3/27/2013

| |

மட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களின் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை திவிநெகும திட்டத்தின் ஊடாக சுயதொழில் ஊக்குவிப்பினை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
இத்திட்டத்தினை அமுல்படுத்தவது தொடர்பான விஷேட கூட்டம் வாழைச்சேனை மற்றும் வாகரை பிரதேச செயலகங்களில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினறுமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பட்டதாரி பயிலுனர்கள், கிராமசேவை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.
தும்புத் தொழில், பாதணிகள் தயாரித்தல், மட்பாண்ட பொருட்கள், பனம் பொருட்கள், மெழுகுதிரி தயாரித்தல், மீன்பிடி, பண் வேலைகள் போன்ற சுய தொழில்களில் ஈடுபடுகின்ற மக்களை அடையாளம் கண்டு அவர்களை அத்துறையில் ஊக்கப்படுத்துவதற்கான திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இச்சுயதொழில்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சுயதொழிலில் ஈடுபடுகின்ற வீடுகளுக்குச் சென்ற பட்டதாரி பயிலுனர்கள் இது குறித்து தகவல்களைப் பெற்று பிரதேச செயலகங்களில் ஒப்படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான தொழிலாக கருதப்படுகின்ற வேலாண்மைச் செய்கை தொடர்ச்சியாக பெய்கின்ற மழை காரணமாக பாதிக்கப்படுவதையிட்டு இதற்கு மாற்றுத் தொழிலாக மேற்படி சுய தொழில்களை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதற்கு இணங்க மக்களின் இச்சுயதொழில்கள் ஊக்கப்படுத்தப்பட்டு மக்களின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினறுமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இக்கூட்டங்களில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.தினேஸ், வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்ள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.