4/11/2013

| |

மாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்க வேண்டும்: கோட்டா உத்தரவு

இலங்கையில் இனி பாதுகாப்பு படையினர் காணிகளை கையகப்படுத்தும் போது அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கட்டளையிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் புல்மோடைப் பகுதியில் முஸ்லிம் மக்களின் காணிகளை கையகப்டுத்தியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி, மாகாண சபையிலும் விவாதத்துக்கு வந்தது.
இதையடுத்து மாகாண சபையின் முதலமைச்சர், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ரமலான் முகமது அன்வர் உட்பட பலர், புதன்கிழமை மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் ஃபைசர் முஸ்தஃபா அவர்களுடன் பாதுகாப்புச் செயலரை சந்தித்து பேசியுள்ளனர்.இதன் போதே பாதுகாப்பு படையினர் முதலமைச்சரின் முடிவுகளை ஒட்டியே காணிகளை கையகப்படுத்த வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக நஜீப் ஏ மஜீத் கூறுகிறார்.
இவ்வகையில் அண்மையில் புல்மோட்டை பகுதியில் கடற்படையினர் கையப்படுத்திய உரிமம் பெறப்பட்ட காணிகளை அவர்களிடம் மீண்டும் வழங்குமாறும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்ததாகவும் மாகாண முதல்வர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு காணி தொடர்பான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை தான் ஆதரிப்பதாகக் கூறும் நஜீப் ஏ மஜித் அவர்கள், அண்மையில் பதுளையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.