Election 2018

4/23/2019

குண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்

குண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல் அவசியம்-
தோழர் *பஸீர் சேகுதாவூத் 
*******************************"**********
L’image contient peut-être : une personne ou plus et intérieur


அவ்வப்போது குண்டு தயாரிப்பவர்களையும், குண்டுகளோடு குதிப்பவர்களையும்,குண்டுகளை மக்கள் கூடும் இடங்களில் கொண்டு வைப்பவர்களையும் கண்டுபிடித்து களைவதை விடவும்- நீண்டகாலமாக குண்டு தயாரிப்பவர்களைத் தயாரிக்கும் தத்துவார்த்த அரசியல் மதவாத புலனாய்வு சக்திகளைக் கண்டுபிடித்து துடைத்தழிப்பதே அவசியத் தேவையாகும்.
நம்மடாக்கள்ட பேர்தான் "அடிபடுது" என்கின்றனர். அதுசரிதான், ஆனால் "அடிபடப்போவது" இனி பெயர்கள் மட்டுமல்ல..நாமும் நமது மக்களும் நமது பேரர்களும்தான் என்பதை முஸ்லிம்கள் அறிக!
விரிவான ஆய்வு வேறு கதைகளைச் சொல்லக்கூடும்.
எனது மூளையும் இதயமும் சுக்குநூறாகி வெடிக்கும் வேளை வெளியாகும் 'அந்நூர்' எனும் வெளிச்சம் பெரு வெளியில் பரவ தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்படும் தொடர் குண்டு வெடிப்புகளால் கொல்லப்பட்ட எமது மக்களையும் வெளிநாட்டு சோதரர்களையும் அஞ்சலிக்கிறேன்.
இந்த வகை அஞ்சலி ஹறாம் என பத்வா தரும் எவரையும் நான் பொருதத் தயார்.
*நன்றி முகநூல் 
»»  (மேலும்)

4/22/2019

​மீண்டும் குண்டு வெடிப்பு

கொழும்பு - கொச்சிக்கடை, இரட்னம் வீதியில், சற்றுமுன்னர் ​குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்து அதனை செயலிழக்க செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அப்பகுதியில் இருந்து மக்கள் பதறியடித்து ஓடும் காட்சிகளை கார்டியன் செய்தியாளர் மைக்கல் சபி ட்வீட் செய்துள்ளார்.
»»  (மேலும்)

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளார் என ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை
இன்று நள்ளிரவு முதல் இந்த அவசர நிலை அமலுக்கு வரும்.
இந்நிலையில் பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டிடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
»»  (மேலும்)

கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது

"நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்ல எத்தனிக்கும் காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது."
-ஊடகப்பிரிவு-
Résultat de recherche d'images pour "nfgg"
"இன்று காலை தொடர்ச்சியாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத்தனமான, மிலேச்சத்தனமான தாக்குதல்களை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) குறிப்பிட்டுள்ளது.
இன்று (21.4.2019) காலை கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை கண்டித்து NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கிறிஸ்தவ மக்களின் புனிதத்தினமான இன்று இவ்வாறானதொரு துன்பியல் சம்பவம் தேவாலயங்களிலும் முக்கிய சில இடங்களிலும் இடம்பெற்றிருப்பது மிக வேதனையான, கவலைக்குரிய ஒன்றாகும். சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்பும் அனைவரையும் இது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிக திட்டமிடப்பட்ட வகையிலும் பொது மக்களின் உயிர்களை இலக்கு வைத்தும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் மிக இழிவான ஒரு அருவருக்கத்தக்க செயலாகும்.
ஒட்டு மொத்த இலங்கையர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடு கடந்து இந்த நாட்டில் நிலவுகின்ற இனவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் என்பவற்றை முழுமையாக ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதற்கான அவசியமும் அவசரமும் இன்று மீண்டும் உணரப்பட்டிருக்கிறது.
இம்மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளையும் இதன் பின்னணிகளையும் உடனடியாகக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் எவராக இருப்பினும் இவ்வாறான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இனி ஒருபோதும் இந்த நாட்டில் இடம்பெறாத வகையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட வகையில் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இப்பதட்டமான சூழலில் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
இத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயங்களுக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு , இந்நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும், அனைத்து மக்களினதும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்பதோடு, இதற்காக அனைவரும் அர்ப்பணத்துடன் ஒன்று பட்டு உழைப்போம்.”
»»  (மேலும்)

