4/17/2013

| |

இரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்கவில்லை இன்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு முஸ்லிம்களை பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. அன்று முஸ்லிம்கள் இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட போது மெளனம் சாதித்த சம்பந்தனும் அவரது கட்சியினரும் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் உரையின் முக்கிய அம்சங்களை இங்கு தருகின்றோம்.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி நாம் நாட்டை முன்னேற்றப் பாதையில் வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக சில தீய சக்திகள், சதிகாரர்கள், கொடியவர்கள் ஒன்றிணைந்து நாளாந்தம் நாட்டுக்கு அகெளரவத்தை ஏற்படுத்தக் கூடிய முறையில் நடந்து கொள்கிறார்கள். இந்து சமுத்திரத்தின் முத்து என்று பாராட்டப்படும் எங்கள் சிறிய நாடு 30 ஆண்டுகால கொடிய யுத்தத்தில் பல்வேறு இழப்புக்களை பேய்களைப் போல் செயற்படும் எதிரிகளால் துன்பங்களை அனுபவித்த பின்னர் இன்று தலை நிமிர்ந்து நிற்க எத்தனிக்கிறோம்.
எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். ஜனாதிபதி அவர்களும் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கள் நாட்டில் வளமாக மகிழ்ச்சிக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு தங்களால் ஆன சகல முயற்சிகளையும் எடுத்துவருகிறார்கள்.
எங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை நாம் வேறு சக்திகளின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள் என்பதனால் நாம் தேசத்துரோகிகள் என்றே அழைக்க வேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் பேசினார்.  அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைக்கின்றது. இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு சிறந்த இடமாக பாராளுமன்ற தெரிவிக்குழுவே அமைந்துள்ளது. ஜனாதிபதி அவர்களோ, அரசாங்கமோ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் ஈ.பி.டீ.பி போன்ற ஏனைய தமிழ் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு வாய்ப்புண்டு.
முஸ்லிம்களும் இதனை எதிர்ப்பார்கள். அரசாங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேசினால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லது மக்கள் காங்கிரஸ் கெளரவ அதாஉல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் அதனை எதிர்க்கும்.
இந்த சகல சக்திகளும் அரசியல் கட்சிகளும் பல்வேறு சமூகங்களையும், இன ரீதியிலான குழுக்களையும், மொழிகளையும் இந்த பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றன. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு யதார்த்தமான தீர்வை நாட்டு மக்கள் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க முடியும். இதன் மூலமே எங்கள் அபிலாஷைகளும் பிரார்த்தனைகளும் நாட்டுக்கு நிறைவு பெறும்.
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று கூறினால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும். இவர்கள் காவடி தூக்கிக் கொண்டு தமிழ் நாட்டுக்குச் செல்கின்றார்கள், ஜெனீவாவுக்குச் செல்கின்றார்கள், அமெரிக்காவுக்குச் செல்கின்றார்கள், நோர்வேக்குச் செல்கின்றார்கள், சேர் நான் உங்களிடத்தில் ஒரு எளிதான கேள்வியைக் கேட்கிறேன். நீங்கள் இந்த நாட்டிலே பிறந்தவர், இந்த நாட்டிலுள்ள நீரைக் குடிப்பவர், இந்த நாட்டிலே விளைகின்ற சோற்றைச் சாப்பிடுகின்றவர், இந்த நாட்டிலே வீசுகின்ற தென்றலைச் சுவாசிக்கின்றவர் ஆகையால் இந்த நாட்டிலே பிறந்த நீங்கள் இந்த நாட்டிலே மறைவீர்கள். நானும் ஒரு முஸ்லிம் என்ற வகையிலே அப்படித்தான். நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை அங்கே போய்ச் சொல்வதன் மூலம் அவர்களால் என்ன ஈட்டிக் கொள்ள முடியும்?
கெளரவ சம்பந்தன் இங்கு முஸ்லிம்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார். இதனை நாம் கபட நாடகம் என்றே அழைப்போம். இவர் முஸ்லிம் உலகத்திற்கும், புலம் பெயர்ந்த மக்களுக்கும் தன்னைவிட வேறுயாரும் இல்லை என்பதை வெளிப்படுத்த எத்தனிக்கிறார்.
