4/12/2013

| |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வெருகல் நினைவு தின பேருரை.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இவ்வெருகல் ஆற்றங்கரையோரம் நிகழ்த்தப்பட்ட மிகப்பாரிய சகோதரப் படுகொலையை நினைவு கூருவதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை வலியுறுத்தியும், மேலாதிக்கத்திற்கு தொடர்ந்தும் கட்டுப்படமுடியாது எனவும் கூறி இம்மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்று கொண்ட எம் போராளிகளை மிக மூர்க்கமான தாக்குதலுக்கு ஆணையிடப்பட்டு, அதனால் நயவஞ்சகமாக எமது ஆண், பெண் போராளிகள் 160 பேர் இவ் வெருகல் ஆற்றங்கரையோரத்தில் விதைக்கப்பட்டனர்.
                      
பாசிசவாதமும், மேலாதிக்கமும் இணைந்து கிழக்கு மண் மீது நிகழ்த்திய அப்படையெடுப்பு, மேலாதிக்கத்தின் மாற்றான் தாய் மனப்பாங்கையும், பாசிசத்தின் கொடூர முகத்தையும் மீண்டுமொருமுறை உலகிற்கு பறை சாற்றியது.
2004ம் ஆண்டு இதே தினத்தில் கொல்லப்பட்ட எம் 160 வீர மறவர்களும் , அவர்களின் இலட்சியத்தை சுமந்து கிழக்கு மண்ணின் விடுதலைக்காகவும், அதன் தனித்துவத்திற்காகவும், பாசிசவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக போராடி உயிர் நீத்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த 260 வீர மறவர்களும், இம்மண்ணின் தனித்துவத்திற்குமாய், தலைமைத்துவத்திற்குமாய் குரல் கொடுத்த ராஜன் சத்தியமூர்த்தி, கிங்சிலி இராசநாயகம் போன்றவர்களும், புத்தி ஜீவிகள், சமூக நலன் விரும்பிகள், பொது மக்கள் என சுமார் 600 பேர் தம்முயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
இவர்களின் இத்தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாமல் தொடர்ந்தும் பேணி பாதுகாக்கும் உயரிய பொறுப்பை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் அதன் தொண்டர்களும் நிறைவேற்றுவார்கள் என நான் உறுதி கூறுகின்றேன். எம் மீதும் எம் மக்கள் மீதும் சகோதர படுகொலையும் படையெடுப்பும் நிகழ்த்தப்பட்டபோது எமக்காகவோ, எமது ஜனநாயக இயக்கங்களுக்காகவோ யாரும் குரல் கொடுக்கவில்லை.
எம் மீதான சகோதர படுகொலைகளை தடுத்து நிறுத்தவோ, கிழக்கு மாகாண தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளவோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டும் எவரும் முன்வரவில்லை. குறைந்தபட்சம் பாசிசம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இக்காலப்பகுதியிலாவது பாசிசம் எம் மீது நிகழ்த்திய கொடூரங்களை தண்டிக்க எக் கட்சிகளும் தலைவர்களும் முன்வராமை ஒரு இறுக்கமான மனப்பதிவையே காட்டுகின்றது. இருந்தபோதும் எத் தடைகள் வந்தாலும், எச் சவால்கள் வந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கிழக்கு மாகாண தனித்துவத்திற்கும் தலைமையை காப்பதிலும் தொடர்ந்தும் அற்பணிப்புடன் செயற்படும். அத்துடன் தியாகம் நிறைந்த உன்னதமான இந்நாளில் நாம் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்தி உரியவர்கள் அதனை செயற்படுத்த வேண்டுகின்றோம்.
 தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான தேவைப்பாடு, யுத்தத்திற்கு பின்னரான ஜனநாயக, மனித உரிமை செயற்பாடுகளிலும் எம் மக்களின் முழுமையான எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்கின்ற நியாயமான ஆதங்கம் எமக்கும் மக்களுக்கும் இருக்கின்றபோதிலும் இதில் அரசாங்கம் கணிசமான தூரம் பயணித்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. விரைவில் எம்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அதிகார பகிர்விலும், ஜனநாயக, மனித உரிமை மேம்பாட்டிலும் பூரணமான நம்பிக்கையை எம்மக்களிடம் ஏற்படுத்துவதில் இவ் அரசாங்கம் வெற்றிபெறும் என்று நாம் நம்புகின்றோம். இது மக்களின் அரசாங்கம் ஒன்றின் கடமை என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம்.
