5/15/2021

இணைய வழி கலந்துரையாடல்

ZOOM வழியான ,( 16 மே- ஞாயிறு)
6வது  தொடர் கலந்துரையாடல்
 எஸ். பொன்னுத்துரை
எழுத்தாளர் , பதிப்பாளர்
(1932 - 2014)


உரையாளர்கள்-
* ஐ.சாந்தன்
- எழுத்தாளர் (இலங்கை)
* நோயல் நடேசன் 
-எழுத்தாளர், இதழியலாளர்( அவுஸ்ரேலியா)
* எஸ்.எல்.எம். ஹனீபா
எழுத்தாளர் ( இலங்கை)
* ஞானம் ஞானசேகரன்
-எழுத்தாளர் ,இதழியலாளர்(இலங்கை) 

காலம் - 16 மே 2021( ஞாயிறு)
3  PM London, 4PM Europe ,7.30 PM Sri Lanka
 & India, 10AM Canada

Meeting ID: 864 1631 3300
Passcode: 371255

மறைந்த இலங்கை தமிழ்ப்படைப்பாளிகள்/ படைப்புகள்
ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .
-----------------------------
வழிப்படுத்தல்
எம்.பெளசர்

தொடர்புகளுக்கு...
0044 7817262980
Email. eathuvarai@gmail.com
ஆர்வமிருப்போர் இந்த அறிவித்தலை , உங்கள் நட்புவட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஒவியம்- ஏ.எம். அனீஸ்
»»  (மேலும்)

சம்பளத்தை கல்வி வளர்ச்சி செலவிட்டு வரும் பிரதேச சபை உறுப்பினர்

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் க.குமாரசிறி அவர்களின் ஒருமாத  பிரதேசசபையின் சம்பளம் உட்பட ரூபா 25000 னை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்திற்காக வழங்கியுள்ளார். 

பழைய மாணவர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணவர்களின் வகுப்பறை வளப்படுத்தல் திட்டத்திற்காக ஒருமாத சம்பளம் ரூபா 15000 மற்றும் இப்பாடசாலையில் அண்மையில் வெளியான உயர்தர பரீட்சையில் 3A சித்திபெற்ற மாணவியின் பல்கலைக்கழக  கல்விக்காக ரூபா 10000 வழங்கினார்.  
 கடந்த பிரதேசசபை தேர்தலின்போது தனது பிரதேச சபை சம்பளம் அனைத்தும் கல்விக்காக செலவிடுவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தரான இவர் கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
»»  (மேலும்)

5/14/2021

நோன்பு பெருநாள் வாழ்த்து


எனது அன்புக்குரிய 
இஸ்லாமிய மக்களே! 

நீண்டதொரு நோன்பு நோற்றலின் பின்னர் பெருநாளை கொண்டாடும் உங்களனைவருக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மன மகிழ்ச்சி அடைகின்றேன்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 
வாழும் எமது இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 

தீராப் பிணியாக இப்பூவுலகை ஆட்கொண்டிருக்கும் கொரோனா கால நிலையை உணர்ந்து நீங்களனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இப்பெருநாளை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு அமைதியும் சகோதரத்துவமும்' நம் மண்ணிலே மென்மேலும் வளர இப்பெருநாள் வழிசமைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

சிவநேசதுரை சந்திரகாந்தன்
மட்டக்களப்பு (பா. உ/முன்னாள் கி. மா. முதலமைச்சர்)

»»  (மேலும்)

வட- கிழக்கு இணையுமா?- முன்னாள் முதல்வர்


இன்று நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

இலங்கையின் மத்திய ஆட்சியில் அதிகாரத்துக்கு வரும் எந்த கட்சியும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தயாராக இல்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அவ்வாறான ஓர் இணைப்பை விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களிலும் கணிசமானவர்கள் அதனை விரும்பவில்லை. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தோடு இணைப்பது என ஒரு திணிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லை.

கேள்வி:- இலங்கையின் வடக்கு கிழக்கின் முதலாவது முதலமைச்சர் என்ற வகையில் உங்கள் பார்வையில் தற்போது வடக்கு கிழக்கு இணைந்திருப்பதால் – அல்லது பிரிந்திருப்பதால் உள்ள சாதக பாதகங்கள் எவை?

பதில்:-வடக்கு கிழக்கு இணைந்திருந்தால் தமிழர்களும் முஸ்லிம்களும் மொத்தத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் 85 சதவீதமானோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும். வெறுமனே தமிழர்கள் என்று பார்த்தாலும் கிட்டத்தட்ட 65 சதவீதமானோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும். இலங்கையின் மத்திய ஆட்சியில் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் மிகப் பெரும்பான்மையாக இருந்து ஆட்சி செய்கையில், வடக்கு கிழக்கு இணைந்ததொரு மாகாண ஆட்சிக் கட்டமைப்பானது இலங்கையின் அரசியலில் இனரீதியான விவகாரங்கள் தொடர்பில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு வாய்ப்பாக இருக்கும். தமிழ்ப் பேசும் மக்களினுடைய சமூக பொருளாதார கலாச்சார மற்றும் நில உரிமைகளையும் மற்றும் அவை தொடர்பான பாதுகாப்புகளையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும். அத்துடன் அவற்றின் முன்னேற்றகரமான வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும்.

இதேவேளை, வடக்கு கிழக்கு இணைந்திருந்தால், வடக்கைச் சேரந்தவர்களின் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்குமென கிழக்கு மாகாண தமிழர்களிடையே ஓர் அச்சம் இருக்கிறது. கடந்தகால அநுபவங்கள் இந்த அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன. அதேபோல, வடக்கு கிழக்கு இணைந்தால் தாங்கள் மிகவும் சிறுபான்மையினராகி விடுவர் என்பதனால் தமக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமற் போய்விடும் என இங்குள்ள முஸ்லிம்கள் கருதுகிறார்கள். அவர்களது கடந்த கால அநுபவங்களும் அதனையே உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு வடக்கு கிழக்கு இணைப்பானது தமது சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்குத் தடையாக அமையும் என கருதுகின்றனர்.

இவ்வாறாக, வடக்கு கிழக்கு  இணைப்பு தொடர்பாக எதிரும் புதிருமான உணர்வுகளே இங்கு மேலோங்கி நிற்கின்றன. 1980களில் சமூகங்களுக்கிடையில் இருந்த உறவு நிலைமைகளிலிருந்து பெரும் மாற்றங்களை கடந்த 30 ஆண்டுகால இலங்கையின் அரசியல் ஏற்படுத்திவிட்டது. எனவே இன்று நிலவும் யதார்த்தங்களுக்கு ஏற்றபடியே நாட்டின் அரசியற் பொருளாதாரமும் நகரும். 

கேள்வி:- இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் முடிவின்றி தொடர்கிறது. இதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இணைந்து முன்னெடுக்க வேண்டும்?

பதில்:- தமிழ்க் கட்சிகள் ஒரு நிதானமான அரசியலைக் கொண்டவையாகவோ இன்றைய காலகட்டத்தில் நிலவும் அகப்புற யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டவையாகவோ இல்லை. இவர்களின் அரசியலானது தேர்தற் போட்டிகளை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. இங்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று ஒரு பிரிவினரும் அரசாங்கத்தோடு ஒத்துப் போகும் கட்சியினர் என இன்னொரு பிரிவினரும் ஒருவரோடு ஒருவர் பகைமை கொண்டவர்களாக உள்ளனர். இங்கு தாங்கள் தியாகிகள் மற்றவர்கள் துரோகிகள் என்ற அரசியலும், தாங்கள்தான் தமிழ் மக்களுக்காக அதிக பட்ச உரிமைகளைக்  கோருபவர்கள் என்ற போட்டியுமே பிரதானமானதாக உள்ளது. இந்தக் கட்சிகள் ஆங்கிலத்தில் ஓர் அரசியலையும் தமிழில் வேறொரு அரசியலையும் பேசுகின்றன. இவ்வாறான குழப்பங்களையும் போலித்தனங்களையும் கொண்டதாக உள்ள தமிழ்க் கட்சிகளை ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துவதென்பது சாத்தியமா என்பதே பெரும் கேள்வியாகும். அரசியற் கட்சிகள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சமூக அமைப்புக்களும் ஒட்டுமொத்தத்தில் அவ்வாறுதான் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

இன்றைக்கு ஒரு சமூகத்தின் அரசியற் தலைவர்களை மக்களே தமது வாக்குகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். மக்களின் வாக்குகளைக் கணிசமாகப் பெற முடியாதவர்களால் சமூக அரசியலில் இன்று எதனையும் சாதிக்க முடியாது. சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள் சமூகம், பல்கலைக் கழக மாணவர் சமூகம், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற் சங்கத்தவர்கள் என உள்ளவர்கள் அரசியற் போக்குகள் மீது ஓரளவு செல்வாக்கு செலுத்த முடியும். ஆனால் அவர்களும் அரசியற் கட்சிகளை விட மிக அதிகமாகவே கருத்து வேறுபாடுகளால் ஓரணிக்குள் வரத் தயங்குகின்றனர். தமிழர்களின் மத்தியில் உள்ள பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் தமிழர்களுக்கு வெறுப்பையும் விரக்தியையும் ஆத்திரத்தையும் நம்பிக்கையீனங்களையும் ஊட்டுவதிலேயே தமது திறமைகளை நிலைநாட்டுகின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சக்திகளை துண்டு துண்டாக கூறு படுத்துவதன் மூலமே அவை தமது வியாபாரத்தை லாபகரமாக நடத்துகின்றன.

