6/17/2021

கடலில் பஸ்களை போடுவது ரகசியம் என்ன?


“கடலில் காவியம் படைப்போம் என்று கூறி எமது மக்களுக்கு காடாத்து செய்தவர்கள்தான் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் புதிய திட்டத்தை விமர்சிக்கின்றனர்" அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலடி:

“கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையான முறையில் உருவாக்கும் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேருந்துகள் கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங்களாக இந்தப் பொறிமுறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைவிட, இந்தியாவின் தமிழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த 2017 ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கர் உடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

Source: https://thesamnet.co.uk/?p=74326

கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பேருந்துகளை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் ” என்று தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/16/2021

மட்டக்களப்பில் சதோச,ஒலுசல விற்பனைக் கூடங்கள்


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கெளரவ பந்துல குணவர்த்தன அவர்கள் இன்று மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக நெல் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாகவும் மட்டக்களப்பில் ச.தொ.ச 'மெகா' சுப்பர்மார்க்கற் அமைப்பது தொடர்பாகவும் ஒரே கூரையின் கீழ் பனை அபிவிருத்தி சபை, ஒசு சல ,பால்சபை,மக்கள் வங்கி கிளை,மற்றும் பல அரச தனியார் நிறுவனங்களின் விற்பனை கூடங்களையும் திறப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தவைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கருணாகரன் அவர்களும்.மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சினி. ஸ்ரீகாந்த் அவர்களும். மற்றும் பல அரசாங்க உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 
»»  (மேலும்)

6/14/2021

பயனற்றுப் போகும் அதிகார முயற்சிகள்


 கொரோனா கோலோச்சும்  இன்றைய கால கட்டம், வாழ்வா சாவா என்றுதான் இருந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தாலும் கொரோனாவின் ஆதிக்கம் வலுத்தே வருகிறது. கொரோனாவை அரசாங்கம், அரசியலுக்காகவும் அதிகாரத்துக்காகவும் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் காணப்படுகிறது.  அதற்கு மாவட்டம், மாகாணம், தேசியம் போன்ற மட்ட வேறுபாடுகளும் இல்லை.  இருந்தாலும், அதற்குள்ளும் அரசியல் செய்யத்தான் வேண்டும் என்ற நிலையில், பொருளாதார அரசியல்,  சமூக அரசியல், இன அரசியல் சார்ந்து நாடு நகர்கிறது.

மட்டக்களப்பு மாவட்டமானது, கிழக்கின் முக்கிய  அரசியல் அதிகாரங்கள், பலம்மிக்கதாக நகர்கின்ற பிரதேசமாகும். இந்த நிலையில்தான் மாவட்டத்தின் ஓட்டமாவடியை மையப்படுத்திய  பதிவாளர் செயற்பாடு, கோரளைப்பற்றுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அது ஒரு விழாவுக்கு நிகராக, கடந்த 31ஆம்திகதி மகிழ்ச்சி கொண்டாடவும் பட்டது.  அதற்குள் அது ஓர் அரசியல் கபளீகரம் என்று சொல்லுமளவுக்கான வேலைத்திட்டம் நடைபெற்று, ஒரு வாரத்துக்குள் இல்லாமலும் செய்யப்பட்டிருக்கிறது.

இதில்,  தமிழர்கள் பிரயோகித்த அஸ்திரம் பயனற்றுப் போயிருக்கிறது. எடுத்த முயற்சி பயனற்றுப் போனதைக் குறித்துக் கவலை கொள்ளாமல், இனி எடுக்கும் நடவடிக்கைகள், முயற்சிகள், சிந்தித்து நகர்த்தப்பட வேண்டும் என்று பாடம் கற்றுக் கொண்டதாகவே கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக கொள்ளப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவு முடிவாக இருக்கச் செய்யப்பட வேண்டும். இல்லையானால் தேசிய மட்டத்தில் இருக்கும் அதிகாரத்துக்கு அது இழுக்கே.

