4/18/2013

| |

டெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15 பேர் வரை உயிரிழப்பு

தீயை அடுத்து வெடிச் சம்பவம் நிகழ்ந்தது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேக்கோ என்ற ஊர் அருகே உரத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து நடந்த பெரிய வெடிச் சம்பவத்தில் 5 முதல் 15 பேர் வரையிலானவர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருக்கின்றனர்.
அணுகுண்டு வெடித்தால் எழக்கூடிய விதமாக வெடிச் சம்பவத்தை அடுத்து காளான் குடை வடிவத்தில் புகை மூண்டது என இந்த தொழிற்சாலை அமைந்துள்ள வெஸ்ட் என்ற சிற்றூரின் மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு குற்றச்செயல் எதுவும் காரணமாக இருந்திருப்பதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை என பொலிசார் கூறுகின்றனர்.
தொழிற்சாலைக்கு அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேடிப் பார்த்துவருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் பெருமளவிலே அழிக்கப்பட்டுள்ளதாகவும், அருகிலிருந்த சுமார் எழுபத்தைந்து வீடுகளும், சுகாதார மையம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் அவசர உதவி சேவைப் பிரிவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.