3/28/2013

| |

ஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்தவேண்டும்- தமிழக சட்டப்பேரவை

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று புதன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் இன்றைய தீர்மானம் வலியுறுத்துகிறது.தீர்மானத்தினை முன்மொழிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழுணர்வாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்ற நிலையில், தமிழக மாணவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து, நடத்திவரும் தங்கள் அறப் போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்றும் கோரினார்.

முன்னதாக இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் அதன் தொடர்பான மாணவர் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் பேசினர்.

திமுக மீது ஜெயலலிதா சாடல்


விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா திமுக இப்பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

டெசோ அமைப்பிற்கு புத்துயிரூட்டியுள்ள கருணாநிதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கூறும் அவர், அவரது தமக்கை மகன் மறைந்த முரசொலி மாறன் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் சன் குழுமத்திற்குச் சொந்தமான ஐபிஎல் அணி, சன் ரைசர்ஸில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து மௌனம் சாதிக்கிறார் என்றார்.

ஆனால் தான் எப்போதுமே உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுத்துவருவதாகக்கூறிய அவர், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தியதையும், இந்தியாவில் எங்குமே அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியதையும், இலங்கையர் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதையும், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்த அனுமதி மறுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

அவ்வாறான தனது நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மாணவர் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.