4/21/2019

தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும்  குடும்பங்களின் கண்ணீரில்  இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள் Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலை புலிகள்"

ன்று காலையில் இலங்கையெங்கும்  நடத்தப்பட்ட  தொடர் தாக்குதல்கள் எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு   கொழும்பு நீர்கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு புனித தேவாலயங்களிலும்  விடுதிகளிலும் பலிகொள்ளப்பட்ட அனைத்து ஜீவன்களுக்கும்  சிரம் தாழ்த்திய அஞ்சலிகளை செலுத்துகின்றோம். குறிப்பாக   தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும்  குடும்பங்களின் கண்ணீரில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

மானிட விழுமியங்களையிட்டு சற்றேனும் கவலை கொள்ளாத இத்தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை மட்டுமன்றி நவீன உலகுக்கு  சவால் விடுக்கும் காட்டுமிராண்டித்தனமானவையுமாகும்.

 மேற்படி தாக்குதல்களில் இறந்தும்,காயப்பட்டும் பாவப்பட்ட  நிலையில் இருக்கும் அயலவர்களுக்கு  எம் தேசத்து குடிமக்கள் அனைவரும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் தங்களால் முடிந்த உதவிகளை  செய்யுமாறும் அவர்களின் துயரங்களில் பங்கெடுக்குமாறும்   தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பாக மட்டக்களப்பு தேவாலய தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ்  மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்  தொண்டர்கள்  அனைவரும் தம்மாலான முழு உதவிகளையும்  வழங்க முன்வருமாறு  எமது தலைவர் கெளரவ சந்திரகாந்தன் அவர்கள் விடேச அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நேரத்தில்  எத்தகைய பயங்கரவாத செயல்களாலும்  இன,மத,அரசியல் முரண்பாடுகளை தீர்க்க முடியாது என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முப்பது வருட உள்நாட்டு யுத்த அழிவிலிருந்து மீண்டெழுந்து   கடந்த பத்து வருடமாக அமைதி காற்றை சுவாசித்து வந்த எம் தேசம் மீண்டும் ஒரு யுத்த பூமியாக மாற்றப்பட்டுவிடக்கூடாது.   எனவே இத்தாக்குதல் குறித்து எவ்வித வதந்திகளையோ  சந்தேகங்களையோ பரப்ப வேண்டாம் என்பதோடு,  சகலரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும்,  இன,மத முரண்பாடுகளை தூண்டி விடும் எத்தகைய செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும்  கேட்டுக்கொள்கின்றோம்.


தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

              21/04/20019»»  (மேலும்)

மீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..! “இலங்கை”

இலங்கையில் 6 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
30 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இலங்கைவாழ் அனைத்து மக்களும் இவ்வாறான குண்டுவெடிப்புகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், உடைமை அழிவுகளையும் எதிர்கொண்டு மீண்டெழுந்து வாழந்து வரும் நிலையில், இவ்வாறான பயங்கரவாத நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்தகாலங்களில் இனவாத யுத்தமாக தொடர்ந்து…, முடிவுற்ற நிலையில், தற்போது மதவாத நெருக்கடியாக அவ்வாறான அவலநிலை மீண்டும் தொடரப்போகின்றதா எனும் அச்சமாகவே இன்றைய இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிந்திக்க தூண்டுகிறது.