இவ்வாறாக தமிழர் சமூகத்தை அழிவுப்பாதையிலிருந்து விலக முடியா வகையில் வைத்திருக்கும் சக்திகள் மிகப் பெரும் வளமும் செல்வாக்கும் கொண்டவையாக உள்ளன. 

இந்நிலையில் இப்போதுள்ள தமிழ்க் கட்சிகளை ஓர்                          ஆக்கபூர்வமான பாதையில் பயணிக்க வைப்பது எப்படி என்று முயற்சிப்பதில் பயனில்லை. தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சரியான பகுத்தறிவான முற்போக்கான புதிய சக்திகள் எழுச்சி பெறும் வரை பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றே தெரிகிறது.         

கேள்வி:- தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த போது மற்ற வெளிப்படுத்திய கருத்துதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது உறுதியாகத் தெரிகிறது. இதில் புதிதாக எதுவுமில்லை. ‘இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’, அதற்காக ‘மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும்’ என்பதையே மீண்டும் மீண்டும் இந்திய அரசாங்கம் தனது அறிக்கைகளில் வெளியிடும் – இந்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர் மாநாடுகளில் கூறுவர். அது தொடர்பாக இந்தியா செயல்பூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாதுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் தமிழர்களினுடைய அரசியற் பிரதிநிதிகளுக்கும் சமூக பிரமுகர்களுக்கும் எவ்வளவு தூரம் உடன்பாடு உண்டு என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். அவை தொடர்பாக இவர்கள் என்ன நடைமுறை வேலைத்திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் அக்கறையும் வெளிப்படும்.

இந்த விடயத்தில் இந்தியாவும் இலங்கையும் முரண்பட்டு ராஜரீதியான மோதல் நிலையை அடையும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம் ஆகும். ‘தமிழர்களின் தேசம்’, ‘தமிழர்களின் சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்துக்களையோ, தமிழர்களுக்கு சமஷ்டியே தீர்வு என்ற கோரிக்கையையோ இந்தியா ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 1983 – 1990 ஆண்டு காலகட்டத்தில் நிலவிய அரசியற் காட்சிகள் மீண்டும் வரமாட்டா. 

கேள்வி:- இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்:-  இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு என்ன இருக்கிறது. இந்த அரசாங்கம் மட்டுமல்ல பிரித்தானியரின் காலனி ஆட்சியின் கீழ் 1931ம் ஆண்டு இலங்கையில் அரச சபை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்தே அதுதான் நிலைமை. இதில் சிறி லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சிறி லங்கா சுதந்திரக் கட்சி என்று எந்த வேறுபாடும் கிடையாது. ரணசிங்க பிரேமதாசா அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் அதையேதான் செய்தார். நாளை ஒருவேளை சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானாலும் அதையேதான் செய்வார். அதுதான் இலங்கையின் ஜனநாயகம் என ஆகிவிட்டது.

ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி கூட 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு எதிரான கட்சிதான். மாகாண சபை ஆட்சி முறைமையே தேவையில்லை என்பதுதான் அதனுடைய அரசியல் நிலைப்பாடு. வடக்கு கிழக்கை பிரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் அந்தக் கட்சிதானே செய்தது.

இலங்கையின் ஒட்டு மொத்த அரசியற் பொருளாதாரக் கட்டமைப்பிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டாலே தவிர இலங்கை சிறுபான்மையினராக வாழும் தேசிய இனங்களின் அரசியல் பொருளாதார சமூக பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடரந்தும் கேள்விக்குரியனவாகவே இருக்கும்.  

நன்றி*சூத்திரம்

»»  (மேலும்)

5/13/2021

கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்


சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசம் கொரோனா தொற்றால் விழி பிதுங்கிக் கிடக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவர்களை எரியூட்டக்கூட இடமில்லை. மயானங்களில் எல்லாம் இறந்த வர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு கிடக்கின்றன. கங்கையில் தூக்கி எறியப்படுகின்றன.

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சவுசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40-க்கும் மேற் பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கரை ஒதுங்குவது குறித்து அந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால், இதுகுறித்து ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள்.

கழுகுகளும், நாய்களும் இந்த சடலங்களை உண்பதற்காக பெருமளவில் வந்து குவிவதால், குடிநீருக்காக இந்த ‘புண்ணிய' நதியின் நீரை பயன்படுத்தும் அந்தப் பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கரோனாவுக்கு முன்னர் சடலங்களை எரிக்க ஆறாயிரம் ரூபாய் வரை செலவான நிலையில் தற்போது விறகு முதல் சம்பிரதாயப் பொருள்கள் என்று அனைத்து விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டதால் 15 ஆயிரம் ரூபாய்வரை செலவாகிறது. இதனால் இடைத்தரகர்கள் தான் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். பணத்திற்கு வழி இல்லாதவர்கள் சடலங்களை அப்படியே நதியில் விட்டுச் செல்கின்றனர்.

மேலும், சடலங்களை இதுபோல் நதியில் விட்டுச் செல்வதால் இந்த பகுதி மக்களுக்கு தொற்றுப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.


உடல்கள் மிதந்து வரும் பக்சர் பகுதி பீகார் - உத்தரப்பிரதேச எல்லையில் உள்ளது. இந்த மாவட்டத்திற்கு அருகில் வாரணாசி உள்ளது. வாரணாசி கிராமப்புறப் பகுதியில் மிகவும் அதிகமாகக் கரோனா தொற்று ஏற்பட்டு மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்று அரசு மிரட்டல் விட்ட காரணத்தால், உத்தரப்பிரதேச மாநில கோவிட் தொடர்பான மரணங்கள் சரியான எண்ணிக்கையில் வெளிவருவதில்லை; மேலும் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் தொகுதியாகையால் வாரணாசி குறித்த எந்த செய்தியும் வெளியாவது இல்லை; இந்த நிலையில் உடல்களை எரிக்க வழியில்லாமல் கங்கையில் வீசி விட்டுச் செல்லும் அவலம் நிகழ்கிறது. இந்த உடல்கள் அருகில் உள்ள மாநிலமான பீகாரில் கரை ஒதுங்குகின்றன. கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து இதுவரை மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு ஒருமுறைகூட வரவில்லை.

உண்மையைச் சொல்லப்போனால் கங்கையில் பிணங் கள் மிதப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. கங்கை ஆற்றின் நீளம் 2,525 கிலோ மீட்டர். இதில் காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கலக்கிறது. நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு, கங்கையில் தூக்கி எறியப்படுகின்றன. 9,000 கிழட்டுப் பசுக்கள் ஆண்டு ஒன்றுக்குக் கங்கையில் உயிரோடு தள்ளப்பட்டுக் கொல்லப் பட்டு வருகின்றன.»»  (மேலும்)

மணியம்மை மருத்துவ மனையும் 10 லட்சம் ரூபாயும் நன்கொடை

சென்னை பெரியார்  மணியம்மை  மருத்துவமனை ஒப்படைப்பு!

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நன்கொடை!

கொரோனா கடும் தொற்று அலை பேரபாயமாக வீசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நமது இயக் கத்தின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற தொண்டறச் சிந்தனையோடு, கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெரியார் திடலில் - சுற்று வட்டார மக்களுக்கு நல்ல வகையில் பயன்பட்டுவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனை - தமிழ்நாடு அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார் - மேலும் பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய்
10 லட்சம் வழங்கப்படுகிறது என்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
»»  (மேலும்)

அரச காணியும் கிரான் கேடியும்கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நிருவாக ரீதியாக எந்தவொரு அரச அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தாமலும் எவ்வித முன் அனுமதியுமின்றி சட்டத்திற்கு முரணாக 240 திற்கு மேற்பட்ட குடும்பங்களை 15 ஏக்கர் காணியில் வெளியூர் நபர்களை குடியமர்த்தியுள்ளார் திரு. விமலசேன லவக்குமார். இதற்காக லவன் எழுச்சிக்கிராமம் எனவும் பெயர் வைத்துள்ளார்.