நாட்டில் நடைபெற்றுவரும் எந்தவொரு விடயமும், இன ஆதிக்க அரசியலாகப் பெயர் சூட்டப்படுவதற்கு அந்நடவடிக்கையின் தன்மை, அதன் ஆதிக்கம், ஆளுகை மற்றும் பல விடயங்களும் காரணமான இருப்பதாகவே கொள்ள வேண்டும். இந்தப் பதிவாளர் பிரிவு மாற்றப்பட்டதற்கும் அவ்வாறான காரணம் இருப்பதாக குற்றமும் சாட்டப்படுகிறது.

இவ் விடயத்துக்கு இறுதி நேரத்தில்,  முன்னாள் கிழக்கு மாகாணத்தின் இரண்டு முதலமைச்சர்கள் சம்பந்தப்பட்டனர். ஒருவர் கிழக்கின் முதல் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன். 

மற்றையவர் நசீர் அஹமட். தற்போதைய நாடாளுமன்றத்தில் இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுப்பினர்கள். அதற்கும் மேலாக இருவரும் ஆளும் தரப்புடன் நெருக்கமானவர்கள்.

இப்போது, இந்தப்பதிவாளர் பிரிவின் மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் சிவநேசதுரை சந்திரகாந்தன். அது நிறுத்தப்பட்டதற்கு, நசீர் அஹமட் காரணம். இதனை முஸ்லிம், தமிழ் அரசியல் ஆதிக்கமாகக் கொண்டாலும், இது கடந்த சில வருடங்களிலிருந்து தொடங்கப்பட்டதொரு விடயமல்ல  என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

1973 - 1974களிலிருந்து ஆரம்பமான இந்த பதிவாளர் விடயம், கடந்த காலங்களில் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படாமை காரணமாக தூண்டப்படவில்லை.

 ஆனால், கடந்த 2012 காலப்பகுதியில் இப் பதிவாளர் விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் கையிலெடுக்கப்பட்டு நகர்த்தப்பட்டு வந்துள்ளது; இதனை அவர் உறுதிப்படுத்துகிறார். 

அப்போதிலிருந்து, திரைமறைவில் மாவட்டத்திலிருந்த ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளால் காதும் காதும் வைத்தது போன்று, சமாளிக்கப்பட்டே வந்திருக்கிறது. 

இந்த அரசாங்க காலத்தில் இவ்விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனால் கையிலெடுக்கப்பட்டு, நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த இப்பிரச்சினை, நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்வதனைவிடவும், மூடிக்கிடந்த பிரச்சினை வெளியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

இந் நடவடிக்கை சரிவராமல் போனதற்கு, அதன் ஆரம்பகாலங்களிலிருந்தான வரலாறுகளும் நடைமுறைகளும் காரணமாகும். ஆனாலும், இனிவரப்போகும் சிக்கல்கள்தான் மிகச்சிரமமானவையாக இருக்கப்போகின்றன. 

அதில் முக்கியமானது, கோரளைப்பற்றிலுள்ள மூன்று பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, 1990களில் உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, 2003 களில் 08 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவையே அவை.

தமிழ் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் முஸ்லிம்களுடைய  உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்ற கோணத்தில் பார்க்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபை, கல்வி வலயங்கள், வைத்தியசாலைகள் என கிழக்கில் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. 

இவ்வாறான நிலையிலேயே எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியதாக, பதிவாளர்  விவகாரம் இருக்கிறது. இது முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சந்திரகாந்தனுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் இரண்டு பக்கங்களுக்கும் சாதக பாதகங்களையே, கடந்த காலங்களில் கொடுத்திருக்கின்றன. 

அதில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்கிற போட்டி, கடந்த அரசாங்கங்களில் எப்படியோ இப்போதைய அரசாங்கத்திலும் அப்படியே இருக்கிறது.   

தற்போதைய அரசாங்கத்திலும் சரி, கடந்த காலங்களிலும் சரி தம்மை கிழக்கிலுள்ள தமிழர்கள் அடக்க முனைகிறார்கள் என்பதான முஸ்லிம்களின் பார்வை ஒன்றிருக்கிறது. ஆனாலும் தமிழர்களின் பெரும்பாலானவர்களில் முஸ்லிம்களும் தங்களுடன் இணைந்தே வருவார்கள், செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையே இருக்கிறது. 