மூன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் மூன்று ஆடம்பரவிடுதிகளிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம்காரணமாக இலங்கையின் உல்லாசத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது அதில் முன்னேற்றம் நிலவிவரும் சூழலில் முப்பத்தைந்து வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளும் இன்றைய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இக்குண்டுவெடிப்பு சம்பந்தமான எச்சரிக்கை முன்பே புலனாய்வுப்பிரிவற்கு அறியக்கிடைத்தும் அதை இலங்கை புலனாய்வுத்துறை அலட்சியப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. இத்தாக்குதல் குறித்த உரிமைகோரும் தரப்பு இதுவரை தம்மை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் கத்தோலிக்க மதத்திற்கான ஒரு சர்வதேச அடிப்படைவாத சக்திகளின் செயலாக இருக்கலாம் என்பதாகவும் ஊகிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களில் இக்குண்டுவெடிப்பு தாக்குதலினாலும், விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினாலும் கொல்லப்பட்டவர்களுக்கும், காயத்திற்கும் உள்ளான மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை அரசியலும், இலங்கை அரசும் இச்சம்பவத்தையும், தொடர்ந்து இவ்வாறான அசம்பாவிதம் நடக்காதவகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மக்கள் அச்சத்துடனும் பதட்டத்துடனும் எதிர்நோக்கியிருப்பதாகவே கருதமுடிகிறது.

இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி
»»  (மேலும்)

4/20/2019

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்  
Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலை புலிகள்"

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகமானது 1989 ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.

இதையொட்டியகாலத்தில்  நாடு முழுவதும்  இதே போன்ற 25 உப செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலையில் அவையனைத்தும் அதாவது குறித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தவிர்ந்த நாடு தழுவிய ஏனைய 24 உப செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில்  இன்றுவரை  கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் ஆனது  தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஷ்ட்டவசமானதொன்றாகும்.

இந்த பிரதேசம் வாழ் மக்களிடமிருந்து சுமார் முப்பது வருடகாலமாக இந்த உப செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டே வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லீம் என்கின்ற இனவாத அரசியல் போட்டா போட்டிகளில் சிக்குண்டு இச்செயலகமானது தரமுயர்த்தப்படுவது சாத்தியமாககாமலேயே சென்றுகொண்டிருக்கின்றது.

 மிக இலகுவாக செயற்படுத்தக்கூடிய இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகள் இன்று பெரும் சவால் நிறைந்த விடயமாக மாறுவதற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையோரை பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைமைகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும். 

இத்தகைய பொறுப்பற்ற அரசியல் தலைமைகளின் நம்பிக்கை இழந்த அப்பிரதேச மக்களும், பொதுநல அமைப்புகளும்  தற்போது  இப்பிரச்சனையை கையிலெடுக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர். 

இந்த உப செயலகமானது தமிழர்களுக்கானது என்றும் அதனை தரமுயர்த்துகையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால்  அத்தகைய பரப்புரைகளில் கிஞ்சித்தேனும்  உண்மை கிடையாது.அதேவேளை அத்தகைய பரப்புரைகளை முன்வைத்து தமிழ்  அரசியல்வாதிகளில் சிலரும்  முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத  அரசியலாக்க முற்படுவதும்  இன முறுகல்  நிலைமைகள் தொடருவதும்  ஆரோக்கியமானதல்ல. கல்முனை வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த  இந்த கோரிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும்  சிலர் சுய இலாபம் தேடுகின்ற முனைப்பில்  ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடியவர்கள் என்பதோடு இன்று ஒரு பொறுப்புமிக்க அரசியல் சக்தியாக ஜனநாயக பாதையில் பயணிப்பவர்கள் என்கின்ற வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் சார்ந்து  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் கீழ்வரும் அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தரமுயர்த்தப்படுவது  அப்பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் 36346 மக்களினதும்  நிராகரிக்கப்படமுடியாத கோரிக்கையாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக  வலியுறுத்துகின்றோம்.

*இந்த செயலகம் தரமுயர்த்தப்படுவதால் கல்முனை தெற்கில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்கின்ற பிரச்சாரங்கள் பொய்யானவையென்றும் அவற்றினை நம்பி ஏமாற வேண்டாமென்றும் முஸ்லீம் மக்களை கோருகின்றோம். 