இக்குடியேற்றம் தொடர்பில் இப்பிரதேச மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர் காரணம்  இந்த குடியேற்றம் கிராமசேவகர், பிரதேச செயலாளர் அனுமதியின்றி சட்டத்திற்கு முரணன குடியேற்றம் என்பதனால்    

• இவர் யார்?
• இவரது பின்னணி என்ன?
• இவருக்கு பின் உள்ள பலம் எது?
• ஒரு தனிநபரால் எவ்வாறு இது சாத்தியம்?
• இதனால் இவர் அடையநினைக்கும் விடையம் எது?
என பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திரு. விமலசேன லவக்குமார் தனது பரம்பரை காணியினையே காணி இல்லாத மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இவர் கிரானில் தனது குடும்பம் இருப்பதற்கே காணி இல்லாமல் இருந்தவர் இவருக்கு எவ்வாறு 15 ஏக்கர் காணி கிடைத்தது. இதன் பின்னணி என்ன? இதற்கு பின் உள்ள மோசடித்தனம்தான் என்ன?
இவரால் வழங்கப்பட்ட காணியிலே இவ்வளவு சந்தேகம் இருக்கின்றபொழுது திரு. விமலசேன லவக்குமார் காணியினை வழங்கும் மக்களிடம்  ஒரு குடும்பத்திற்கு முற்பணமாக 5000.00 ரூபாவும் அங்கு செய்கின்ற  ஏனைய சில வேலைகளுக்காக 15000 ரூபாவுமாக 240 குடும்பங்களுக்கு (20,000*240=4,800,000)15 ஏக்கரையும் வழங்குகின்றார். இது எவ்வாறு இலவசமாகும்.
எனவே இந்த விடயத்தினை ஒரு தனிநபரால் செய்யமுடியாது இந்ந மோசடிக்கு பின்னால் இருக்கின்ற குழுவினரை உரிய அதிகாரிகள் கண்டுபிடித்து இதற்குத்தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கிரானில் இது போன்று இன்னுமொரு லவன் எழுச்சிக்கிராமம் 02 வெகு வரைவில் அமைப்பதற்கான திட்டம் போடப்பட்டு அதற்கான விண்ப்பபடிவமும் தயாரிக்கப்பட்டிருக்கின்றதாம். 
இதனால் கிராமத்தில் பாரிய சமூகச்சிக்கல் இடம்பெறுவதற்கு முன்பு இதனை தடுத்து நிறுத்தவேண்டியது
• பிரதேசத்தினை பிரதிநிதித்துவ்படுத்தும் அரசியல் வாதிகள்
• பிரதேச அரச அதிகாரிகள்
• பிரதேச மக்கள்
• சமூக ஆர்வலர்கள்  
போன்ற அனைவரும் இதனை யாரிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டுமோ அவர்களிடத்தில் கொண்டு சேர்த்து இதற்கான தீர்வினை பெற்றுதாருங்கள்.

நன்றி முகநூல் *

ரெஜினோல்ட்
»»  (மேலும்)

5/12/2021

எம்பிக்கொரு நீதி ஏழைக்கொரு ஒரு நீதியா?


நேற்றைய தினம் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனின் பிரேத்தியேக செயலாளர் முரளி என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ள்ளார். 

அதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய கொரோனா அவசர நிலை யின் கீழ் தடுப்பு காவலில் வைக்க ப்படவேண்டிய ஒருவரை நேரடியாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல கூடாது.
தடுப்பு காவலில் வைக்கப்பட வேண்டிய ஒருவர் முதலில் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல பட வேண்டும்.
அதன் படி பொலிசாரால் கைது செய்யப்படுகின்ற ஒவ்வொரு குடிமக்களும் முதலில் கல்முனை பிரதேச தடுப்பு முகாமுக்கே அழைத்து செல்ல படுகின்றனர்.
ஆனால் நேற்றைய தினம் கைதான எம்பியின் செயலாளருக்கு விசேட  சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இது எவ்விதத்தில் நியாயமாகும்?

»»  (மேலும்)

மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்


ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியானது அந்நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. தான் பெற்ற கல்வியின் பாற்பட்டும், அதன் உதவியுடன் பெற்றுக்கொள்ளும் பல்துறை அறிவுசார் விழிப்புணர்வின் பாற்பட்டும் அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் ஒரு சமுதாயத்தைக் கொண்டுள்ள ஒரு நாகரீகமுள்ள நாட்டிலே மனிதநேயம் படைத்த மக்களைக் காணமுடியும். அதனைக் கருத்திற்கொண்டே அரசாங்கங்கள் தமது கல்வித்துறையில் கூடுதல் முதலீட்டைச் செய்கின்றன. பாடசாலை, பல்கலைக்கழகக் கல்விக்கும் அப்பால் மக்களின் அறிவை வளர்க்கும் சமூக அறிவியல் நிறுவனங்களாக நூலகங்கள் இயங்குகின்றன.  

ஒரு நூலகத்தின் மதிப்பீடு அதன் வடிவமைப்பினாலும், விசாலமான தோற்றத்தினாலும் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் அறிவியல் சேர்க்கைகளையும், அந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும் பெறுமதிவாய்ந்த ஆவணங்களையும், நூலக அங்கத்தினர்களின் வழியாக வழங்கப்படும் சமூகத்துக்கான சேவைகளையும் வைத்தே அந்த நூலகத்தின் மதிப்பு உய்த்துணரப்படுகின்றது.  

மட்டக்களப்புப் பொது நூலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 18 நூலகங்களுள், முதலாம் தரத்திலுள்ள (Library Grade -I) ஒரேயொரு நூலகமாகும். மண்முனை வடக்கு பிரதேசத்தில் இந்த நூலகம் இயங்குகின்றது. 

மற்றைய பதினேழு நூலகங்களும் மூன்றாம் தரத்தில் (Library Grade -III) இயங்குபவையாகும். இவை முறையே கீழ்க்கண்ட பிரதேச செயலகங்களின் நிர்வாகங்களின் கீழ் இயங்குகின்றன. 

பிரதேச செயலகப் பிரிவு, ஊர்ப்பெயர், நூலகங்களின் எண்ணிக்கை       

மண்முனை மேற்கு, வவுணதீவு – 1 

மண்முனைப்பற்று, ஆரையம்பதி – 1 

மண்முனை தெற்கு/ எருவில் பற்று, களுவாஞ்சிக்குடி – 2 

காத்தான்குடி, காத்தான்குடி – 1 

போரதீவுப் பற்று, வெல்லாவெளி – 3 

ஏறாவூர்பற்று, செங்கல்லடி – 1 

ஏறாவூர் நகரம், ஏறாவூர் – 1 

கோறளைப்பற்று, வாழைச்சேனை – 2 

கோறளைப்பற்று தெற்கு, கிரான் – 1 

கோறளைப்பற்று வடக்கு, வாகரை – 1 

கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மத்தி – 1 

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி – 1 

மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை – 1 

மட்டக்களப்பு பொதுநூலகம் 1855இல் டச்சுக்காரர்களின் ஆட்சியின் போது புதினப் பத்திரிகைகள் வாசிப்பறையாக ஆரம்பிக்கப்பட்டது. அது பின்னர் ஒரு பொது நூலகமாகப் பரிணாம வளர்ச்சிபெற்றமை 1884-ஆம் ஆண்டிலாகும். உள்ளூர் சபையொன்றினால் நிர்வகிக்கப்பட்டுவந்த இச்சிறிய நூலகம், 1933இல் நகர சபைக்கு (Urban Council) கையளிக்கப்பட்டது. பின்னர் 1967 முதல் இதன் நிர்வாகத்தை மட்டக்களப்பு மாநகரசபை பொறுப்பேற்றுக் கொண்டது.  

இன்று மட்டக்களப்பு பொது நூலகம் பல்வேறு தரங்களிலான பன்னிரண்டு கிளைகளுடன் செயற்பட்டு வருகின்றது. கல்லடி, புதூர் ஆகிய இரண்டு கிளைகளும் தரம் மூன்று நூலகர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன. பார் வீதி, சின்ன ஊரணி, நாவற்குடா, எல்லை வீதி, பாரதி ஒழுங்கை, இருதயபுரம், மட்டிக்களி ஆகிய ஏழு கிளைகளும் சஞ்சிகைகளும், புதினப் பத்திரிகைகளும் கொண்ட வாசிகசாலைகளாக இயங்குகின்றன. இவற்றின் மேற்பார்வை, பராமரிப்பினை மேற்கொள்ள நூலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதினப் பத்திரிகைகள் மாத்திரம் கொண்ட வாசிக சாலைகளாக மஞ்சந்தொடுவாய், கொக்குவில், ஜயந்திபுரம் ஆகிய மூன்று கிளைகளும் இயங்குகின்றன.  