இந்த எண்ணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் இருந்தாலும் கூட, இந்த எதிர்பார்ப்பை முன்நகர்த்துவதற்கு அரசியல் தரப்புகளும் சரி, சமூக மட்டத்தினரும் சரி   முயற்சிகளை மேற்கொண்டதாக இல்லை. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இப்போதும் நப்பாசையுடன்தான் இருக்கிறது என்பதற்கு, கடந்த மாகாண சபையின் முதலமைச்சை, முஸ்லிம்களுக்கு வழங்கியதை உதாரணமாகக் காட்டுகிறார்கள்.

இது பிழை என்றும் சரியென்றும் வாதாடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம்களுடன் இசைந்து பேசி, அதனைத் தரமுயர்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் அக்கட்சிக்கு இருக்கிறது. 

ஆனால், அது நடைபெறக்கூடியதல்ல என்கிற முடிவுடன் ஆளும் தரப்பையும், ஆளும் தரப்பு ஆதரவு அணியையும் கல்முனை மக்கள் நாடிக் கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்ற உறப்பினர்  ஹாபிஸ் நசீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச பதிவாளர் விவகாரம் குறித்து வெளியிட்ட கருத்தில், “ஆயுத அடக்குமுறைக்கு அடி பணியாத இனத்தை, அதிகார ஒடுக்குமுறைகளால் அடிமைப்படுத்த முயற்சி” என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அவருடைய கருத்துகளின் படி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்புகளுக்கான பதிவுச்சான்றிதழ்கள், கடந்த 48 வருடங்களாக, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தாலே வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதாகும். 

ஆனால், ஓட்டமாவடி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. 1990களிலாகும். எல்லோரும் சொல்வதுபோல், 48 வருடங்களாக இருந்த நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதல்ல. 

அவ்வாறானால் கோரளைப்பற்று மேற்கு எனப்படும் ஓட்டமாவடி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இந்தப்பதிவாளர் மாற்றம், நடைபெறாமல் இருந்தது தவறு என்பதை, இதில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியதாகும். 

இன விடுதலைப் போராட்டப் பயங்கரம், இன்னல்கள், காட்டிக் கொடுப்புகள், காணாமல்போதல்கள், நெருக்குதல்கள், நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருந்த தமிழர்கள், இவ்வாறான விடயங்களை கணக்கில் கொள்ளவில்லை.

தங்களுடைய பொருளாதாரத்தை, சமூக மேம்பாட்டு விடயங்களை அடைந்து கொள்வதற்கான காலம் என்ற வகையில், இப்போது சில நகர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமே என்ற வகையில்தான்,  பதிவாளர் விவகாரம் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இது தொடக்கமாகவே இருக்கவேண்டும்; இருக்கும்.

இந்த ஒழுங்கில், கோரளைப்பற்றிலிருந்து வேறு வேறு வருடங்களில் பிரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இரண்டு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான எல்லைகள் பிரிக்கப்பட்டு, பொதுச் சொத்துகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியமை நேர்மையான நியாயத்தின் படி நடைபெற வேண்டும்.

அது நடைபெறும் போது,  “மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள், ஏற்கெனவே, காணி மற்றும் வாழிடங்களுக்கான நிர்வாக எல்லைகளில், சிலரின் அதிகாரத் தொல்லைகளுக்கு உட்பட்டு உள்ளனர். இன்னும் அவ்வாறான அதிகாரப் பயங்கரவாதமே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 

அதிகாரப்பகிர்வை கோருகின்ற ஓர் இனம், தம்முடன் பிணைந்து வாழும் மற்றொரு இனத்தைத தொடர்ச்சியாக நசுக்குவதும் வஞ்சிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. ஆயுதக்கலாசாரத்தால் ஓரினத்தை மண்டியிட வைப்பதில், தோற்றுப்போன அரசியல்வாதிகள், தற்போது அதிகார பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்கமுடியுமென நப்பாசை கொண்டுள்ளனர்.  