*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் என்பதை முன்வைத்து இனவாத பிரச்சாரங்களையோ இன முறுகல் நிலைமைகளை  ஏற்படுத்தும் பரப்புரைகளையோ செய்ய வேண்டாம் என்று தமிழ்- முஸ்லீம் மக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை வலியுறுத்தி    பொது மக்களாலும் கல்முனை இளைஞர் மன்றத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துவித வழிமுறைகளிலான போராட்டங்களுக்கும்  நாம் முழு ஆதரவு  வழங்குகின்றோம்.

*அத்தகைய போராட்டங்களில் பங்கெடுக்கும் அனைவரையும் சாத்வீக வழியில் போராடுமாறும் சட்டத்தையும் சகோதரத்துவத்தையும் மதித்து செயற்படுமாறும்  வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம். 

செயலாளர் பூ.பிரசாந்தன்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் »»  (மேலும்)

பிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா


Résultat de recherche d'images pour "பிரமிள்"


உலகப் பெருங்கவியாக அறியப்பட்ட பிரமிள் என்கின்ற தர்மு சிவராமுக்கு இன்று 80 வது பிறந்த தினம்.(20-04-1939 - 20-04-2019)


அவரது அமுத விழாவை சிறப்பிக்கும் முகமாக நாளை 21-04-2019 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு திருகோணமலை சன்சைண் ஹோட்டலில் " பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப் பேருரையும்" நடை பெறவுள்ளது. இலங்கையரான பிரேமிள் இந்தியாசென்று வாழ்ந்து அங்கு எழுத்துலகின் கொடுமுடியாக அறியப்பட்டவராகும்.


 
அனைவரும் வருக
»»  (மேலும்)

4/19/2019

பெண்கள் சந்திப்பு-34

34 வது பெண்கள் சந்திப்பு

வன்முறைகளற்ற வெளிகளை உருவாக்குதல்
என்கின்ற தொனிப்பொருளில் இம்முறை பெண்கள் சந்திப்பு நிகழ்வானது நெதர்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ளது.

20.04.2019 சனியன்று முழு நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
L’image contient peut-être : texte


     
    பெண்கள் சந்திப்பு என்பது பெண்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான தனித்த ஒரு வெளியின் அவசியத்தை உணர்ந்த புகலிடப் பெண்களின் முயற்சியில் 1990 இல் ஜேர்மனியின் கேர்ண் நகரில் உருவாக்கம் பெற்ற பெண்களின் ஒரு சந்திப்பு நிகழ்வாகும். இச்சந்திப்பானது ஆரம்பகாலங்களில் ஜெர்மனியில் மட்டுமே நடைபெற்று வந்தது. காலப்போக்கில் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளுக்கும், கனடாவிற்கும் என சற்று விரிவடைந்தது. சுமார் 25 வருடங்களாக தொடர்ந்து வரும் இப் பெண்கள் சந்திப்பானது 2019வரை 33 சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளது.
»»  (மேலும்)

4/17/2019

கல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை

சேனாதிராஜா சென்ற வாரம் (11) கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும்நோக்கில் மட்டக்களப்புக்கும், அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தேர்தல் தொகுதிகளுக்கும் சென்றிருந்தார்.
 Image associée

அண்மைக் காலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கருத்து வலுப்பெற்றுள்ள நிலையில், கல்முனை பகுதிக்குள் எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை பொது அமைப்புக்களும் இளைஞர் அமைப்புக்களும் எடுத்திருந்தன.
இதன்காரணமாகவே அம்பாரை மாவட்ட கட்சித் தொண்டர்கள் சிலரின் ஆலோசனைக்கேற்ப மாவை கல்முனை செல்வதை தவிர்த்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 
அம்பாறை மாவட்டத்தில்  ஒரு அமைப்பாளரை இதுவரை தமிழரசு கட்சி நியமிக்காத  நிலையில் அதன் ஆயுட் கால அமைப்பாளராக மாவையே செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


