4/01/2013

| |

மட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4 பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் உள்ள முகத்துவாரம் கடற் பகுதியில் குறித்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை அதிபர்,மாணவர்கள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
கடலில் மூழ்கி பலியான நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் சுற்றலாவை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வந்துள்ளனர்.இவர் நாவலடி பிரதேசத்தில் உள்ள முகத்துவாரம் கடற் பகுதியில் குறித்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் அலையினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
அப்போது அந்த மாணவனை காப்பாற்றுவதற்காக பாடசாலை அதிபர் கடலில் பாய்ந்துள்ள நிலையில் இருவரையும் காப்பாற்ற மேலும் இரு மாணவர்கள் பாய்ந்துள்ளனர்.இதன்போது நான்கு பேரும் உயிரிழந்துள்ள நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் அதிபரான கந்தசாமி பிரதாபன் (வயது 40), மாணவர்களான போல்ராஜ் போல்சான் (வயது 17), பாலசுப்ரமணியம் அபேசன் (வயது 17, கனகசபை சுதர்சன் (வயது 16) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.