குறித்த  இனத்தின் மீது, பாரபட்சங்களைச் செலுத்தும் இந்தக் கருவறுத்தல்கள் தொடர்வதற்கு நான், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கருத்துகள் வௌிப்பட்டுள்ளன. இக்கருத்துகள் பொப்பிக்கப்படும்.பொய்ப்பிக்கப்படவும் வேண்டும்.


"நன்றி தமிழ் மிரர்

இல.அதிரன்

athirantm@gmail.com»»  (மேலும்)

சீனா vs G7


சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது," என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் அந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள முடிவுக்கு, லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதே போன்ற ஒரு திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாகவே ஜி7 அமைப்பின் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேற்குலக நாடுகள் செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

»»  (மேலும்)

6/11/2021

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்


இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக சடுதியாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் 100ற்கும் அதிகமான கோவிட் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை ஒரே நாளில் 101 உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகக் கூறுகிறது.

இறுதியாக 53 ஆண்களும், 48 பெண்களும் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


»»  (மேலும்)

பயணத்தடை 21 வரை தொடரும்


பயணத்தடை 21 ம் திகதிவரை நீடிப்பு
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் பயணத் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொலிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வாரத் சந்தை, கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/07/2021

மட்டக்களப்பு சிறையதிகாரி மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலை சிரேஸ்ட சார்ஜன் தரத்திலான அதிகாரி இராஜசேகரம் இன்று காலை காலமாகியுள்ளார்.
கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

»»  (மேலும்)

6/04/2021

இலங்கைக்கு பயணத்தடை

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் - டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

பிறப்பு பதிவு இடமாற்ற எதிரொலி வாழைச்சேனை பிரதேச சபையிலும்நேற்று வியாழன் அன்று கூடிய வாழைச்சேனை பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்களும் தேற்கடிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி வந்த 03 முஸ்லிம் உறுப்பினர்கள் சபை அமர்வுகளை பகிஸ்கரித்தன் காரணமாக குறித்த தீர்மானங்கள் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளன.

 இப் பிரச்சனைகளுக்கு பின்னணியாக ஒட்டமாவடி வாழைச்சேனை பிரதேச செயலக பணிகள் சார்ந்து நடைபெறும் பிறப்பு பதிவு நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே காரணமாக சொல்லப்படுகின்றது.


 அதாவது இதுவரை காலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிறப்பு பதிவுகள் ஒட்டமாவடி பிரதேச செயலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில் அண்மையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் காரணமாக வாழைச்சேனையில் பிறந்த குழந்தைகளை அவ் வைத்தியசாலை அமைந்துள்ள வாழைச்சேனை பிரதேச செயலகத்திலேயே பதிவு செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை ஓர் இனவாத செயற்பாடாக  முஸ்லிம் அரசியல்வாதிகள் சித்தரிக்க முனைகின்றனர். 
இதன் தொடர்ச்சியாகவே வாழைச்சேனை பிரதேச சபையும் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
»»  (மேலும்)

5/31/2021

இன்றைய கொரோனா நிலவரம்

மட்டக்களப்பில் இன்று பதிவான கொரோனா பாதிப்புக்கள்

Batticaloa 23
Kaluvanchikudy 19
Valaichenai 08
Kathankudy 02
Kpc 08
Oddamavadi 08
Chengalady 14
Eravur 25
Vellavely  17
Arayampathy 10
Kiran 10
Tri forces 01

*Total 145*.   
»»  (மேலும்)

வாழைச்சேனை கொரோனா சிகிச்சை பிரிவு திறப்பு(ரொசேன்)
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன்.  தவிசாளர் சோபா ஜெயரஞ்ஜித் , அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரி, இராணுவ தளபதிகள் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Battu tv
»»  (மேலும்)

பத்தேகம சமித தேரர் காலமானார்

இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமானார்.

மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வந்த இவராவார்.
»»  (மேலும்)

5/29/2021

கிராம சேவகர் பதவிக்கான விண்ணப்பங்கள்

கிராம சேவையாளர் பதவிக்கான 2021 ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இதுவாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது. 