»»  (மேலும்)

4/14/2019

கிடுகு - "தணிக்கைகளற்ற உரையாடல்"

கிடுகு - "தணிக்கைகளற்ற உரையாடல்" அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இமாம் அத்னான் எழுதிய "மந்திரிக்கப்பட்ட சொற்கள்" நூல் அறிமுகமும் இடையீடும் - (14.04.2019 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணியளவில், மருதமுனை அல்மதீனா வித்தியாலய  மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மலையகத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்ட காற்புள்ளி இதழாசிரியரும் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்ட தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Aucune description de photo disponible.
»»  (மேலும்)

4/11/2019

எமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பிரச்னைக்கு ஒரே வாரத்தில் தீர்வு கிடைத்திருக்கும் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி கூறமுடியும்-பிள்ளையான்

வெருகல் படுகொலையின்  15 ஆவது நினைவையொட்டி வெருகல் மலை பூங்காவில் இடம் பெற்ற நிகழ்வில்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  தலைவர் சிவ .சந்திரகாந்தன்   அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு  செயலாளர் பூ .பிரசாந்தன்  அவர்களால்  வாசிக்கப்படட  உரை.Résultat de recherche d'images pour "பிள்ளையான்"
எனதருமை வீரத் தாய்மார்களே, தந்தையர்களே,  சகோதர சகோதரிகளே!
எமது கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்களே,மத்தியகுழு உறுப்பினர்களே, போராளிகளே, பொதுமக்களே,மற்றும்  ஊடகவியலாளர்களே!
உங்களனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
இன்றையநாள் எமது மண்ணின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாகும். உங்களதும் எங்களதும் உறவுகளான அந்த பலநூறு வீர மறவர்களை ஒரு படுகொலையில்  நாம் இழந்து நின்ற நாள் இது.
இந்த மண்ணிலே இதே போன்றதொரு கொடும் வெயில் காலத்திலே இந்த   மலையடிவாரத்திலே  அதோ அந்த வெருகலாற்றங்கரையிலே, அதற்கப்பாலே தெரியும் கதிரவெளி கடலோரத்திலே  அவர்களது உடலங்கள் வெம்பி வெடித்து காய்ந்து கருகி கிடந்த நாள்.
அந்த நாளையும் அந்த நாளில் பலியாகிய அந்த வீர மறவர்களின் தியாகத்தையும் நினைவுகூருவதற்காக நீங்கள் அனைவரும் இங்கே கூடியுள்ளீர்கள்.
2004ஆம் ஆண்டு இதே சித்திரை மாதத்து பத்தாம் நாளில்  தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் மறைந்திருக்கும் மேலாதிக்க சக்திகளின் நலன்களை அம்பலப்படுத்தியதற்காக எப்படி இந்த வெருகலாற்றங்கரையிலே வன்னியிலிருந்துவந்த கொலை வெறி தாண்டவமாடியது என்பதை இரத்தமும் சதையுமாக  அனுபவித்தவர்கள் நீங்கள். அந்த படுகொலையில் மயிரிழையில் உயிர் தப்பியவன் நான்.  அதே கொலை வெறி கொண்ட கயவர்களின்    சதியினால்த்தான்  நான்   இன்று பழிவாங்கப்பட்டிருக்கின்றேன். அதனால் கடந்த ஆண்டைப்  போலவே  நான் இம்முறையும்  உங்களனைவரையும் சந்திக்கும் வாய்ப்பின்றி சிறைப்பட்டே கிடக்கின்றேன்.
