3/13/2013

| |

தனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு உதவிய டென்மார் மண்ணின் மைந்தன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களைக்கொண்டுள்ள பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் புலம்பெயர் இளைஞனின் உதவியினால் கணணி வள நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரும் பட்டிப்பளை பிரதேச ஹிந்தோ அமைப்பின் தலைவருமான வி.கமல்தாஸால் இந்நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் கணணி வள நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக டென்மார்க் நாட்டில் வசிக்கும் ஜீவநீதன் எனும் 18 வயது இளைஞன் தனது பிறந்த நாள் ஞாபகார்த்தமாக அந்நாட்டின்  உலக சிறுவர் காப்பகம் ஊடாக ஒருதொகுதி கணணிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.
இந் நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக மாதாந்த புலமைப்பரிசில் உதவிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் சர்வதேசத்தில் சமாதானத்தின் சின்னமான ஒலிவ் மரத்திற்கு இணையான எமது நாட்டின் தேசிய மரமான இலுப்பை மரங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் சோலைகளாக வளர்க்க வேண்டும். இதன் மூலமாக எதிர்கால சந்ததிகளுக்கு புதிய பொருளாதாரம் உருவாக வேண்டும் என்ற நோக்கோடு இலுப்பை மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
அந்த வகையில் வருடம் தோறும் ஒவ்வொரு குடும்பமும் மகளிர் தினம் போன்ற முக்கிய தினங்களில் ஒவ்வொரு இலுப்பை மரக் கன்றை நடவேண்டும் என்ற வகையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுவதாக வி.கமல்தாஸ் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக இந்த இலுப்பை மரக்கன்றுகளை போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரது குடும்பத்தினர் உற்பத்தி செய்து  அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், சக்தி மகளிர் இல்ல நிருவாகிகள், பட்டிப்பளை பிரதேச உள்ளுர் நிறுவனங்களின் பிரதி நிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.