முன் ஒரு காலகட்டத்தில் மட்டக்களப்பின் மூதறிஞர்கள் பலரின் இதயத்துக்கு நெருக்கமாகவிருந்து சுமார் 83,700 நூல்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிய நூலகமே மட்டக்களப்பு பொது நூலகமாகும். பெறுமதியான பல நூல்களையும் சோதிட, மாந்திரீக ஏடுகளையும் பல நாட்டாரியல் கையெழுத்துப் பிரதிகளையும் தன்னகத்தே அது கொண்டிருந்தது. பெரு வெள்ளம், கிழக்கின் சூறாவளி, சுனாமி ஆகிய அநர்த்தங்களின்போது பல ஆவணங்களை படிப்படியாக இழந்து,  நலிந்து வந்த இந்நூலக கட்டிடம் போர்க் காலத்தில், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டு தனது சேர்க்கைகளை மேலும் இழந்து, இன்று வெறும் 27000 நூல்களுடன் இயங்கிவருகின்றது.  

2009இல் கிழக்கு மாகாண அரசின் முதல்வராக திரு.சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களிருந்த காலத்தில்  மட்டக்களப்பு பொது நூலகத்தை புதிதாகக் கட்டியெழுப்பப்படும் திட்டத்தின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 2015இல் அவரது கைதின் பின்னரான காலகட்டத்தில் கட்டிட வேலைகள் அரசியல் மற்றும் நிதிப் பிரச்சினைகளின் காரணமாக ஸ்தம்பிதமாயின. பின்னர் 2018இல் கட்டடப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான கபினட் அங்கீகாரம் பாராளுமன்றத்தில் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலின் வெற்றியுடன் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரான கையோடு, கட்டிட வேலைகள் மீளவும் முழுவீச்சுடன் தொடங்கப்பெற்றுள்ளன. முன்னர் திட்டமிடப்பட்டிருந்த ஒற்றைத்தள கட்டிட நிர்மாண அமைப்பிலிருந்து, மேலதிகமாக ஒரு தளத்தைச் சேர்த்து மாடிக்கட்டிடமாகவும், அதற்கு மேலாக ஒரு குவிமாடக் கட்டமைப்பை கொண்டதாகவும் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை நினைவூட்டும் வகையில் விசாலமான பரப்பளவில் அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால்  நூலகத்தின் பயன்பாட்டுக்கான தளப் பரப்பு இரு மடங்காக உயர்வடைந்துள்ளது. அந்த வீதத்தில் எதிர்காலத்தில் ஆளணி நிர்வாகம், நூலீட்டல்,சேவை முனையங்கள் என்பனவும் மீளக் கணக்கிடல் வேண்டும்.  

இந்நிலையிலேயே இந்நூலகத்தின் கட்டுமானத்திற்குச் சமாந்தரமாக அதன் உட்கட்டமைப்பைப் பற்றியும் அதற்குத் தேவைப்படும் முக்கிய நூலக சேர்க்கைகள், தளபாடங்கள், ஆளணி பற்றியும் பல்வேறு பிரிவுகளின் உருவாக்கம் பற்றிய விழிப்புணர்வினை எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு பருந்துப் பார்வையை வழங்கும் நோக்கிலேயே இக்கட்டுரைத் தொடர் எழுதப்படுகின்றது.  

தற்போதுள்ள நூலகத்தின் ஆளணி, நூற்சேர்க்கை, சேவை முனையங்கள் ஆகியவற்றை விட ஆகக்குறைந்தது ஐந்து மடங்கு அதிகரிப்பை புதிய நூலகம் கோரி நிற்கின்றது என்பதை இந்நூலகக் கட்டமைப்புடன் தொடர்புகொண்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அறிவார்கள். இப்பொழுதே இவை பற்றிய புரிதல் இன்றேல், கட்டிடம் கட்டி முடித்த பின்னர் அதற்கான வளங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள், கால தாமதங்கள் ஏற்படலாம். எனவே மட்டக்களப்பு பொது நூலக ஊழியர்கள் தொடக்கம், அவர்களை வழிநடத்தும் உயர் அதிகாரிகள் வரை இவ்விடயத்தில் இப்பொழுதே கரிசனை கொள்ளவேண்டியவர்களாக உள்ளனர்.  

முதலில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம், எமது நூலகச் சேர்க்கைகளை வளர்த்துக்கொள்வதாகும். நூலக நியமங்களுக்கேற்ப தளப்பரப்பின் விகிதாசாரத்தில் அதில் கொள்ளக்கூடிய நூல்தட்டுகளின் நீளத்தை கணக்கிடமுடியும். இதற்கான தகவல் உதவிகளை இலங்கைத் தேசிய நூலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். உத்தேசமாக புதிய நூலகத்தின் தளப் பரப்பளவு யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் தளப் பரப்பளவினை அண்ணளவாகக் கொண்டதாக இருக்கலாம் என்ற உத்தேசத்தில் நாம் இரண்டு லட்சம் நூல்களை ஆகக்குறைந்த அளவில் முழுமைபெற்ற மட்டக்களப்பு பொது நூலகத்தின் இரு தளங்களும் கொண்டிருக்கும் என மதிப்பிடலாம்.  

IFLAவின் பொது நூலக நியமத்தின்படி ஒரு குறித்த பிரதேசத்தின் சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு நபருக்கு மூன்று நூல்கள் என்ற கணிப்பின்படி நூல்கள் ஈட்டப்பட்டிருத்தல் வேண்டும். 68 சதுர கி.மீ. பரப்பளவுள்ள மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதேசத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 63914. மேலும் 20 வட்டாரங்களைக் கொண்ட இப்பிரதேசத்தில் 18 வயதுக்குட்பட்ட இளையோரை நான் சேர்க்கவில்லை. அதற்காக 35 சதவிதத்தை (உத்தேசமாகவேனும்) சேர்த்தால் எண்ணிக்கை 2237ஆல் அதிகரித்து அப்பிரதேசத்தின் உத்தேச சனத்தொகை 66151 ஆக அதிகரிக்கும். பெரும்பாலான பொது நூலகங்களைப் போலவே, இந்நூலகத்தினதும் கட்டிடவேலைகள் முதல் தளத்தில் பூர்த்தியானதும் பழைய நூலகத்தை அக்கட்டிடத்திற்கு மாற்றி அங்கேயே இயங்கச்செய்யும் சூழ்நிலையும் உருவாகக்கூடும். அத்தகைய சந்தர்ப்பத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் நூல்களாவது முதலில் தேவைப்படும். இந்நூல்களின் வகைப்பிரிப்பு பற்றி பின்னர் ஒரு இயலில் விரிவாக ஆராயப்படவுள்ளது. 

340 மில்லியன் ரூபா செலவில் புதிய நூலகம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து மாகாண அரசும், உள்ளூராட்சி அமைச்சும் பொறுப்பெற்றுள்ளன. இப்பாரிய செலவினத்துக்கு நியாயம் வழங்கும் வகையில் நூலகத்தின் அங்கத்தவர்களும், நூலகத்தின் பரவலான சேவைத்திட்டங்களும் விரிவுபடுத்தப்படவேண்டும். சனத்தொகை வீதத்தின் படி மட்டக்களப்பு பொது நூலக அங்கத்தவர்கள் எண்ணிக்கை தற்போது மிகக்குறைவாகும். வாசிகசாலையைப் பயன்படுத்துவோரையும், தமது பாடநூல்களை வாசிப்பறைகளில் வைத்துப் படிக்கவரும் மாணவர்களையும் இக்கணக்கெடுப்புக்குள் சேர்க்கமுடியாது. இன்றைய நிலையில் நூலக அங்கத்தவர்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் 1425 பேர் வரையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படவேண்டும். இன்றைய நிலையில் மாநகரத்தின் 66 பேருக்கு ஒரு நூலக அங்கத்தவர் என்ற வீதத்திலேயே நூலகத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.  