அன்று கிழக்கு போராளிகளை நூற்றுக்கணக்கில் கொன்று விட்டால் மட்டக்களப்பான்  கேள்வியெழுப்ப மாட்டான் என்று  எண்ணியவர்களைப்போலவே இன்று  இந்த பிள்ளையானை  சிறைப்பிடித்து வைத்துவிட்டால் இந்த மட்டக்களப்பு  தமிழகத்தவர்கள்  மதியிழந்து, மானமிழந்து, சிந்தனை கெட்டு  சீரழிந்து போவார்கள் என்று சிலர்  கனவு கண்டார்கள். ஆனால் அவர்களது கொடுங்கனவு பலிக்கவில்லை.
அதனால்தான் யாழ்-ஆதிக்கத்தின் வெறியாட்டத்தினால் நடந்தேறிய வெருகல் படுகொலை நாளை நினைவு கூருவதற்காக இந்த மலைப்பூங்காவிலே நீங்களனைவரும்  வருடா  வருடம் போல இன்றும் கூடியுள்ளீர்கள்.  பிள்ளையானை நான்காண்டுகள் அல்ல நாநூறு ஆண்டுகள் சிறைவைத்தாலும் அவனது குரல் இந்த மண் உள்ளளவும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதற்கு இன்றைய நாளே சாட்சியாகும்.
கிழக்கிலிருந்து ஒரு தலைமை  உருவாகி விடக்கூடாது என்பதில் காலாகாலமாக யாழ்-மேலாதிக்கத்தின் பிரதிநிதிகள் எவ்வளவு உறுதியாக  கருமமாற்றுகின்றார்கள் என்பதற்கு என் மீதான பழிவாங்கலே போதுமான உதாரணமாகும்.
இது பெருந்தலைவர்களான
நல்லையா, இராஜதுரை  போன்றவர்களை ஒதுக்கியத்தைப்போல தொடர்ந்து வரும் மேலாதிக்க வரலாறாகும்.
எல்லாவித சட்டங்களுக்கும் முரணாக பிணையுமின்றி, விசாரணையுமின்றி ஒரு கைதியாக என்னை முடக்கி விட்டால் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை ஒழித்து விடலாம் என்று எண்ணினார்கள். ஆனால்   எமது  மக்கள் அன்றுபோலன்றி இன்று அதனை நன்கே உணர்ந்து வருகின்றனர். அதனாற்தான் கடந்த ஆண்டு உள்ளுராட்சி தேர்தலிலே  நீங்கள் வழங்கிய வாக்குகள்  தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய எங்களுக்கு  தனிப்பெரும் கட்சி என்னும் அந்தஸ்தை தந்தது. அந்த வெற்றி என்னை ஒதுக்கிவிட முனைந்தவர்களுக்கு முகத்திலே கரி பூசிய நிகழ்வாகும் என்பதை நன்றியுடன் இங்கு நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன்.
துமட்டும்மன்றி மட்டக்களப்பு மாவட்டத்தின்  தமிழரசு கட்சி சார்பிலான    கையாலாகாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை கடந்த மாதம் படுவான்கரை  மக்கள் கேள்வி கேட்டு துரத்தியடித்திருக்கின்றனர். மக்கள் பாடிய வசையில் திசைகெட்டு திக்குத்  தெரியாது வழிதவறி ஓடித்தப்பியிருக்கின்றனர் அந்த எம்பிக்கள் இருவரும். இத்தகைய நிகழ்வுகள் எல்லாம்   தமிழரசு கட்சியினரின் பித்தலாட்டங்கள் இனியும் இந்த மண்ணிலே வேகாது என்பதை உறுதிப்படுத்தி கொண்டே  வருகின்றன.

 இது போன்ற வெட்கக்  கேடுகளை தாங்க முடியாமல்தான்   தமிழரசு கட்சி  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்   அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற சகதிக்குள் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினார். அவர்  மக்களின் மனதுணர்ந்து அவர்களின் தேவையறிந்து காலாவதியாகிப்போன வீட்டுக்குள் இருந்து  தப்பித்து வெளியேறியுள்ளார் என்றே நான் கருதுகின்றேன். 