இந்தப் பணிக்காக அவருக்கு ஒரு கிரீடத்தை தலையில் சூட்டவேண்டும். ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இரவோடு -விரி!8 யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர்கள் ஆவர்.
அந்தப் பூமியில் இருந்தே பெரும் கல்விமான்களான ஏ.எம்.ஏ.அkஸ், உயர்நீதிமன்றத்தின் பிரபல நீதிபதியான அல்ஹாஜ் எம்.எம். அப்துல் காதர், முதலாவது முஸ்லிம் மேயர் காசி எம்.எம்.சுல்தான் போன்றவர்களை இந்த பூமியே எங்களுக்கு பெற்றுக் கொடுத்தது.
அவர்களைப் பற்றி சம்பந்தன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்று பார்வையாளர் கலரியில் இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். இந்தியா இலங்கையில் 50,000 வீடுகளை அமைக்க முன்வந்தது. இதில் ஒரு வீட்டையாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு கொடுக்க தயாராக இல்லை. இந்த வீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் பிறந்த பூமியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதற்கு செய்யும் பிரதி உபகாரமாக இது அமையும்.
அவர்களே இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் பாதிக்கப்பட்டார்களே ஒழிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்படவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் எல்.ரி.ரி.ஈக்கும் இடையிலான யுத்தம் வேரொரு பிரச்சினை. ஆனால், முஸ்லிம்கள் வடபகுதியில் இருந்து விரட்டியடிக்கப் பட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் புத்தளத்திலும் ஏனைய அகதி முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்து நிலைமை எங்களுக்கு நன்கு தெரியும். கெளரவ சூரியப்பெருமவுக்கும் நன்கு தெரியும். யாழ்ப்பாணத்து தமிழர்களுக்கு யார் உதவி செய்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பா அவர்களுக்கு உதவி செய்கிறது? இல்லவே இல்லை. கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களே உதவி செய்கிறார்.
அங்குள்ள மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியுடைய வர்களாக இருக்கிறார்கள். அமைச்சர் கூரைத் தகடுகளை அவர்களுக்கு விநியோகிக்கிறார். அந்த மக்களுக்காக அவர் வீடுகளைக் கட்டுகிறார். அவர் அங்கு வீடமைப்புத் திட்டங்களையும் தொழில்நுட்ப நிலையங்களையும் ஏற்படுத்துகிறார். அவர் அடிக்கடி முஸ்லிம்கள் வாழும் மூர் வீதிக்குச் செல்கிறார்.
விரைவில் ஒஸ்மானியாக் கல்லூரி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் போது நான் அக்கல்லூரியின் சார்பில் ஒரு முத்திரையை வெளியிட வேண்டுமென கெளரவ தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்தேன். இக்கல்லூரி வடபகுதியில் உள்ள சிறந்த கல்லூரியாகும்.
அது போன்று கதீஜா மகளிர் கல்லூரியும் ஒரு சிறந்த கல்விக்கூடமாகும். கிழக்கு மாகாணத்தின் மருதமுனையில் அல் மனார் பாடசாலை தனது நூற்றாண்டு விழாவை கொண்டாவுள்ளது. இந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவதற்கு முத்திரைகளை வெளியிட வேண்டும். இவ்விதமே அரசாங்கம் முஸ்லிம்களுக்கு உதவி செய்கிறது. இதன் மூலமே அரசாங்கம் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கெளரவ சம்பந்தன் தனது பிரதேசத்திற்கு அடியெடுத்து வைக்கவில்லை. திருகோணமலை மாவட்டத்தில் தென்னமரவாடியே அவரது பிரதேசமாகும். இதுபற்றி அவர் வெட்கப்பட வேண்டும். தேர்தலின் போது நான் அங்கு சென்றிருந்தேன். அப்பகுதி மக்கள் எங்களைப் பார்த்து அழுதார்கள். அவர்களுக்கு மின்சார இணைப்பு இல்லை, அவர்களுக்கு வீடுகளும் இல்லை. எல்.ரி.ரி.ஈ. தாக்குதல்களினால் அவர்களது வீடுகள் சிதைந்து போயுள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கிராமங்களில் இருந்து முல்லைத்தீவு மற்றும் வவுனியா காடுகளுக்கு சென்று அகதிகளாக வாழ்ந்தனர். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவர்கள் எங்களிடம் வந்து சேர், எங்களுக்கு வீதி அமைத்துக் கொடுங்கள், ஆஸ்பத்திரி, மகப்பேற்று நிலையம் ஒன்றை அமைத்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் கெளரவ சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் தெளபீக் ஆதம்பாவாவுடன் தென்மராட்சிக்கு சென்றிருந்தார். இவர் புல்மோட்டை பிரதேச சபையின் உதவி தவிசாளராவார். அங்கு சென்ற கெளரவ புஞ்சிநிலமே அவர்கள் பாடசாலை ஒன்றுக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இவ்விதம் தாம் நாம் தமிழர்களுக்கு உதவி செய்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு உதவவில்லை. கெளரவ சம்பந்தன் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துகையில், நான் அவரை குறுக்கீடு செய்து 24 மணி நேரத்தில் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து முஸ்லிம்களைப் பற்றி கேட்டேன். காத்தான்குடி பள்ளிவாசலில் மிலேச்சத்தனமாக வெட்டிக் கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி கேட்டேன். ஏறாவூரில் மிருகத்தனமாக வெட்டியும், குத்தியும் துண்டுதுண்டாக்கப்பட்ட முஸ்லிம்களைப் பற்றியும் கேட்டேன். அரந்தலாவையில் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்ட பெளத்த பிக்குமார்களைப் பற்றியும் கேட்டேன்.
இவை குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெட்கப்பட வேண்டும். அவர் இங்கே வேட்டி உடுத்திக் கொண்டுதான் பேசினாரோ தெரியவில்லை. சேர், இங்கே முஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். நாங்கள் அதற்கு எதிர்ப்பல்ல. முஸ்லிம்களுடைய உரிமைகளைக் காப்பது எங்களுடைய கடமை. முஸ்லிம்களுடைய உரிமைகள், கலை, கலாசாரம், மத வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றை காப்பதில் முன்னணி வகிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை இச்சபையினூடாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால் நாளைக்கு சில பத்திரிகைகளில் கெளரவ சம்பந்தன் அவர்கள் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை பற்றிச் சபையில் பேசும் போது அஸ்வர் ஹாஜியாரும் காதர் ஹாஜியாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். என்ற ஓர் உண்மையற்ற செய்தி வெளிவரும். ஆகவே, இந்த விடயங்களை சரியாகப் பிரசுரிக்க வேண்டுமென்று அன்புக்குரிய தமிழ் ஊடக சகோதரர்களை விசேடமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இத்தகைய இரட்டைப் பேச்சையும் கபட நாடகத்தையும் பார்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்கள் அவ்வியக்கத்தை மதிக்க மாட்டார்கள். உங்களுடைய நேர்மையை இன்று இழந்துவிட்டீர்கள்.
முஸ்லிம்களுடைய பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்வோம். அதைத்தான் எங்களுடைய அரும்பெரும் தலைவர் ரி.பி.ஜாயா வெள்ளைக்கார ஆட்சியாளர்களைப் பார்த்து இந்நாட்டை விட்டு நீங்கள் வெளியேறுங்கள். நாம் எங்களுக்குள் பிரச்சினைகள் இருந்தால் எங்களுடைய மூத்த சகோதரர்களான சிங்களவர்களுடன் மற்றும் தமிழர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ரி.பி. ஜாயா அன்று தெரிவித்தார். அத்தகைய ஒருமைப்பாட்டு உணர்வுடன் +>(யிr தெரிவித்தார். இவ்விதமே டாக்டர் ரி.பி.ஜாயா எங்களுக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் நான் கெளரவ சம்பந்தன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை விட விரும்புகிறேன். முல்லைத்தீவில் உள்ள முஸ்லிம்களின் காணிகளை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.
“முஸ்லிம்களின் குடியேற்றத்தை வழியுறுத்தி கூட்டமைப்புக்கு எதிராக முல்லையில் ஆர்ப்பாட்டம்” என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக சுடர்ஒளி பத்திரிகையில் செய்தி வெளிவந்திருப்பது மிகவும் பிரமாதம். அதேபோன்று முஸ்லிம்களின் காணியை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.