*  வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இன்றைய சூழலில் எம் மக்களின் அபிலாசைகளும் பிரச்சினைகளும் தேசிய எல்லைகளை கடந்து சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது, பிராந்திய அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் சர்வதேச அரங்குகளில் விவாதிக்கப்படுகின்ற முக்கிய விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. ஒற்றை மைய உலக ஒழுங்கில் எமது பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டிருப்பது மேலாதிக்கவாதிகளுக்கும், பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் களமமைத்து கொடுக்கலாம் என்ற ஐயம் நிலவுகின்ற போதிலும் நாம் இன்னும் வலுமிக்க உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக எமது மக்களின் அரசியல், அதிகார அபிலாசைகளை தீர்ப்பதற்கான காலம் கைநழுவிச் செல்லவில்லை என்று உறுதியாக நம்புகின்றோம்.
*    கடந்த கால அரசியல், ஆயுத போராட்டங்களின் சில தவறுகளும், பேரினவாத அரச செயற்பாடுகளும்;, உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக எமது மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்களை நழுவச் செய்திருந்தன. ஆனால் ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன்றைய சூழலில் எம் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அதிகாரத்திற்கான தேவைப்பாடுகளையும் இதய சுத்தியுடன் வழங்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் அவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது எம் மக்கள் சார்பான முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் கட்சிகளும் தமக்குள்ளான பாரபட்சம், வேறுபாடுகளை கடந்து மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகள் எனும் இலக்கிலாவது ஒரே கருத்தில் செயற்படுவதும் அம்முயற்சிகளுக்கு ஆதரவு தருவதும் அவசியமாகும்.
*    சமீப காலமாக எமது நாட்டில் இடம்பெறுகின்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் சவால் விடுகின்ற, அவற்றுக்கு அச்சுறுத்தலாக வளர்கின்ற அனைத்துவித செயற்பாடுகளையும், அமைப்புகளையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். கடந்த பல தசாப்தங்களுக்கு மேலாக இன ரீதியான வன்மத்தினால் பாதிக்கப்பட் மக்களின் பொறுப்புமிக்க பிரதிநிதிகள் என்ற வகையில் கடந்தகால கரும்பக்கங்கள் எந்த ரூபத்திலும் எந்த சமுகத்தின் மீதும் பிரயோகிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. குறுகிய அரசியல் சித்தாந்தங்களும் மதவாத சிந்தனைகளும் எமது நாட்டின் எழுச்சியினையும் ஒருமைப்பாட்டையும், வளர்ச்சினையும் சிதைத்துவிடும.; அத்துடன் மேலாதிக்கவாதிகளுக்கும், நவீன காலணித்துவவாதிகளுக்கும் இது வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே பொறுப்புமிக்க எம் ஆட்சியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன நல்லிணக்கத்திற்கும் சவாலான எவ் விடயத்தையும் அனுமதிக்கக்கூடாது என எமது கட்சி இந்த தியாகம் நிறைந்த எம் மறவர்களை நினைவுகூரும் இந்நாளில் வேண்டிநிற்கின்றது.
*   இயற்கை விதிகளின்படியும், நவீனத்துவ கோட்பாடுகளின்படியும் இவ் உலகமும், இதன் செயற்பாடுகளும் அமைகின்றன. இங்கு ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை, உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை, நிற, இன, மத, மொழி பேதங்கள் அற்ற நாகரீக உலகத்தில் வாழ்கின்றோம். எம் சந்ததிகளுக்கு மற்றவர்களின் உரிமையையும், அபிலாசைகளையும் மதித்து நடக்க வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டும். சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அதிகாரத்திற்கான தேவைப்பாடுகளையும் உணர்கின்ற, அவற்றை ஏற்றுக்கொண்டு முழு மனதுடன் வழங்கக்கூடிய தலைமைகள்தான இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்கு சிறந்த வழிகாட்டிகளாக, ஆசான்களாக வரலாற்றில் நிலைத்திருக்க முடியும். அவ்வகையில் ஆறு தசாப்த காலமாக தமது அரசியல் அபிலாசைகளுக்காக போராடி வந்திருக்கின்ற ஒரு சமுகத்தின் அரசியல் ஏக்கங்களை புரிந்துகொண்டு வன்முறையற்ற சுபீற்சமான ஒரு தேசத்தை கட்டியெழுப்ப அம்மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பு கொடுத்து அதன் நியாயத்தன்மைகளை ஏற்றுக்கொண்டு செயற்படுவது பண்புமிக்க தலைவர்களின் கடமையாகும், பல் சமுக கட்டமைப்புக்களையும் கலாச்சாரத்தையும் கொண்ட இத்தேசத்தின் பிற சமுகங்களின் உரிமைகளை மதிப்பது விட்டுக்கொடுப்பும் எம் தேசத்தை பெருமையடையச் செய்யும் அதனை நோக்கியே எமது நாட்டின் தலைமை செயற்பட வேண்டும் என வேண்டுகின்றோம்.