கிராம உத்தியோகத்தரின் பணிகள் மற்றும் பொறுப்புக்களை நன்கு அறிந்த எமதூர் இளைஞர்கள் அல்லது யுவதிகள் இதற்கு விண்ணப்பிப்பதனூடாக அவர்கள் உரிய போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தெரிவுசெய்யப்பட்டால் ஊருக்கும் சமூகத்துக்கும் அளப்பரியதொரு சேவையை மேற்கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 2021-06-28

வயதெல்லை : 2000-06-28 அல்லது அதற்கு முன்னரும் 1986-06-28 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்கள்

தகைமை: 

க.பொ.த உயர் தரத்தில் ஒரே தடவையில் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தி உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

ஊருக்கும் சமூகத்துக்கும் அளப்பரியதொரு பணியை மேற்கொள்ளக்கூடிய இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
»»  (மேலும்)

5/28/2021

யூன் 7வரை தளர்வின்றிய பயணத்தடை


ஜூன் 07 வரை  தளர்வின்றிய பயணத்தடை
 
ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் தொடர்ந்து நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 
 
கொவிட் தடுப்பு சிறப்பு செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே, ஏனைய அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
 
பயணத்தடையின் காரணமாகப் பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணத்தடையை தளர்த்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் - கடந்த 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில், பொதுமக்கள் செயற்பட்ட விதமானது, நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளிப்பதைப் போன்றதாகவே அமைந்தது.

எனவே - நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தோல்வியடைந்தது.
 
அதன்படி - மே மாதம் 31ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் பயணத்தடையைத் தளர்த்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பயணத்தடை நடைமுறையில் உள்ள காலங்களில் அத்தியாவசிய சேவைகளைப் பெற மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி உண்டு.

வீதிகளில் பயணிக்கும்போது தொழில்புரியும் இடங்களினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் தொழில் அடையாள அட்டையை கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
»»  (மேலும்)

சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் எதிர்வரும் ஞாயிறன்று (30/05/2021) "தமிழ் சமூக வாழ்வியலில் சாதியத்தின் இயங்குநிலை"  பற்றிய கருத்தாடல் நிகழ்வொன்று இடம் பெற்றுள்ளது. இதனை பிரான்ஸில் இருந்து செயற்பட்டுவரும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


இணையவழி மூலம்  இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நீங்களும் கலந்து கொள்ள லாம்.»»  (மேலும்)

5/26/2021

கொரோனாவுக்கான காட்போட் சவப்பெட்டி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக தெஹிவளை - கல்கிஸை நகர சபையினால் காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அப்புறப்படுத்தப்பட்ட காகிதம் மற்றும் காட்போட் அட்டைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக நகரசபை உறுப்பினர் பிரியந்த சஹபந்து கூறியுள்ளார்.

இதன் ஊடாக,  சவப்பெட்டிகளின் உற்பத்திக்காக வெட்டப்படும் மரங்களை காப்பாற்றுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு  சவப்பெட்டியை சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

»»  (மேலும்)

சீனாவில் இருந்து 5லட்சம் தடுப்பூசிகள்

சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளன.


»»  (மேலும்)

புர்கா அணிவது அரேபியா கலாசாரம் நீதியமைச்சர்

புர்கா அணிவது அரேபியக் கலாசாரமெனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்கா அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது, அரசாங்கத்துக்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை இருந்தது. எனினும் அனைவரதுக் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையாகவே இதன்போது அரசாங்கம் செயற்பட்டது என்றார்.

மேலும் இச்சட்டமூல வாக்கெடுப்பின்போது தனது வாக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வாக்கும் கணக்கில் எடுக்கப்படாது தவற விடப்பட்டுள்ளது என்றார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

புர்காவை நான், எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருடங்களாகவே கூறிவருகிறேன். புர்காவுக்கு தடை விதிப்பதற்கு அப்பால் புர்கா அணியக் கூடாது. தனது மதத்தை மற்​றொருவருக்குக் கொண்டு செல்வது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. எனவே, இதற்கு ஏனையோருடன் முதலில் கலந்துரையாட வேண்டும். இதனை விடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றது எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

புர்கா என்பது அரேபியக் கலாசாரம். இதனை சமூகம் என்றவகையில் முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்காவ அணிவதை நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.


»»  (மேலும்)