4/30/2013

| |

அரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பணம்

முஸ்லிம் இயக்க பிரதிநிதிகளையும் சமூக ஆர்வலர்களையும் கொண்ட அரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் உலமாக்கள், முஸ்லிம் இயக்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
எழுபத்தைந்துக்கும் அதிகமான முக்கியஸ்தர்களைக் கொண்ட இந்தச் சபை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான குறுகிய கால இடைக்கால, நீண்டகால திட்டங்களை வகுத்து செயல்பட உள்ளதோடு நாட்டில் சமாதான, சகவாழ்வுக்காகவும் பாடுபடும்.
முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன் இக்கூட்டத்தில் உரையாற்றும் போது, தற்போது முஸ்லிம் கள் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, எமது தனித் துவத்தைப் பாதுகாத்துக்கொண்டு, ஏனைய சமூகங்களுடன் இணைந்து நாமும் இலங்கையர் என்ற அடையாளத்தைப் பதிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா என்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இயக்கங்களை உள்ளடக்கிய ஒரு சங்க மாகும். கடந்த காலங்களில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல சவால்களுக்கு முகம் கொடுத்து, நிரந்தர தீர்வை பெறுவதற்காக அரசியல் உயர் மட்டங்களுடனும், மத தலைவர்களுடனும் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இனங்களுக்கு மத்தியில் சுமுக உறவினை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருவது அறிந்ததே என்றார்.