மட்டக்களப்பு பொது நூலகத்தில், அண்மைக் காலங்களில் வாசிப்பு மாதம், நூலக மாதம் என குறிப்பிட்ட காலங்களில் அங்கத்துவர்கள் சலுகை அடிப்படையில் இலவசமாக இணைத்துக்கொள்வதான செய்திகளை வாசிக்க முடிந்தது. இது ஒரு நல்ல வரவேற்பைப் பெறும் முயற்சியாகும். இவ்வாறான மேலும் பல செயற்திட்டங்களை நூலக ஊழியர்கள்,நூலகத்தின் வளர்ச்சிக்குப் பொறுப்பான நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும். இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை அணுகி அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடையே நூலக விழிப்புணர்வினை ஊட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.  

நூலீட்டல் 

அங்கத்தவரை வரவைப்பதற்கு மிக முக்கியமான செயற்பாடு நூலகத்தின் சேர்க்கைகளை அதிகரித்துக்கொள்வதாகும். பொதுவாக நூலகத்தின் நூலீட்டல் (Acquisition) என்று குறிப்பிடும் போதெல்லாம் நூல்கொள்வனவு என்ற செயற்பாட்டைச் சுற்றியே சிந்தனை வலம்வருவதை அவதானிக்கமுடிகின்றது. அதற்கான நிதிவருவாயை தேடும் எண்ணமே அதிகாரிகளிடம் மேலோங்குகின்றது. இது தவறான எண்ணமாகும். நூலீட்டல் என்பது நூல்களை விலைகொடுத்து வாங்கிச் சேர்ப்பது தான் என்பதாகாது. ஒரு நூலகத்தின் அரிய பொக்கிஷங்களை பணத்தால் மாத்திரம் வாங்கிக் குவித்துவிட முடியாது. புத்தகசாலைகளில் இறாக்கைகளில் உள்ள நூல்களை மாத்திரம் அவ்வப்போது கொள்வனவு செய்வது மாத்திரமே நூலீட்டலாகிவிடாது. வழக்கொழிந்துபோன பழையதும் அரியதுமான நூல்களை அங்கே காணமுடியாது. அதற்கான சிறப்பு வழிமுறைகளைக் கையாண்டு நூலீட்டல் பணிகளை முன்னெடுக்கவேண்டும்.  

முன்னைய காலங்களில் ஒரு பிரதேசத்தின் அறிஞர் ஒருவர் தனது வாழ்நாள் சேகரிப்புகளை தான் அதிகம் புழங்கிய, இதயத்துக்கு நெருக்கமான பொது நூலகத்திற்கு வழங்கிவிட்டு மறைந்துவிடுவார். அந்த நூலகத்தினர் அவரது சேகரிப்புகளை தனியானதொரு அலுமாரியில் அடுக்கி வைத்து இது அமரர் இன்னாரின் சேகரிப்பு என்ற குறிப்புடன் நூலகக் கட்டிடத்தின் வரவேற்பறையில் அல்லது கட்டட மூலைகளில் வைத்துவிடுவார்கள். அன்று அது நூலகங்களுக்குப் பெருமை தருவதாகக் கணிக்கப்பட்டது. உண்மையில் இத்தகைய கொடையாளர்களை காலம் நூலக வரலாற்றில் பதிந்துகொண்டே செல்கின்றது. யாழ்ப்பாணப் பொது நூலகத்தில்கூட 1981இல் எரியூட்டப்படுவதற்கு முன்னர் இத்தகைய அலுமாரிகள் பல ஆங்காங்கே காணப்பட்டிருந்தன.  

பின்னாளில் நூலகச் சிந்தனையில் ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. எவருக்கும் பயன்படுத்த முடியாதவாறு, பொதுவான பகுப்பாக்கம் பட்டியலாக்கம் என்ற தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தப்படாது பூட்டிய அலுமாரிகளில் ஒரு பிரமுகரின் நினைவினை மாத்திரம் சுமந்தபடி பெருமை பேசிக்கொண்டிருக்கும் நிலைமையை இல்லாதொழிக்கும் வகையில் தனிப்பட்ட சேகரிப்புகளுக்கு பொது நூலகங்களில் இடம் வழங்கும் முறை இல்லாதொழிக்கப்பட்டது. இப்போது ஒருவரின் தனிப்பட்ட சேகரிப்புகள் பொதுநூலகத்தை அடையும்போது, அதனை வழங்குநருடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. அதாவது பிரமுகரின் தனிப்பட்ட நூற்சேர்க்கையை கையளித்ததும் அதில் தமது நூலகத்தில் இல்லாத நூல்களை மாத்திரம் ஏற்றுக்கொண்டு அதற்கான ஏற்புக்கடிதம் ஒன்றினை நூலக நிர்வாகத்தினரால் வழங்குவதெனவும், எஞ்சியவற்றை பிற நூலகக் கிளைகளிடையே அல்லது பிற பிராந்திய நூலகங்களிடையே பகிர்ந்தளிப்பதெனவும் அதற்கு அன்பளிப்பவர் ஒப்புதல் வழங்குவதாகவும் ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகும். அதற்கு உடன்படாத பிரமுகர்களின் நூல்கள் நூலகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.  

இத்தகைய சேகரிப்புகளின் வாயிலாகவும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூற்சேர்க்கைகளை வளர்த்துக்கொள்ளமுடியும். அப்பிரதேசத்திலுள்ள தனிப்பட்ட நூற்சேர்க்கையாளர்களை அணுகி அவர்களது நூல்களை நூலகத்திற்குப் பெற்றுக் கொள்ளமுடியும். 2010இல் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆலையடி வேம்பு என்ற ஊரில் வீரகேசரி பிராந்திய அலவலக நிருபராகவிருந்த திரு சிவப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் ஏராளமான அரிய நூல்களை சேகரித்து வைத்திருந்ததை கண்டு அதிசயித்ததேன். இவ்வாறே அமரர் எப்.எக்ஸ்.சி.நடராஜா, தோற்றாத்தீவு ஈழத்துப் பூராடனார், செ.குணரத்தினம், பெராசிரியர் சி.மௌனகுரு எனப் பல அறிவு ஜீவிகளின் தனிப்பட்ட சேகரிப்புகளும் இறுதியில் உரிமையாளர்கள் விரும்பும் நூலகங்களை சென்றடைந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் சென்றடையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவர்களைப் போல பலரும் பின்னாளில் தமது சேகரிப்பகளை வரலாற்று முக்கியத்துவமான மட்டக்களப்பு பொது நூலகத்தின் வளர்ச்சிக்காக கொடுத்த உதவுவார்கள் என்று நம்பகின்றேன். அண்மையில் தென்னிந்திய திரைப்பட பிரமுகர் பாலு மகேந்திரா அவர்களின் மறைவின் பின்னர் அவரது சேகரிப்பிலிருந்த ஆயிரக்கணக்கான திரைப்பட டீவீடீகளும் நூல்களும் கிளிநொச்சியில் அவரது பெயரில் அமைக்கப்பட்ட நூலகமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாண நூலகம் 1934இல் க.மு.செல்லப்பா என்ற தனிமனிதரின் 844 நூல்களுடனும் 30 பருவ வெளியீடுகளுடனும் ஆரம்பிக்கப்பட்டதே என்பது வரலாறு. ஒவ்வொரு பொது நூலகமும் இத்தகைய நூல் சேர்க்கைகளின் கூட்டு முயற்சியால் தான் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதென்பது வரலாறு. சிறிய எண்ணிக்கையிலான நூல்களைக் கொண்டியங்கும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு பெரும்பாலும் ஒரு அன்பளிப்பாளரின் தனிப்பட்ட சேகரிப்புகளில் உள்ள நூல்களில் அதிகம் தவிர்க்கவேண்டிய தேவை இருக்காது.  

ஒரு நூலக இறாக்கையில் நூலைப் பேணுவதென்பது செலவுக்குரிய விடயமாகும். இது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. பிரித்தானிய நூலகங்களில் நூலகத் தட்டொன்றில் ஒரு நூல் இருப்பதற்காக ஆண்டொன்றுக்கு மூன்று பவுண்கள் பராமரிப்புக்கென செலவாகின்றன என்று அறிக்கையொன்று கூறுகின்றது. மேலதிக பிரதிகளை நூலகத் தட்டுகளில் பராமரிப்பது வீண்செலவு என்பதை இன்றைய  நூலகர்கள் நன்றே உணர்ந்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் உள்ள பல பிரபல்யமான நூலகங்கள் தங்கள் நூற்சேர்க்கைகளில் காணப்படும் மேலதிகமான நூல்களை (ஒரு நூலின் இரண்டுக்கு மேற்பட்ட பிரதிகளை கழித்துவிடுகிறார்கள்) பொதுவாக தனியாகச் சேகரித்து வைத்து அவர்களை நாடிவரும் பிற சிறிய நூலகங்களுக்கும் சனசமூக நிலைய நூலகங்களுக்கும் அவற்றை அன்பளிப்பாக வழங்கிவருகிறார்கள். அந்த நூல்களை இலவசமாகவே அவர்கள் வழங்குகின்றபோதிலும், அங்கிருந்து அவற்றை மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு எடுப்பிப்பதற்கான போக்குவரத்துச் செலவினை மட்டக்களப்பு மாநகரசபையினரே பொறுப்பேற்கவேண்டியிருக்கும். இன்றைய நிலையில் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகம், கொழும்பு மாநகரசபை நூலகம், யாழ்ப்பாணப் பொது நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் என்பவற்றை மாநகரசபை நூலகர் நேரில் அணுகி, நூல்களை தேர்வுசெய்து பெற்று, நூலகத்தின் சேர்க்கையினை குறைந்த பணச்செலவுடன் வளர்த்துக்கொள்ளமுடியும். 

