4/14/2013

| |

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவருட வாழ்த்துச் செய்தி

பிறக்கின்ற விஜய புதுவருடத்தில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புதுவருட வாழ்த்தினை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். பிறக்கின்ற இப்புதுவருடமானது எமது நாட்டிலுள்ள சகல இன மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், புரிந்தணர்வுடனும் வாழ்வதற்கேற்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
கடந்த சில காலங்களில் எமது நாட்டில் இனரீதியிலான சில பாகுபாடுகள், புறக்கணிப்புக்கள் காணப்பட்டன. ஆனால் இன்றைய  நிலையில் இனரீதியான வேற்றுமை கழையப்பட்டு நாம் எல்லாம் இலங்கையர் என்ற ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒற்றுமை இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களிடையேயும் ஆழமாகப் பதியப்படவேண்டும். அப்போதுதான் எமது நாடு எதுவித வன்முறையற்ற பாகுபாடற்ற தேசமாகவும்; அமைதியானதும், அபிவிருத்தியில் முன்னேறியதுமான நாடாக வளர்ந்துசெல்லும்.
கடந்த சில மாதங்களாக சில மதரீதியிலான சிறுசிறு குழப்பங்கள், வன்முறைகள் ஆங்காங்கே இடம்பெற்று வந்ததனை அவதானிக்கமுடிந்தது. ஆனால் இவையெல்லாம் இலங்கையைக் கட்டிக்காக்கும் தலைமைத்துவத்தினால் ஆழமாக உற்றுநோக்கப்பட்டு அவற்றின் தொடர்ச்சி துண்டிக்கப்படவேண்டும். ஏனெனில் அமைதிப்பூங்காவாக உருவெடுத்துவரும் எமது நாட்டில் இத்தகைய சிறு வன்முறைகள் மீளவும் அவற்றை குழப்புவதற்குரிய அடிப்படைக் காரணிகளாக அமைந்துவிடலாம்.
கடந்த வருடங்களில் எமது நாட்டில் வெள்ளம் முதலிய இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்கள் அதிகமாகவே காணப்பட்டன. இந்த பிறக்கின்ற புதுவருடத்திலாவது, இத்தகைய அனர்த்தங்களால் எமது நாடு, எமது மாவட்ட மக்கள் பாதிக்காமல் இருக்க வழிவகுக்கவேண்டும்.
எமது நாட்டின்  மக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையானதும், சகோதரத்துவத்துடனுமான சமூகமாகவும் வாழவும், எமது நாட்டினதும், எமது கிழக்கு மாகாணத்தினதும் கல்வி, பொருளாதார நிலை மேன்மையடையவும், இந்த பிறக்கின்ற புதுவருடம் நல்வழிசமைத்திட வேண்டும் என்று கூறி, புதுவருடத்தினை கொண்டாடுகின்ற அனைத்து உறவுகளுக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் கூறிவிடைபெறுகின்றேன்.
சிவனேசதுரை சந்திரகாந்தன்
;(தலைவர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி -
முன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும்)