தமிழ் தேசிய கூட்டடமைப்பினை தலைமையேற்று நடத்துகின்ற தமிழரசு கட்சியின் எழுபது வருடகால அரசியலால் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிரயோசனங்களும் கிட்டவில்லை. 
மாறாக உங்களைப்போன்ற  எத்தனையோ  ஆயிரம் ஏழைத்  தாய்மார்களின் பிள்ளைகள் சிந்திய  இரத்தத்தினால்தான்   எமக்கு ஏதோ கிடைத்திருக்கின்றது. அதுதான் இந்த  மாகாண சபைகள் ஆகும்.. 
அதேபோல எமது கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதற்காக நாங்கள்  கொடுத்தவிலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கேட்க நேர்ந்த  துரோகப்பட்டங்கள் எண்ணற்றவை,  எதிர்கொண்ட  அவமானங்கள் சொல்லிமாளாதவை. 

ஆனால் 
எனது ஆட்சிக்கு பின்னரான கிழக்கு மாகாண சபையை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சீரழித்தனர். அதே போலவே வடமாகாண சபையூடாக மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தலைமைப் போட்டிகளாலும் போலி கெளரவங்களின் இழுபறிகளாலும் போட்டுடைத்தனர். 

  அதுமட்டுமன்றி இப்போது  இந்த  மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் காலவரையறையின்றி இழுத்தடிக்கப்படுகின்றன என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவரவிரும்புகின்றேன். தேர்தலுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்ற ஒவ்வொரு பொழுதிலும்   மக்களது இறைமைகள் மறுக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும். இத்தகைய மறுப்புக்கள்   ஜனநாயக மரபுகளின் வேர்களையே  அலட்சியம் செய்கின்ற போக்காகும். 

துமட்டுமன்றி மாகாண சபைகள் என்பவை   மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இல்லாது  நீண்ட  காலத்துக்கு  ஆளுநரின் அதிகாரத்தினால் இயங்கும் போது   ஆளுநரின்  எதேற்சையதிகார போக்குகளுக்கும் மாகாண சபைகளில் அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தும் கைங்கரியங்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.  குறிப்பாக பல்லின-சிறுபான்மையினர்   வாழும் கிழக்கில் இந்நிலைமை மென்மேலும் சிக்கல்களை தோற்றுவிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

 அது மட்டுமன்றி மாகாண சபைகளை எவ்வித அதிகாரமுமற்ற வெற்று கூடாரங்களாக  மாற்றுகின்ற நிலைமைக்கு அது இட்டுச்செல்லும்.  இது பற்றியெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் நாளும் பொழுதும் கொஞ்சிக்  குலாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எவ்வித கவலையுமில்லை. அவர்கள் கொண்டுள்ள கவலையெல்லாம்  ஐக்கிய தேசிய கட்சியின் மேற்கத்தேய தரகு முதலாளித்துவ     ஆட்சியை   எப்படி காப்பாற்றுவது என்பது மட்டுமேயாகும்.  