நூலீட்டலில் மற்றுமொரு வழிமுறை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம், தமிழ் வாசகர் வட்டங்களிடம் தமது நூலகத்தில் இல்லாததும் தமக்கு வேண்டியதுமான நூல் தலைப்புகளை பட்டியலிட்டு வழங்கி அவர்கள் மூலம் கொள்வனவு செய்து அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்வதாகும். இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் கிழக்கின் மைந்தர்களை மட்டக்களப்பு மாநகரசபையினர் நேரடியாக அணுகி அவர்களின் மூலம் அன்பளிப்பாக நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்னோடியாக நூலகர் தமக்கென்றொரு விருப்புத் தேர்வுப் பட்டியலொன்றினை தயாரித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தயாரிப்புக்குத் தேவையான ஆதார நூல்களாக ஈழத்தின் தமிழ் நூல்களுக்கான பதிவாவணமாகத் திகழும் ‘நூல்தேட்டம்’ தொகுதிகளிலிருந்து தமக்குத் தேவையான ஈழத்து நூல்களைத் தேர்வு செய்யலாம். 15 தொகுதிகளில் 15000 ஈழத்துத் தமிழ் நூல்களை நூல்தேட்டம் குறிப்புரையுடன் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மேலும் குமரன் பதிப்பகம், பூபாலசிங்கம் புத்தகசாலை, சேமமடு புத்தக சாலை போன்ற பிரபல நூல் வெளியீட்டு விற்பனை நிறுவனங்களின் புத்தகப் பட்டியல்களையும், இணையத்தள விலைப்பட்டியல்களையும் பார்வையிட்டு முன்கூட்டியே நூலகத்தில் இல்லாத நூல்களை பட்டியலிட்டு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்பட்டியலில் நூலின் தலைப்பு, ஆசிரியர், வெளியிட்ட நிறுவனம், வெளியிட்ட ஆண்டு, விலை ஆகிய தகவல்களைக் குறித்துவரவேண்டும். தேவை ஏற்படும்போது இப்பட்டியலில் உள்ள நூல்களை அன்பளிப்பாளர்களின் மூலம் கொள்வனவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.  

நூலீட்டலில் மற்றுமொறு வழிமுறையாகக் கருதப்படுவது மட்டக்களப்பு பொதுநூலகத்தின் வளர்ச்சித் திட்டங்களை சுருக்கமாகக் குறிப்பிட்டு ஒரு சிறு கைநூலொன்றையும் நிதியுதவிகோரும் கடிதமொன்றையும் அச்சிட்டு மின்நூலாகவோ சிறு பிரசுரமாக அச்சிட்டோ, பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் மூலம் தமது உறவுகளை மட்டக்களப்பு பொது நூலக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் வண்ணம் கேட்கலாம்.  

சமூக ஊடகங்களில் மட்டக்களப்பு பொது நூலக நண்பர்கள் வட்டம் என்ற ஒன்றினை நிறுவி, நூலக அபிவிருத்திக் குழு, நூலக ஆலோசனைக் குழு ஆகியவற்றின் பங்கேற்புடன் மட்டக்களப்பு பொதுநூலக அபிவிருத்தி தெடர்பான செய்திகளைத் தெரிவிக்கும் அதே வேளையில் நூலீட்டலுக்கான ஆதரவை உலகத்தமிழர்களிடம் இணைய வழியில் கோரலாம். 

»»  (மேலும்)

குருக்கள்மட வீதி விபத்தில் ஒருவர் நிலை கவலைக்கிடம்

இன்று மாலை 3.45 (சற்றுமுன்னர்)அளவில் மட்டக்களப்பு கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 


மட்டக்களப்பில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருக்கள்மடம் அம்பிலாந்துறை சந்திக்கு அருகில் உள்ள தேவாலயத்துக்கு முன்பாக இவ் வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து கதுறுவல நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஆட்டோ ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் உடன் மோதுண்ட ஆட்டோவானது சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு கொழுவி இழுத்து செல்லப்பட்டுள்ளது.
ஆட்டோவில் பயணித்த தாயும் குழந்தையும் ஆட்டோ சாரதியும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிய முடிகின்றது.
»»  (மேலும்)

5/11/2021

வவுணதீவு பிரதேசத்தின் இரு பெரும் வீதிகள்

வவுணதீவுப் பிரதேசத்தின்  பாரம்பரிய  வீதிகள் இரண்டு மீள் புனரமைப்பு செய்ய ப்படவுள்ளன. 

கரவெட்டி-மகிழவட்டவான் வீதி, ஆயித்தியமலை -மகிழவட்டவான் வீதி போன்றவையே  மேற்படி புனரமைப்பு செய்யப்படவுள்ள இருபெரும் வீதிகளாகும்.

இவ்வீதிக்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வானது  பா.உ. சி.சந்திரகாந்தன் தலைமையில் விரைவில் இடம்பெறவுள்ளது.

அதிகப்படியாக வாக்களித்த வவுணதீவுப் பிரதேச மக்களுக்காக  கௌரவ பா.உ. சி.சந்திரகாந்தன் அவர்கள் மேற்கொண்ட அயராத முன்னெடுப்பின் பலனாக  இவ்வீதி அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளன.»»  (மேலும்)

5/06/2021

டெலோ மீதான படுகொலை


வரலாற்றில் கறை படிந்த நாள்
———————————
சிறீ சபாரத்தினமும் அவரது அமைப்பைச் சேர்ந்த முன்நூறுக்கும் அதிகமான தோழர்கள் சுட்டும் சரண்டைந்தபின் உயிரோடு கொல்லப்பட்ட நாள் இன்று.புலிகளின் கோரமுகங்களை பற்களை உலகம் கண்ட நாள் இன்று.

1983 யூலையில் வெலிக்கடை சிறையில் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது இலங்கை அரசையும் இராணுவத்தையும் விமர்சனம் செய்த தமிழர்கள் வீதி வீதியாக சொந்த சகோதரங்களை படுகொலை செய்தபோது வேடிக்கை பார்த்தார்கள். இதைவிட ஒரு கூட்டம் கொலையாளிகளுக்கு குளிர் பானங்களும் புரியாணிகளும் கொடுத்த வரவேற்றார்கள்.

இன ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு எப்படியாவது இதற்கு எதிராக போராடவேண்டும் என்ற எண்ணத்தோடு எந்த அமைப்பு என்ற பேதம் பாராமல் ஆயுதம் ஏந்திய இளைஞர்களை கொலை வெறிகொண்ட புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நாளை தமிழர்கள் மறந்து கடந்தே செல்கிறார்கள்.

இனக் கலவரங்களையும் வெலிக்கடைப் படுகொலைகளையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் சகோதரப் படுகொலைகளை நினைவு கூருவதே இல்லை.இந்தப் படுகொலையோடு சம்பந்தப்பட்ட திலீபன் கிட்டு போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நிற்பவர்கள் இந்தக் கொலையாளிகளால் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான கிழக்கு மாகாண இளைஞர்களை நினைவு கூருவதில்லை.

இதில் கொலையாளியான திலீபனை அகிம்சாவாதியாக கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்த செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் பிரேமச்சந்திரன் சித்தார்த்தன் போன்றோர் வரிசையில் நிற்பது மகா கேவலமான அரசியலாகும்.இந்தப் படுகொலைகளைப் பற்றி வாய் திறப்பதும் இல்லை.அராஜகங்கள் யார் செய்தாலும் தவறுதான்.

இலங்கை அரசால் இராணுவத்தால் பலர் கொல்லப்பட்ட போதும் அதிகமானவர்களை கொல்லாமல் சிறையில் வைத்திருந்தார்கள்.இறுதிப்போரில் சரண்டைந்த 12000 பேரை கைது செய்து பின்னர் விடுதலை செய்தார்கள்.ஆனால் புலிகளிடம் சரண்டைந்த சக அமைப்பு உறுப்பினர்கள் இராணுவம் அத்தனை பேரையும் சித்திரவதை செய்தே கொன்றார்கள்.

