4/12/2013

| |

வீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு போராளிகளுக்கு வன்னிப் புலிகள் கொடுத்த பரிசு வெருகல் படுகொலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் பல வரலாற்று வீரச்சமர்களுக்கும் சரித்திர வெற்றிகளுக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. வரலாற்றின் கதாநாயகர்கள் கிழக்குப் போராளிகளே. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் கிழக்குப் பொராளிகளே. சரித்தர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை தேடிந்த பெருமை கிழக்குப் போராளிகளையே சேரும். புலிகள் அமைப்பு வலுவான ஒரு அமைப்பாக அருப்பதற்கு தூண்களாக இருந்தவர்கள் கிழக்குப் போராளிகளே.

கிழக்குப் போராளிகள் வீர வரலாறு படைத்த சரித்திரங்களை எழுதுவதென்றால் எழுதிக் கொண்டே போகலாம். வரலாற்று வெற்றிகளைப் படைத்த கிழக்கு மண் ஈன்றெடுத்த போராளிகளின் வரலாறுகள் சாதனைகள் மறைக்கப்படுவது ஒரு புறமிருக்க. தமிழீழமே எமது மூச்சு என்று தமது சொந்தங்கள் பந்தங்கள் சொத்து சுகங்களை இழந்து போராடப் புறப்பட்ட கிழக்குப் பொராளிகளை வன்னிப் புலிகள் கொன்றொழித்த வரலாறுகளும் இருக்கின்றன.

கடந்த வருடங்களுக்கு முன்னர் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோது கிழக்குப் போராளிகளும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தனர். அவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை நிம்மதியான வாழ்க்கையை விரும்பியிருந்தனர். ஆனாலும் அவர்கள் புலிகள் அமைப்பிலிருந்தபோது பல வெற்றிச் சமர்களை புரிந்து வீர வரலாறு படைத்தவர்கள்.

புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து யுத்தம் வேண்டாம் ஆயுதக் கலாச்சாரம் வேண்டாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று இருந்த கிழக்குப் போராளிகளுக்கும் கிழக்கு மக்களுக்கும் புலிகள் பேரிடியினைக் கொடுத்தனர். தமது அமைப்புக்காகவே போராடி பல சரித்திர வெற்றிகளை நிலைநாட்டி வீர வரலாறு படைத்த ஒன்றாக உணவருந்தி ஒன்றாகவே படுத்துறங்கிய தமது சகோதர போராளிகளை கொன்றொழிக்க புலிகள் அமைப்பு திட்டமிட்டது.

அவர்களின் திட்டங்களை சாதித்தும் காட்டினார்கள் ஏப்ரல் 10 அன்று வெருகலில் கிழக்குப் போராளிகளை நோக்கி தமது துப்பாக்கிகளை நீட்டினர். வெறுமனே துப்பாக்கிகளோடு மட்டும் நின்றுவிடாமல் பல சித்திரவதைகளையும்செய்தனர். அன்று அவர்கள் வெருகலில் நிராயுதபணிகளாக இருந்த போராளிகளை கொலை செய்தது மட்டுமல்லாமல் பெண் போராளிகளை சொல்லொண்ணா சித்திரவதை செய்ததுடன் பலாத்காரப் படுத்தியும் கொலை செய்தனர்.  இது ஒரு புறமிருக்க மறு புறத்தில் வன்னியிலே இருந்த கிழக்குப் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டமை வேறுகதை. இவ் வெருகல் படுகொலையில் 210 க்கு மேற்பட்ட கிழக்குப் போராளிகளை கொன்று குவித்தனர்.

புலிகள் அமைப்பு தமது கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் தம்மோடு ஒன்றாக இருந்து பல சரித்திர வெற்றிகளை பெற்றுத்தந்த போராளிகளை இவ்வாறு கொடுரமாக கொன்று குவிப்பார்கள் என்று எவரும் எண்ணிப்பார்க்கவில்லை.

இன்று கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றதென்றால் அது அன்று கிழக்குப் போராளிகளின் வெருகலில் சிந்திய குருதியும் அவர்களின் உயிர்தியாகங்களுமாகும். கிழக்கு மாகாணத்துக்காக அன்று வெருகலில் உயிர் நீத்த கிழக்குப் போராளிகளின் நினைவு தினமாகிய இன்றைய நாளில் அன்று உயிர் நீத்த அந்தப் போராளிகளின் கனவுகளை நோக்கிப் பயணிக்க நாம் சபதம் எடுப்போம்.