கடந்த நான்காண்டுகளாக ஐக்கிய தேசிய – தமிழரசு கட்சிகளின் கூட்டரசாங்கம்   எமது தேசம்  ஒரு போதும் கண்டிராத கேவலமான ஆட்சியையே நடத்தி வருகின்றது. யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள்  தாண்டிய நிலையிலும் எஞ்சியிருக்கும்  தமிழ் கைதிகளை ஏன் இன்னும் விடுதலை செய்ய முடியவில்லை?  கேவலம்   இவர்களால்   கல்முனையில் ஒரு பிரதேச செயலக பிரச்னையை கூட தீர்க்க முடியாமல் இருப்பது வெட்கக்கேடானது. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  போன்று எமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பிரச்னைக்கு ஒரே வாரத்தில் தீர்வு கிடைத்திருக்கும்  என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி கூறமுடியும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க தமிழரசு கட்சியினரின் இத்தகைய அரசியல் தோல்விகளை பயன்படுத்தி கொண்டு அந்த இடைவெளியில் மக்களை ஏமாற்ற இன்னுமொரு கூட்டம் களமிறங்கத்  தொடங்கியுள்ளது.  விராலில்லாத குளத்திலே குறட்டை அதிகாரியாம் என்பதுபோல் யாழ்ப்பாணத்திலிருந்து புதிய புதிய எஜமானர்கள் மட்டக்களப்பிலே கால்பதிக்க தொடங்குகின்றனர். தடியெடுத்தவனெல்லாம்  தண்டல்காரன் அல்ல என்பதை எமது மக்களாகிய நீங்கள் ன்கே உணர்ந்தவர்கள்.   வெள்ளை வேட்டி வேஷமிட்டுக்கொண்டு இங்கே ஆன்மீக அரசியல் செய்ய சிலர் விழைகின்றனர்.  அவர்களிடம் நீங்கள் ஒருபோதும் ஏமாந்துவிடக் கூடாது என்பதை கூறிவைப்பது என் கடமையென உணர்கின்றேன். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் மீண்டுமொரு புதிய எஜமானர்களை வடக்கிலே தேடுவதற்கு நாம் முயன்றோமானால் அது அடிமைப்புத்தியை தவிர வேறொன்றுமில்லை. கூடவே அது எண்ணைக்குள்ளிருந்து நெருப்புக்குள் பாய்கின்ற முட்டாள்த்தனமாகவே இருக்கும்.
 வட- மாகாண சபையை  ஊழல்களின் உறைவிடமாக்கியவர்கள், அந்த சட்டவாக்க சபையை சண்டித்தன சபையாக மாற்றி கேலிக்கூத்தாக்கியவர்கள் இப்போது இங்கே வந்து கிழக்கு மக்களுக்கு சேவையாற்ற போகின்றார்களாம் என கதையளக்கின்றனர்.

எனதருமை மக்களே  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலே கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் கிழக்கிலே வந்து வானமேறி வைகுந்தம் போகப்போவதாக கதையளப்பது நகைப்பிற்குரியது. இது உலக மகா நகைச்சுவையாகும். 


எமது மக்கள் வெள்ளாடுகளாக இருக்கும் வரை   இந்த தாடிவைத்த நரிகள் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இங்கே வரத்தான் செய்யும். ஆனால் நாம் வெள்ளாடுகள் இல்லை புலிகள் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். ஆம், நாம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்பதை அவர்கள் புரிய சில காலம் செல்லலாம்.  யுத்தமுனைகளில்  யாதுமாகி நின்றவர்கள் நாங்களே . இந்த கிழக்கு மண்ணின் மைந்தர்கள் ஆகிய நாங்கள்      கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும், லண்டனிலும்   படித்து பட்டமும் பதவியும் பெற்று    சொகுசாக   வாழ்ந்து விட்டு பென்ஷன் கால அரசியல் செய்ய வந்தவர்கள்  இல்லை  என்பதையும் நீங்கள் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும்.  

ஆம்  எனதினிய வீரத்தாய்மார்களே! தந்தையர்களே!

தமிழ் தேசியத்தை தமது பிழைப்புவாதத்துக்குரிய கருவியாக்கி  எமது மக்களை ஏமாற்றி பிழைக்கும்    இந்த கயவர் கூட்டத்தின் அரசியல் சூட்சிகள் உங்களனைவரினதும் பேராதரவுடன் எம்மால் முறியடிக்கப்படும் என்று அறுதியிட்டு கூறுகின்றேன்.  இந்த மண்ணின் மைந்தர்களாகிய  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இழந்து போன  கிழக்கை மீண்டும் மீட்டெடுப்பார்கள்.  அதுவே இந்த  வெருகல் படுகொலையில் உயிர் நீத்த எனது சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் தகுந்த கைமாறாக இருக்கும்  என்று பறைசாற்றிக்கொண்டு எனதுரையை முடிக்கின்றேன்.

அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.

சிவ.சந்திரகாந்தன் 
தலைவர்- தமிழ் மக்கள் விடுதலை புலிகள். 
சிறைச்சாலை- மட்டக்களப்பு 
10/04/2019
»»  (மேலும்)