அப்படிப்பட்ட கொலைக் கும்பல்களை தியாகிகளாக போராளிகளாக கொண்டாடும் தமிழர்கள் அரசியல்வாதிகள் ஏன் முன்னாள் ரெலோ உறுப்பினர்கள்கூட இந்தப் படுகொலைகளை மறந்து விட்டார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரை புலிகளின் உயிர்களைவிட ஏனையவர்களின் உயிர்களை உயிராக மதிப்பது இல்லை.அதன் அடையாளமே இந்தக் கொலைகளை நினைவுகூராமல் கடந்தே போகிறார்கள்

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சொந்த தமிழ் சகோதர்ர்களுக்கு எனது அஞ்சலிகளை தெரிவிக்கிறேன்.

செல்வம் அடைக்கலநாதன் என்ன சொல்லப்போகிறார்?

நன்றிகள் தோழர் *vijaya baskaran
»»  (மேலும்)

5/04/2021

வாழைச்சேனை நீதிமன்றம் நாவலடிக்கு


"இடம் மாறும் நீதிமன்றமும் சாமானியர்களின் சாபக்கேடும்"......... 

வாழைச்சேனை மக்களுக்காக நீண்ட காலமாக நீண்ட காலமாக இயங்கி வந்த நீதிமன்றம் திடீரென மட்டக்களப்பு மாவட்ட கொழும்பு வீதி எல்லை பகுதியில் உள்ள நாவலடி பிரதேசத்திற்கு இடம் மாற்றப்படுவதற்கான ரகசிய முயற்சிகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகின்றது. 

தேசியம் பேசும் தேசியவாதிகள் ஆகட்டும் அபிவிருத்தி பேசும் அபிவிருத்தி சார்ந்த அரசியல்வாதி ஆகட்டும் சற்று வாழைச்சேனை பக்கம் உங்கள் கண்களை திருப்புங்கள், காரணம் கடந்த காலங்களில் பிரதான வீதி வாழைச்சேனையில் இயங்கிவந்த நீதிமன்ற வளாகம் மிக விரைவில் நாவலடி பிரதேசத்துக்கு மாற்றப்பட்டால்  பொதுமக்கள் பெரும் பயணச் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இவ்விடயத்தில் மட்டக்களப்பு குறிப்பாக வாழைச்சேனை பிரதேச பொது நிறுவனங்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக கவனம் செலுத்தி வாழைச்சேனையிலிருந்து இடமாற்றப் படவிருக்கும் நீதிமன்றத்தை காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.

»»  (மேலும்)

பிள்ளையான் பாணியில் சிறையில் இருந்து தேர்தலில் வென்றவர்

சிறைக்குள் இருந்தும், மோடியை எதிர்த்து ஒரு தேர்தல் வெற்றி!

சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப் பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் துவங்கிய ரைஜோர் தள கட்சியின் சார்பாக சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்டார் அகில் கோகாய்.

பிள்ளையானுக்கு பிரதமர் ரணில் ஆளனுப்பி நேரம் பேசியது போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக பிணை வழங்குவோம் என்றும், பா.ஜ.க-வில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க அமைச்சராகலாம் என்று ஆசைகாட்டப்பட்டார். ஆனாலும் அவர் உறுதி தளரவில்லை.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 57,173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அகில் கோகாய். 

பிள்ளையானுக் எதிராக சுமந்திரனும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தரும் பரப்புரை செய்துதபோல்  பிரதமர் மோடியே அதில் கோகாய்க்கு எதிராக தேர்தல் பரப்புரை செய்த நிலையில், அகில் கோகாய் சிறையிலிருந்து கொண்டே

ஒருநாள் கூட நேரடியாக பரப்புரை செய்யாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.

»»  (மேலும்)

5/03/2021

இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

இந்திய மாநிலத் தேர்தல் முடிவுகள்


இந்தியாவின் 5 மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகியவற்றுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தபடியே முடிவுகள் அமைந்துள்ளன.

இந்த 5 மாநிலங்களில் அசாமில் மட்டுமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் தனது ஆட்சியைத் தக்க வைக்க முடிந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் இம்முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தபோதிலும், அதனால் ஒரு குறிப்பிடத்தக்களவு தொகுதிகளைக்கூடப் பெற முடியவில்லை. தமிழ்நாடு மற்றும் கேரளா போலவே மேற்கு வங்கமும் தேசிய உணர்விலும் முற்போக்கு சிந்தனையிலும் ஊறித்திளைத்த ஒரு மாநிலம் என்றபடியால் தீவிர மதச்சார்பும், அமெரிக்க சார்பும், கோப்பரேட்டுகளுக்கான ஆதரவும் கொண்ட பா.ஜ.க.வால் அங்கு வெற்றிபெற முடியவில்லை.

பா.ஜ.க.வால் மேற்கு வங்கம், கேரளா, தமிழநாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தன்னும் வெற்றிபெற முடியாமல் போனமைக்கு இன்னொரு காரணம் இந்த மூன்று மாநிலங்களும் ஒப்பீட்டு வகையில் இந்தியாவிலேயே கல்வி கற்றவர்கள் அதிகம் வாழும் மாநிலங்களாகும்.

அத்துடன், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொவிட் - 19 தொற்றுக்கெதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறியமையும், டில்லியில் போராடும் விவசாயிகளை ஊதாசீனப்படுத்தி வருவதும், இந்தி மொழியைத் திணிக்க முயல்வதும், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க முயல்வதும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களைப் புறக்கணிப்பதும், மதச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையும் பா.ஜ.க.வை மக்கள் நிராகரித்தமைக்கான ஏனைய காரணங்களாகும்.

கேரளாவைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் ஆட்சியைப் பிடித்து 40 வருட பாரம்பரியத்தை முறியடித்துள்ளது. அல்லது வழமையாக இடது முன்னணியும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முன்னணியுமே அங்கு மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழமை. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு மேற்கொண்ட மக்கள் சார்பு நடவடிக்கைகளுக்கான ஒரு அங்கீகாரமாகவே இதைப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10 வருடங்களின் பின்னர் கருணாநிதி இல்லாத தி.மு.க. அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னர் ஆட்சியில் இருந்த அ.தி.மு.கவின் செயல் தினற்ற, ஊழல் மிகுந்த ஆட்சியில் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்ததும், இம்முறை தேர்தலில் அது மதச்சார்புள்ள பா.ஜ.க. உடன் அமைத்துப் போட்டியிட்டதுமே அ.தி.மு.க.வின் தோல்விக்கான பிரதான காரணங்களாகும்.

அதேநேரத்தில் ஸ்டாலின் தலைமையில் அமையப்போகும் தி.மு.க. ஆட்சி கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றும் உள்ளது. கடந்த காலங்களில் கருணாநிதியின் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சிகள் ஊழல் மிகுந்தவை என்ற அபிப்பிராயம் தமிழக மக்கள் மத்தியிலே உண்டு. எனவே இம்முறை மக்கள் தந்த அங்கீகாரம் முற்றுமுழுதாக தி.மு.க. மேல் ஏற்பட்ட பாசத்தினாலும் நம்பிக்கையாலும் ஏற்பட்டது அல்ல, அது அ.தி.மு.க. ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்பினால் என்பதை ஆட்சி அமைக்க இருக்கும் தி.மு.க. தலைமை கவனத்தில் எடுத்து மக்களுக்கு ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதில் கவனமாக இருப்பது முக்கியமானது.

மொத்தத்தில் இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க.வுக்கு ஒரு பின்னடைவு என்ற போதிலும், அதன் தலைமையிலான வலதுசாரி பாசிஸ சக்திகள் இன்னமும் பலமாகவே இருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

நன்றிகள் தோழர் மணியம்
»»  (மேலும்)

விபுலானந்தர் பிறந்த தினம்

சுவாமி விபுலாநந்த அடிகளார் அவர்களின் 129 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்திய தருணம்.

மட்டக்களப்பு காரைதீவு மண்ணில் பிறந்த சுவாமி விபுலானந்தர் தமிழுக்கும், தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கியத்துக்கும் அளப்பரிய தொண்டாற்றியவர். அத்துடன் பல பாடசாலைகள் உருவாகுவதற்கும் வித்திட்டவர். பல தமிழ் இலக்கிய நூல்களையும் தமிழின் செம்மையினையும் உலகறியச் செய்து கல்வி வரலாற்றில் புதியதோர் தடம் பதித்து இறந்தும் இறவாமல் உலக தமிழர் மனதில் வாழும் பெருந்தகை ஆவார்.

