்டும் என அன்புடன் கோரிக்கை விடுகின்றோம்.

நன்றி

கூட்டாக குரல் கொடுக்கும்படி எம்மால் கோரிக்கை விடப்படும் கட்சிகள்.

• ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - திரு. டக்ளஸ் தேவானந்தா
• இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் - திரு. ஜீவன் தொண்டமான்
• தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - திரு. சிவனேசதுரை சந்திரகாந்தன்
• ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - திரு. அங்கஜன் இராமநாதன்
• தேசியத் தொழிலாளர் முன்னணி - திரு. பழனி திகாம்பரம்
• தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி - திரு. வீ. ஆனந்தசங்கரி
• தமிழர் சமூக ஜனநாயக கட்சி - திரு. சிறீதரன் திருநாவுக்கரசு
• ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - திரு. ரவூப் ஹக்கீம்
• ஜனநாயக மக்கள் முன்னணி - திரு. மனோ கணேசன்
• அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - திரு. ரிஷார்ட் பதியுதீன்
• மலையக மக்கள் முன்னணி - திரு. வே. இராதாகிருஷ்ணன்
• தேசிய காங்கிரஸ் - திரு. ஏ.ல்.எம். அதாவுல்லா
• சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு - திரு. முருகேசு சந்திரகுமார்
• தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி - திரு. வினாயகமூர்த்தி முரளிதரன்
• புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி - திரு. சி. கா.செந்திவேல்
• அகில இலங்கைத் தமிழர் மகாசபை – திரு. செங்கதிரோன்
• முற்போக்கு தமிழர் அமைப்பு - திரு. சதாசிவம் வியாழேந்திரன்
• முன்னிலை சோஷலிஸக் கட்சி - திரு. குமார் குணரட்ணம்
• சீறீ ரெலோ மக்கள் அமைப்பு - பரராசசிங்கம் உதயராசா


தொடர்புகளுக்கு:
செல்லையா மனோரஞ்சன் – கனடா --->> selliahy@gmail.com
பத்மபிரபா மகாலிங்கம் – சுவிட்சர்லாந்து --->> prpraba@hotmail.com
தம்பையா சோதிலிங்கம் - இங்கிலாந்து --->> uksothi@gmail.com
நோயல் நடேசன் – அவுஸ்திரேலியா --->> uthayam12@gmail.com
»»  (மேலும்)

2/02/2022

வட மாகாணத்தில் இடம்பெற்ற 'நீதிக்கான அணுகல்' நடமாடும் சேவை


கிராமத்துக்கு கிராமம்,வீட்டுக்கு வீடு நீதிமன்ற அபிமானத்துக்கு வட மாகாண மக்களுக்கான  நீதிக்கான அணுகல் எனும் தலைப்பில் வடமாகாணம் முழுக்க நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது.
 
கிளிநொச்சி,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கடந்த 26ம் திகதி முதல் 31 ம் திகதி வரை நீதியமைச்சின்  ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

 இதில் சட்ட தகராறுகளை தீர்ப்பதற்கான சட்ட ஆலோசனைகள், நிலம் மற்றும் சொத்து தகராறுகள் தொடர்பான தீர்வுகள், மத்தியஸ்த்த செயல்முறை  மற்றும்  தகராறு தீர்க்கும் மாற்று முறைகளை அறிமுகப்படுத்தல், போதைப்பொருள் தடுப்பு,சட்டம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல், காணாமல் போனார் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்தல்,சொத்து சேதங்களிற்கான இழப்பீடு வழங்குதல்,நல்லிணக்கம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுடன் திறந்த உரையாடல்,கிளிநொச்சி புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் மாங்குளம்,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு நீதிமன்ற கட்டிடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தல்,தொழில் பயிற்சி வழிகாட்டுதல்கள்,அடையாள அட்டைகள்,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்த்தல். போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

சட்ட உதவி ஆணைக்குழு,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்,இழப்பீட்டுக்கான அலுவலகம்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் தேசிய அதிகாரசபை, கடன் நிவாரண சபைகள் திணைக்களம்,சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம்,புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் பணியகம், மத்தியஸ்த்த சபைகள் ஆணைக்குழு , சிறைச்சாலைகள் திணைக்களம்,காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்,ஆட்பதிவுத் திணைக்களம்,பதிவாளர் நாயகம் திணைக்களம்,மாகாண காணிகள் திணைக்களம்,பனை அபிவிருத்தி சபை,சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆகிய பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் ஒருமித்து இப்பங்களிப்பினைச் செய்தன.

சிறைச்சாலைகள் திணைக்களம் சார்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், ஆணையாளர்கள், அத்தியட்சகர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் வழிநடத்தலில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் திரு ந.பிரபாகரன் என்பவரால் போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் நிகழ்சி திட்டம் திறம்பட நடத்தி செல்லப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

 ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் 300 தொடக்கம் 500 மாணவர்கள் பங்கு பற்றி தங்கள் வரவேற்பை தெரிவித்திருந்தனர். மற்றும் இது போன்ற நிகழ்வுகளை தங்கள் பாடசாலைகளிலும் நடத்துமாறு இக் கருத்தரங்குகளுக்கு வருகைதந்த ஏனைய அதிபர்கள் கோரியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)