அன்னாரின் 129 வது ஆண்டு பிறந்த

தினமாகிய இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக கட்சி முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் அன்னாரது சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.»»  (மேலும்)

ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் அபார வெற்றி பெற்றார்


பெரும்பாலானவர்கள் நல்ல காரியங்கள் எதையும் தொடங்கும்போது சுபவேளை பார்ப்பது வழமை.
ஆனால் அக்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதில்லை.
அதேபோல சுபநேரம் பார்க்காமல் நல்ல காரியங்களை தொடங்குபவர்கள் அனைவரும் தோல்வி அடைவதும் இல்லை.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராகு காலத்தில் விருப்ப மனு கொடுத்து, எமகண்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து, பரப்புரைப் பயணத்தைத் துவங்கினார் ஒருவர்.

இதனூடாக மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெரிந்துவிட்டு இன்று மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கின்றார். அவர்தான் பகுத்தறிவுச் சுடர்-டாக்டர் எழிலன்.
»»  (மேலும்)

தமிழ் நாடு முதலமைச்சருக்கு சந்திரகாந்தன் வாழ்த்துச்செய்தி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான  மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருப்பதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.  இவ்வெற்றியின் பயனாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கும்  கெளரவ.மு.க.ஸ்டாலின் ஆகிய தங்களுக்கு கிழக்கிலங்கையில்  இருந்து 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும் சமூக நீதிக்காகவும் அயராது உழைத்து வரும் திராவிட அரசியல் பாரம்பரியத்தை மென்மேலும் வலுப்பெறச் செய்ய தங்கள் ஆட்சி வழிவகுக்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

அதேபோல ஈழத்தமிழரின் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தங்களால் ஆன சகல முயற்சிகளையும் காத்திரமான பங்களிப்பினையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில்  வழங்குவீர்கள் என நம்புகின்றோம்.

சிவனேசதுரை சந்திரகாந்தன்
(தலைவர்-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்)
»»  (மேலும்)

4/30/2021

மே தின வாழ்த்து

மே தின வாழ்த்துச் செய்தி

இன்று உலக தொழிலாளர் தினம். உலகிலுள்ள தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிய நினைவுகளை உயர்த்திப் பிடிக்கும் நாள். 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  ஐரோப்பா, ஆஸ்திரேலியா,
அமெரிக்கா, ரஷ்யா என்று பல தேசங்களிலும் ஆடை மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள் சார்ந்து பெரும் முதலாளிகள் உருவாகத் தொடங்கினர்.

இந்த முதலாளிகள்  கூலித் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து ஈவிரக்கமற்ற  முறையில் வேலை வாங்கினர். நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொழிற்சாலைகளில் மக்கள் அடிமைகளாக வேலை செய்ய வேண்டி இருந்தது.

இந்நிலைமையை மாற்றுவதற்காக தொழிலாளர்கள் நடத்திய பல்வேறுபட்ட போராட்டங்களின் விளைவாகவே நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை இவ்வுலகம் படிப்படியாக ஏற்றுக்கொண்டது.

இந்த உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் கைதுகளும் சிறைக் கொடுமைகளும் உயிரிழப்புகளும் சொல்லிமாளாதவை.
அந்த நினைவுகளை முன்வைத்தே மே முதல் நாளை தொழிலாளர் தினமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்.

அவைகளெல்லாம்  கடந்த நூற்றாண்டு கதைகள். ஆனால் இன்றும் கூட நமது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவது முடிந்த பாடில்லை. எமது மாகாணத்தை எடுத்துப்பாருங்கள் இங்கே நிறைந்து வாழும் விவசாயிகளும், மீனவர்களும் நாளும் பொழுதும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போகின்றனர். எப்படித்தான் உழைத்தாலும் ஏழ்மை அவர்களை விட்டு தொலைந்தபாடில்லை.

இதற்கு காரணமென்ன? சுரண்டல், சுரண்டல். ஆம் மூலதனத்தை கையிலே வைத்திருக்கும் முதலாளிகள் எமது மக்களின் உழைப்பை வியாபாரம் 
எனும் பெயரில் உறுஞ்சிக்கொண்டிருக்கின்றார்கள்.

அது மீனாக இருக்கலாம்.நெல்லாக இருக்கலாம். வெள்ளரிக்காயாக இருக்கலாம். வத்தவை பழமாக இருக்கலாம். கஜுவாக இருக்கலாம்.
ஆடு மாடு கோழியாக கூட இருக்கலாம். அனைத்திலும் கொள்ளை இலாபம் தலைவிரித்தாடுகிறது.

வியாபாரம் என்பது எமது மக்களின் கையில் இல்லை. இவை குறித்தெல்லாம் நாம் தீவிரமாக கவனம் கொண்டுள்ளோம். உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் லட்சியம்.

இந்த மே தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடவும் மாபெரும் மேதின ஊர்வலம் ஒன்றை மட்டக்களப்பில் நடாத்தி முதலாளிகளின் சுரண்டல் குறித்து உழைப்பாள வர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கவும் நாம் திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து விடும் என்ற காரணத்தினால் அது சாத்தியமாகவில்லை.


ஆனபோதிலும்  உழைக்கும் மக்களாகிய உங்களனைவரதும் மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்வுக்காக எமது கட்சி என்றும் ஓயாது பயணிக்குமென்று உறுதி கூறுவதோடு உழைக்கும் மக்களாகிய உங்களனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிவ.சந்திரகாந்தன்
தலைவர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
»»  (மேலும்)

தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிராக போராடி கைதான பெண்கள் பிணையில் விடுதலை
 ஐயங்கேணி கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மக்கள் குடியிருப்பிற்கு மத்தியில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பிரதேசவாசிகள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக நான்கு பெண்களும் ஒரு ஆணும் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் பிரபல சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்களுடைய தன்னார்வ  தலையீட்டுடன் நீதிமன்றத்தில் அந்த ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

4/25/2021

மன்றத்தில் தூங்குவது யார்


பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பான புள்ளிவிபர தகவல் தொடர்பில் கடைசி பத்து இடங்கள் தொடர்பில் கலாய்த்துக் கொண்டிருக்கும் எம்மவர்க்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தனிநபர் பிரேரணைகள், பிரதம மந்திரியுடனான கேள்விகள், மனுக்கள், வாய் மொழி மூல விவாதங்கள் (சட்டமூலம், உத்தரவு, தீர்மானங்கள் தொடர்பில்) ,எழுத்துமூல வினாக்கள், எழுத்து மூல வினாக்களுக்கான பதில் போன்ற செயற்பாடுகளில் எத்தனை தடைவைகள் ஈடுபடுகின்றனர் என்பதை மதிப்பிட்டு இப்புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றது...

இன்னிலையில்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் இறுதி பத்து இடங்களுக்குள் தெரிவாகி உள்ளார்.
இதனை சாட்டாக வைத்து பிள்ளையானுடைய பாராளுமன்ற செயற்பாடுகள் செயலூக்கம் அற்றவை என்று நிரூபிக்க பலர் தலையால் மண் கிண்ட முனைகின்றனர்.

பல பத்து வருடங்களாக பாராளுமன்றத்தில் தூங்கி வழியும் சம்பந்தன் சித்தார்த்தன் போன்றோரது அசட்டுத்தனங்களை இதன் மூலம் சரிசெய்வது அவர்களது நோக்கம் ஆகும்.
அடுத்தது பிள்ளையானது செயலூக்கம், இயங்கு திறன் போன்றவற்றை குறைவாக சித்தரிக்க முனைகின்றனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற போது சிறையில் இருந்து பிள்ளையான் முதலாவது அமவுர்க்கு கலந்து கொண்டார்.

அதன் பின்னர் கொராணா காரணமாக சிறையில் அதிகமான தொற்று பரவல் காணப்பட்டது. அதன் காரணமாக சிறையிலிருந்து பிள்ளையானுக்கு பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

2021  ஜனவரி மாதம் 13ம் திகதியன்று பிள்ளையான் வழக்கிலிருந்து விடுதலையான பின்னர்தான் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளுக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அதிக அமர்வுகளை அவர் தவற விட நேர்ந்தது. அவ்வேளைகளில் இடம்பெற்ற விவாதங்கள் உரையாடல்கள் பிரேரணைகள் அனைத்திலும் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதை ஒட்டிய செயற்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு பிள்ளையானின் செயல் ஊக்கத்தை குறைத்து மதிப்பிட முனைவதன் பின்னணி அவர் மீதான காழ்புணர்ச்சி அன்றி வேறில்லை. 

பிள்ளையானின் செயலூக்கமும் இயங்குதிறனும் ஊரறியும் உலகறியும்.


»»  (மேலும்)